Close
நவம்பர் 21, 2024 6:23 காலை

ஒரு ஆசிரியை தாயாகிறார்..! இப்படியும் ஒரு மாணவன்..!

ஆசிரியை- கோப்பு படம்

இந்தக் கதையை படிக்கும்போது கலங்கத்தான் செய்கிறது எனது விழிகள். அதனால் இதை உங்களுக்கும் நான் சொல்கிறேன். நீங்களும் படீங்க.

ஒரு ஆசிரியை தாயாகிறார்..!

‘Love you all!’ என்று கூறியபடியே வார இறுதி விடுமுறைக்கு பின்னர் திங்கட்கிழமை அன்று காலை வகுப்பினுள் நுழைகிறார், ஆசிரியை சுமதி. அவருக்கு எப்போதுமே ஒரு வழக்கம் இருந்தது. வகுப்பறைக்குள் நுழைந்ததுமே மாணவர்களைப் பார்த்து ‘Love you all’ என்று சொல்வது தான்.

‘Love you all’ என்று சொல்வது பொய்யென்று அவருக்கே தெரியும். ஆனாலும் சொல்கிறார். ஏன் அப்படி ஒரு சிந்தனை? ஏனெனில் அந்த வகுப்பிலுள்ள ஒரேயொரு மாணவனை மட்டும் அவரால் நேசிக்க முடியவில்லை. அதனால் ‘Love you all’ என்று சொல்வது பொய்யானது என்று அவருக்குள் சங்கடப்பட்டுக்கொள்வார் ஆசிரியை சுமதி.

ஒழுங்காய் சீருடை அணிவதில்லை, அனைத்திலுமே ஒழுங்கீனம். அவனிடம் ஏதாவது சுட்டிக்காட்டுவதற்கு எந்தவொரு சிறப்பும் இல்லை. அவன்தான் ‘டெடி’ என்கிற தியோடர். அவனிடம் மட்டும் ஆசிரியை சுமதி நடந்து கொள்ளும் விதம் வித்தியாசமாகவே இருந்து வருகிறது.

எந்தவொரு தவறான விஷயத்திற்கும் அவனையே உதாரணம் காட்டினார். ஆமாம், தவறானவன் என்பதற்கு உதாரணமாகி இருந்தான். எந்த நல்ல விஷயத்திற்கும் அவன் சேர்த்துக்கொள்ளப்படவில்லை.

அந்த ஆண்டுக்கான காலாண்டு தேர்வுகள் முடிந்து மாணவர்களின் ரேங்க் கார்டுகள் தயாராகிவிட்டன. அவைகள் வகுப்பாசிரியர்களிடமிருந்து தலைமை ஆசிரியரின் கையெழுத்துக்கு அனுப்பப்பட்டன.

ரிப்போர்ட்டுகளை பார்வையிட்டு கையொப்பமிட்டுக் கொண்டிருந்த தலைமை ஆசிரியர், ஆசிரியை சுமதியை அழைத்து வர அலுவலக உதவியாளரை அனுப்பி இருந்தார்.

ஆசிரியை சுமதி வந்ததும், “ரேங்க் கார்ட் என்பது ஒரு பிள்ளையின் முன்னேற்றம் குறித்து அறிவிக்க வேண்டும். தன் பிள்ளைக்கும் ஓர் எதிர்காலம் உண்டென்ற நம்பிக்கையை பெற்றோருக்குத் தரவேண்டும்.
நீங்கள் எழுதியிருப்பதை பார்க்கும் போது தியோடரின் பெற்றோர் அவன் மீது நம்பிக்கை இழந்து விடுவார்கள்!” என்று அவனது ரேங்க் கார்டை சுட்டிக் காட்டிக் கூறினார், தலைமை ஆசிரியை.

ஆசிரியை சுமதியோ “என்னால் ஒன்றுமே செய்ய முடியாது மேம். அவனைப் பற்றி எழுதுவதற்கு என்னிடம் ஒரு நல்ல விஷயம் கூட இல்லை!” என்றார்.

