Close
நவம்பர் 22, 2024 10:08 காலை

வாழ்க்கைக்கு வழிகாட்ட ஒரு கதை..! படிங்க..!

வாழ்க்கையில் வெற்றி பெற்ற மனிதர்களின் வரலாறுகளை புரட்டிப்பார்த்தால் வெற்றிக்கு முதல் மூலதனமாக இருந்தது அவர்களுடைய தன்னம்பிக்கைதான் என்பது தெரிய வரும்.

தன்னம்பிக்கை என்பது முதலில் உங்கள் மீது வைக்கும் நம்பிக்கை. உங்களுடைய செயல்களின் மீது வைக்கும் நம்பிக்கையே தன்னம்பிக்கை ஆகும். எந்த ஒரு செயலிலும் தன்னம்பிக்கை உள்ள மனிதன் எளிமையாக வெற்றி பெறுவான்.

தன்னம்பிக்கை அற்று பேசுபவர்கள் தோற்றுபோய்க்கொண்டே இருப்பார்கள். வாழ்க்கையிலோ அல்லது எந்த ஒரு காரியத்தையோ தொடங்குவதற்கு முன்பு இது சரியாக வராது என்று எண்ணினால் எப்போதுமே நம்மால் வெற்றி இலக்கினை அடைய முடியாது. நாம் சாதிக்க முடியும் என்று மனதில் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்டால் நிச்சயமாக நாம் எடுத்த காரியத்தில் சுலபமாக வெற்றியை அடைந்து விடலாம்.

மற்றவர்களுடன் உங்களை ஒப்பிடுவதை தவிர்க்கவும்:

வாழ்க்கையில் எப்போதும் அடுத்தவர்கள் இப்படி இருக்கிறார்கள், இவர்கள் இப்படி இருக்கிறார்கள் என்று ஒப்பிடுவதை முதலில் தவிர்த்துக்கொள்ள வேண்டும். அடுத்தவர்கள் வாழ்க்கையை பற்றி நாம் நினைப்பதால் நாம் நம்முடைய வாழ்க்கையில் ஒருபோதும் வளர்ச்சி நிலையை அடைய முடியாது என்பதை ஒருபோதும் மறந்து விடாதீர்கள். மற்றவர்கள் வாழ்க்கையை நாம் நினைத்தால் நாம் நமது வாழ்க்கையை தொலைத்துக்கொண்டிருக்கிறோம் என்பது பொருளாகும்.

நம்பிக்கை மட்டுமே வாழ்க்கையை உயர்த்தும் என்பதற்கு ஒரு கதை சொல்கிறேன். கேளுங்கள்.

முகிலன் என்ற மாணவன் பூஞ்சோலைப்பட்டி என்ற குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன். அவனது தாய் தந்தை படிக்காதவர்கள். அவனது மூத்த சகோதரன் ஒருவர் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் கீழ்நிலை பணியாளராக வேலை செய்து வந்தார். அது கார்ப்பரேட் நிறுவனம் என்பதால் நல்ல சலுகைகள் மற்றும் நல்ல சம்பளம் கிடைத்தது.

முகிலன் அந்த குக்கிராமத்தின் அருகில் இருக்கும் கடவூர் என்ற ஊரில் இருக்கும் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பை முடித்தான். எல்லாமே குறைந்த மதிப்பெண். ஆனால் தேர்ச்சி அடைந்துவிட்டான். அவனது மூத்த சகோதரன் இவனிடம் எந்த ஆலோசனையும் கேட்காமல் பி.இ. படிப்பதற்கு சென்னையில் ஒரு தனியார் கல்லூரியில் சேர்த்துவிட்டார்.

ஒரு வாரம் கல்லூரிக்குச் சென்றவன் அவனது சகோதரனிடம் கூறாமல் வீட்டுக்கு ஓடி வந்துவிட்டான். அவனது பெற்றோர் உடனே மூத்த மகனிடம் தொலைபேசிமூலம் தகவல் கொடுத்தனர்.

அடுத்தநாள் காலை அவர் ஊருக்கு வந்துவிட்டார். அவர்கள் முகிலனை அழைத்துக்கொண்டு என்னிடம் வந்தார்கள்.
‘சார், நீங்கள்தான் இவனுக்கு புத்தி சொல்லணும். எவ்ளோ பசங்க படிக்க வசதி இல்லாம கஷ்டப்படறாங்க. இவன் கம்மி மார்க் எடுத்தாலும் பணத்தைக்கட்டி பி.இ மெக்கானிக்கல் சேர்த்து விட்டுட்டேன், சார். தரவே முடியாதுன்னு சொன்னாங்க. கூடுதலா பணம் கட்டி சேர்த்து விட்டேன் சார். அவன் படிக்கணும் சார்.” என்று அவனை மட்டும் விட்டு விட்டு அவர்கள் போய்விட்டார்கள்.

முகிலினின் ஆசிரியர் நான். தோளில் கைபோட்டு நட்புடன் பேசினேன்.

