புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே அரசம்பட்டி சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் நாட்டின் 75 ஆவது குடியரசு தினவிழா கொண்டாட்டம் நடைபெற்றது.
கல்லூரி தாளாளர் முனைவர் பி.மணிகண்டன் விழாவுக்கு தலைமை வகித்து, தேசியக் கொடியேற்றி வைத்து குடியரசு தினம் குறித்து பேசியதாவது:
இந்தியாவுக்காக உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது. 1947 ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்றது. முன்னதாக இந்தியாவுக்கான அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்க குழு அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. 2 ஆண்டு, 11 மாதம் 18 நாட்களில் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டு 1950 ஜனவரி 26 -ஆம் தேதி நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த நாளையே ஆண்டுதோறும் இந்திய குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது
குடியரசு தினம், ஒவ்வொரு இந்தியரின் இதயத்திலும் பொறிக்கப்பட்ட ஒரு வரலாற்றுத் தேதியாகும். இந்த குறிப்பிடத்தக்க நாள் இந்திய அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டதன் நினைவைக் குறிக்கிறது.இது தேசத்தை அரசியலமைப்பு முடியாட்சியிலிருந்து இறையாண்மை கொண்ட குடியரசாக மாற்றிய நாளாகும்.
டாக்டர் ராஜேந்திர பிரசாத், இந்தியாவின் முதல் ஜனாதிபதியாக பதவியேற்றது, குடியரசு தினத்தின் முக்கியத்துவத்திற்கு ஒரு அழியாத அத்தியாயத்தை சேர்த்தது. அன்றைய நிகழ்வுகள் இந்தியக் குடியரசின் பிறப்பைக் குறிப்பது மட்டுமல்லாமல், ஜனநாயகக் கோட்பாடுகள் மற்றும் விழுமியங்களுக்கான தேசத்தின் ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்துகிறது என்றார் அவர்.
இவ்விழாவில் கல்லூரி செயலாளர் மு.விஸ்வநாதன், கல்லூரி முதல்வர் முனைவர் குழ.முத்துராமு ஆகியோர் மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள், அலுவலர்களுக்கு குடியரசு தின வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் அனைத்து துறைத்தலைவர்கள், பேராசியர்கள், அலுவலகப் பணியாளர்கள். மாணவ,மாணவியர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.