புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பெரிச்சி வண்ணியம் பட்டியில் சார்லஸ் டார்வின் பிறந்த தினம் கடைபிடிக்கப் பட்டது.
இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் ஜார்ஜ் வில்லியம் தலைமை வகித்தார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ்நாடு அறிவியல் இயக்க துளிர் திறனறிவு தேர்வு இணை ஒருங்கிணைப்பாளரும் கந்தர்வகோட்டை தமிழ்நாடு அறிவியல் இயக்க வட்டார செயலாளர் ரகமதுல்லா சார்லஸ் டார்வின் பிறந்த தினம் குறித்து பேசியதாவது:
சார்லஸ் ராபர்ட் டார்வின் (1809_1882) ஒரு ஆங்கில இயற்கை விஞ்ஞானி. கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்திப் படித்தவர். உயிரின உலகின் பரிணாம வளர்ச்சி பற்றி அதன் வரலாற்று ரீதியான வளர்ச்சி பற்றிய தத்துவத்தைக் கண்டு பிடித்தார்.
இன்றைய உயிரியல் கண்டுபிடிப்புகளுக்கான அடிப்படைத் தத்துவமே டார்வினியமாகும். பரிணாம வளர்ச்சி பற்றிய தனது ஆய்வுகளை உண்மை ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு நிரூபித்தார். இதற்கென அவர் 1831 முதல் 1836 வரை உலகின் பல பகுதிகளிலுள்ள தீவுகளுக்குச் சென்று ஆய்வுக ளை மேற்கொண்டார்.
உயிரினங்களின் தோற்றம் நூலில் இயற்கைத் தேர்வு, வாழ்க்கைப் போராட்டத்தில் மாறியவை, அழிந்தவை, நின்று நிலைத்தவை குறித்தும், அதனால் ஏற்பட்ட உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி குறித்தும் தனது அபூர்வக் கண்டு பிடிப்புகளை டார்வின் எழுதியுள்ளார்.
மேலும் பரிணாம வளர்ச்சித் தத்துவத்தின் அடிப்படையான பிரச்சனைகளையும் எடுத்துக் கூறியுள்ளார். விலங்குகளைப் பழக்கிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த விதம் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
விலங்கினங்களின் பரம்பரைத் தேர்வு, மிருக இனமாக மனிதக் குரங்குகளிலிருந்து மனித இனம் தோன்றிய விதம் பற்றியும் விஞ்ஞானப் பூர்வமாகப் பரிணாம வளர்ச்சி மூலம் எவ்வாறு மாற்றங்கள் நிகழ்ந்தன என்பது பற்றியும் குறிப்பிட் டுள்ளார் என்று பேசினார்.
மேலும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தக்கூடிய துளிர் திறனறிவுத் தேர்வில் 4&5 வகுப்பு மாணவர்கள் கலந்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.