சார், அங்க எல்லாமே இங்கிலீஷிலே நடத்துறாங்க. எனக்கு ஒண்ணுமே புரியலை. நான் பேந்த பேந்த உட்கார்ந்து இருக்கேன். என்னால் முடியலை சார். பேசாம என்னை டிப்ளமோ சேர்த்து விடச் சொல்லுங்க சார்’ என்றான்.

அரசு பள்ளி மாணவர்கள் (கோப்பு படம்)

அவன் கூறுவதிலும் தவறில்லை. அவன் படித்தது கிராமத்து பள்ளிக்கூடம். ஆங்கிலம் வெறும் பாட அளவில் மட்டுமே இருக்கும்.

மேலும் இப்படியான கல்வி நிலையை மாற்றவேண்டும் என்பது எனது எண்ணம். காசு இருப்பவனுக்கு ஒரு கல்விமுறை. காசு இல்லாதவனுக்கு ஒரு கல்வி முறை. என்னங்க இது நியாயம்? ரொம்ப காசு இருந்தால் ISC, அதைவிட கொஞ்சம் காசு இருந்தால் CBSE, அதுக்கும் கொஞ்சம் குறைவான காசு இருந்தால் மெட்ரிக், காசே இல்லைன்னா அரசு பள்ளிக்கூடம்.

இந்த கல்வி நிலை சரியா? ஏழை பணக்காரன் என்கிற வித்தியாசம் இல்லாமல் அனைவருக்கும் சமமான கல்வி கொடுத்துவிட்டு அனைவருக்கும் வேலை வாய்ப்பிலும் சம வாய்ப்பை ஏற்படுத்தவேண்டும்.

அப்படி இருக்கும்போது நம்ம முகிலன் மாதிரி எவ்ளோ பேரு இருப்பாங்க? சரி நான் ஒரு முடிவுக்கு வரணும். முகிலனை படிக்க வைக்கவேண்டிய பொறுப்பு என் கையில் இருக்கு.

அடுத்தநாள் அவனே வீட்டில் சொல்லிவிட்டு கல்லூரிக்கு கிளம்பிவிட்டான். இப்போது பி.இ முடித்துவிட்டு ஒரு நிறுவனத்தில் நல்ல வேலையில் இருக்கிறான். திருமணமும் செய்துவிட்டான். மகிழ்ச்சியான வாழ்க்கை. ஊருக்கு வரும்போது என்னை வந்து பார்க்காமல் போக மாட்டான்.

அப்படி என்னதான் நான் செய்தேன்? என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

சின்ன டெஸ்ட் கொடுத்தேன். அவ்ளோதான். நான்கு பொருள்களை எடுத்து வைத்தேன். ஒன்று ஒரு சிறிய குடம் தண்ணீர், அடுத்தது, பெரிய குடம் தண்ணீர், அதற்கு அடுத்து ஒரு ஆட்டுரலின் குழவிக்கல், அப்புறம் பெரிய அம்மி.

இதை ஒவ்வொன்றாக தூக்கு என்றேன். சிறிய குடத்தை எளிதாக தூக்கினான். பெரிய குடத்தை கொஞ்சம் சிரமத்துடன் தூக்கினான். ஆட்டுரலின் குழவிக்கல்லை கொஞ்சம் மூச்சைப் பிடித்து தூக்கினான். கடைசியாக பெரிய அம்மிக்கல்லை இரண்டு மூன்று முறை முயற்சி செய்து தூக்கிவிட்டான்.

நான் கையைத் தட்டி அவனை பாராட்டினேன். எப்படி உன்னால் இந்த அம்மியை தூக்க முடிந்தது என்றேன். தூக்கிவிட முடியும் என்ற நம்பிக்கைதான் சார் என்றான், சாதாரணமாக.

இதுதான் முகிலா பாயிண்ட். உன்னால் முடியும் என்று நினைத்தால் எதுவும் முடியும். ஒரு மாதம் கல்லூரிக்குப் போ. உனக்கு எல்லாமே தெளிவாகும். புதிய இடம், புதிய மனிதர்கள், கிராமத்தில் இருந்து போகிறோம் என்ற உனது தாழ்வு மனப்பான்மை போன்றவைதான் உன் எதிரிகள். அவைகளைத்தூக்கி எறி. முடியும் என்று படி. முதலில் உன்னை நம்பு. உன்னை நம்பியதால்தான் இந்த பெரிய அம்மியை தூக்க முடிந்தது என்றேன்.

கொஞ்சம் தெளிவானது போலவும், தீராத குழப்ப மன நிலையில் இருப்பதுபோலவும் இருந்தான். ஆனால், கல்லூரிக்கு அடுத்த நாளே சென்றுவிட்டான். மூன்று மாதங்கள் கழித்து அவனே எனக்கு போன் செய்து, ‘சார். இப்போ நல்லாவே படிக்கிறேன் சார். எனது வாழ்க்கையை வீணாக்க இருந்தேன் சார். நல்ல வழி காட்டிவிட்டீர்கள். நன்றி சார்’ என்றான்.

இப்போ புரியுதா? முதலில் உங்களை நம்புங்கள். சாதிக்கலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top