புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியும், தாரா மருத்துவமனையும் இணைந்து நடத்திய மாணவர்களுக்கான மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது.
ஒவ்வொரு மாணவரையும் பரிசோதித்து அவர்கள் என்ன மாதிரி உணவு உட்கொள்ள வேண்டும், உடல் நலத்தை எப்படி பாதுகாக்க வேண்டும் , வைட்டமின்கள் அதிகம் உள்ள உணவுகள் என்னென்ன, மன ரீதியாக எப்படி உறுதியாக வாழ வேண்டும் என்பன போன்ற வாழ்க்கைக்குத் தேவையான பல நல்ல ஆலோசனைகளை மாணவர்களுக்கு மருத்துவர்கள் வழங்கிய விதம் உண்மையில் நெகிழ வைத்தது.
தாரா மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் பி. தனசேகரன், டாக்டர் கிஷோர், டாக்டர் சசிரேகா, டாக்டர் ரேஷ்மா ஆகிய மருத்துவர்கள் கொண்ட குழு பள்ளி மாணவர்களையும், ஆசிரியர்களையும், பெற்றோர்களையும் ,ஆசிரியர் அல்லாத பணியாளர்களையும் பரிசோதித்து பல சிறந்த ஆலோசனைகளை வழங்கினார்கள்.
மாணவர்களின் உயரம் ,எடை, ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு போன்றவற்றை கவனமாக பார்த்து குறித்து கண்காணிக்கும் சிறந்த பணிகளை 20 செவிலியர்கள் கொண்ட குழு செய்தார்கள்.காலை 9:30 தொடங்கிய மருத்துவ முகாம் மாலை 6.30 வரை நடைபெற்ற முகாமில் மருத்துவர்கள் வெறும் பத்து நிமிட உணவு இடைவேளைக்கு பிறகு 6:30 வரை மிகப் பொறுமையாக அமர்ந்திருந்து ஒவ்வொரு மாணவரிடத்திலும் மிக அன்பாக பேசி அவர்களை பரிசோதித்தனர்.
இது குறித்து பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம்மூர்த்தி கூறியது:
மருத்துவர்களின் சேவை மனப்பான்மையை அறிந்து உருகிப் போனேன். மிகச் சில பெற்றோர்களை தவிர, பல பெற்றோர்கள் மாணவர்களின் உடல் நலத்திலும் உணவு பழக்கத்திலும் அக்கறை காட்டாதது எனக்கு வருத்தத்தை அளித்தது.
பெரும்பான்மை மாணவர்கள் காய்கறிகள் ,பழங்கள், நட்ஸ் சாப்பிடுவது இல்லை. இதன் பாதிப்பு இந்த பிள்ளைகளின் எதிர்கால உடல்நிலையில்
மோசமான விளைவை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் என்னிடத்தில் கருத்து தெரிவித்த போது நான் மிகவும் வருத்தப்பட்டேன்.இந்த விழிப்புணர்பை பெற்றோர்களிடத்தில் எப்படி ஏற்படுத்துவது என்பதுதான் எனக்கு சவாலாக உள்ளது.ஆரோக்கியமான உணவே அறிவுக்குஅடித்தளம் என்பதை மாணவச்செல்வங்களும் குறிப்பாக பெற்றோர்களும் உணர வேண்டும் என்றார்.