Close
நவம்பர் 14, 2024 8:52 மணி

துளிர் திறனறி தேர்வில் 2000 குழந்தைகளை பங்கேற்க செய்வதென அறிவியல் இயக்கம் தீர்மானம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் நடைபெற்ற தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயற்குழுக்கூட்டத்தில் பங்கேற்றோர்

தமிழ்நாடு அறிவியல் இயக்க புதுக்கோட்டை மாவட்ட செயற்குழு கூட்டத்தில், ஆண்டுதோறும் அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் விதத்தில் நடத்தப்படும் துளிர் திறன்றிதல் தேர்வில் இரண்டாயிரம் குழந்தைகளை பங்கேற்க செய்வது என தீர்மானிக்கப்பட்டது.

தமிழ்நாடு அறிவியல் இயக்க புதுக்கோட்டை மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று மாவட்ட தலைவர் முத்துக்குமார் தலைமையில் அறிவியல் இயக்க கூட்ட அரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், அறிவியல் மனப்பான்மையை மாணவர்களிடம் வளர்க்கும் விதமாக நடைபெறும் அறிவியல் விழிப்புணர்வு துளிர் திறனறிதல் தேர்வில் 2000 மாணவர்களை பங்கேற்க செய்வது என முடிவெடுக்கப்பட்டது.

அதேபோல தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் கணித அறிவியல் நிறுவனமும், சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் விதத்தில் நடத்தும், நீடித்த பாதுகாப்பான நீர் மேலாண்மை எனும் மைய கருப்பொருளின் கீழ், நீர் சூழலும் பாதுகாப்பும், நீர் சார்ந்த பொது சுகாதாரமும் மருத்துவமும், நீரினால் பரவும் நோய்கள், நீர் அனைவருக்குமானது, நீர் பாதுகாப்பில் பாரம்பரிய நவீன தொழில்நுட்ப யுத்திகள் எனும் ஐந்து உப தலைப்புகளின் கீழ் 6 முதல் 12 -ஆம் வகுப்பு வரை படிக்கக்கூடிய குழந்தைகள் வழிகாட்டி ஆசிரியர்களின் உதவியோடு மூன்று மாதத்தில் செய்யும் ஆய்வுக் கட்டுரைகளை டிசம்பர் மாதம் இறுதியில் நடைபெறும் மாவட்ட அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் 500 ஆய்வுக் கட்டுரைகளை  சமர்பிக்க  செய்வது,

இம்மாநாட்டில் பங்கு பெற்று வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான குழந்தை விஞ்ஞானிகள் என்ற விருது வழங்குவது.  கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் பங்குபெறும் எப்போதும் அறிவியல் எல்லாவற்றிலும் அறிவியல் எனும் தலைப்பில் ஆய்வு கட்டுரைகளை செய்து ஜனவரி மாதம் மாவட்ட அளவில் நடைபெறும் இளையோர் அறிவியல் மாநாட்டில் இருநூறு குழுக்களை பங்கேற்க செய்வது. தொடக்க நிலை மாணவர்கள் முதல் மேல்நிலை மாணவர்கள் வரை கலந்து கொள்ளும் துளிர் வினாடி வினா போட்டியை விரைவில் நடத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

மாவட்ட செயலாளர் வீரமுத்து வேலை அறிக்கையை சமர்ப்பித்து பேசினார். அறிவியல் இயக்க மாநில பொதுக்குழு உறுப்பினர் மணவாளன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பிரபாகரன், முதுநிலை விஞ்ஞானி ஆர். ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு அறிவியல் பரப்பும் பணியில் தொடர்ச்சியாக மக்கள் அறிவியல் இயக்கம் செய்ய வேண்டிய மக்கள் பணிகள் குறித்து பேசினர். மாநில செயற்குழுவில் எடுத்த முடிவுகள், அடுத்த கட்ட பணிகள் குறித்து மாநில செயலாளர் ஸ்டீபன்நாதன் விளக்கிப் பேசினார்.
இதில் மாவட்ட இணைச் செயலாளர்கள் சாமியப்பன், ஜெரினா பேகம், துணைத் தலைவர்கள் பிச்சைமுத்து, வடிவேலு, ஒன்றிய செயலாளர்கள் ரஹமதுல்லா, ராசு, மதியழகன் ஒன்றிய தலைவர்கள் விஜயலட்சுமி, சுப்பிரமணியன், செயற்குழு உறுப்பினர்கள் சிவானந்தம், அனாமிகா, பிரியங்கா, பிரகதாம்பாள், சுகன்யா, ரஞ்சனி, ஆனந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக,  மாவட்ட இணை செயலாளர் சோபா வரவேற்றார்.நிறைவாக மாவட்ட இணை செயலாளர் ஓவியா அனைவருக்கும் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top