மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாற்றுத்திறன் மாணவர்களுக்கு மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான ஒன்றிய அளவிலான குழு கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம் வட்டார வளமை யத்தில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் வட்டார கல்வி அலுவலர் வெங்கடேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.
ஒருங்கிணைப்பு கூட்டத்தில் செப்டெம்பர் , அக்டோபர் நவம்பர் மாதங்களில் நடந்து முடிந்த பணிகள் சார்ந்து விவாதிக்கப்பட்டது. மருத்துவ மதிப்பீட்டு முகாமில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு அடையாள அட்டை பெற்று தரப்பட்டது. மேலும் அடையாள அட்டை தேவையுள்ள குழந்தைகளை தொடர்ந்து கண்காணித்தல், பள்ளி அளவில் மாற்று திறன் கொண்ட குழந்தைகளுக்கான எண்ணும் எழுத்தும் புத்தகங்கள் பயன்பாடு.
உறுதிமொழி ஏற்றல், சைகை மொழி அறிதல், வேற்றுமையை ஒழிப்போம் சார்ந்த உறுதிமொழி அனைத்து பள்ளிகளிலும் எடுக்கப்படுவதை உறுதி செய்தல் சைகை மொழி போஸ்டர் அனைத்து பள்ளிகளிலும் வகுப்பறையில் ஒட்டுதல், அறிவுசார் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கான மதிப்பீடு செய்தல் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு மாவட்ட அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஆசிரியர் பயிற்றுநர் சங்கிலி முத்து, சுரேஷ் குமார், பாரதிதாசன், ராஜேஸ்வரி, நந்தினி, இல்லம் தேடி கல்வி மைய ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா, இயன்முறை மருத்துவர் சரண்யா, சிறப்பாசிரியர்கள் அறிவழகன், ராதா ,பிரியா, லீலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு பிரகாஷ் வரவேற்றார்.சிறப்பாசிரியர் அறிவழகன் நன்றி கூறினார்.