தலைமை ஆசிரியை அலுவலக உதவியாளரிடம் தியோடரின் கடந்த கால ரேங்க் கார்டுகளை கொண்டு வந்து சுமதியிடம் கொடுக்குமாறு பணித்தார். தியோடரின் ரேங்க் கார்டுகள் கொண்டு வரப்பட்டன. ஒவ்வொரு ஆண்டாக அவனது ரேங்க் கார்டுகளை விரித்துப் படித்தார் ஆசிரியை சுமதி.

மூன்றாம் வகுப்பு ரேங்க் கார்டில் ‘வகுப்பின் மிகத் திறமையான மாணவன் தியோடர்’ என இருந்ததைக் கண்டு தான் வாசித்ததை நம்பமுடியாமல் அதிர்ச்சியில் ஆழ்ந்தார் சுமதி.

நான்காம் வகுப்பில் ‘தியோடரின் தாய் புற்று நோய் முற்றிய நிலையில் உள்ளார். அதனால் தியோடரால் முன்னர் போல படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. அதன் விளைவு அவனிடம் தெரிய ஆரம்பித்திருக்கிறது.’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஐந்தாம் ஆண்டின் ரேங்க் கார்டில்,’தியோடரின் தாயார் இறந்து விட்டார். அவன் மேல் அக்கறை காட்டும் உறவு தேவைப்படுகிறது. இல்லையேல் நாம் அந்தக் குழந்தையை இழந்து விடுவோம்.’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

கண்களில் நிரம்பிய கண்ணீருடன் சுமதி தலைமை ஆசிரியரைப் பார்த்து ‘நான் என்ன செய்ய வேண்டுமென்று இப்போது எனக்குத் தெரிந்துவிட்டது, மேம்.’ என்று ஓர் உறுதியோடு கூறிவிட்டுச் சென்றார் ஆசிரியை சுமதி.

அடுத்த திங்கள் காலை ஆசிரியை சுமதி வகுப்புக்குச் சென்று பிள்ளைகளை பார்த்து வழக்கம் போல்,

‘Love you all ‘என்றார். இந்த முறையும் சுமதி பொய் சொல்கிறோம் என்று அவருக்குத் தெரியும். ஏனென்றால், இப்போது மற்றக் குழந்தைகளை விட தியோடர் மீது அவரது அன்பு அளவு கடந்திருந்தது.

தியோடருடனான அவரது அணுகு முறையை மாற்றிக் கொள்ள ஆசிரியை சுமதி தீர்மானித்திருந்தார். அதன் பின்னர் ஒவ்வொரு நல்ல விஷயத்திற்கும் தியோடரின் பெயர் உச்சரிக்கப்பட்டது. ஒவ்வொரு தவறான உதாரணங்களின் போதும் அவன் பெயர் கவனமாய் தவிர்க்கப்பட்டது.

அவ்வாண்டின் பள்ளி இறுதி நாள் வந்தது. எல்லா மாணவர்களும் தம் ஆசிரியருக்கென பரிசுகள் கொண்டு வந்திருந்தார்கள். அவற்றிற்குள் ஒரு பெட்டி மட்டும் ஓர் பழைய செய்தித்தாளால் சுற்றப்பட்டிருந்தது. ஆசிரியை சுமதிக்கு அதை பார்த்ததுமே அது டெடியிடமிருந்துதான் வந்திருக்க வேண்டுமென உள்ளுணர்வு சொல்லியது.

அதனால் அந்த பரிசையே முதலில் எடுத்துப் பிரித்தார். பிரித்ததும், அதனுள் பாதி உபயோகித்த சென்ட் பாட்டில் ஒன்றும், சில கற்கள் கழன்று விழுந்த பிரேஸ்லெட் ஒன்றும் இருந்தது. அந்தப் பொருள் தியோடருடையது என்று புரிந்து கொண்ட முழு வகுப்பறையே சிரித்தது.

ஒன்றுமே சொல்லாமல் ஆசிரியை சுமதி அந்த வாசனைத் திரவியத்தை தன்மீது பூசிக் கொண்டார். அந்த பிரேஸ்லெட்டை எடுத்து தன் கையில் அணிந்து கொண்டார். மெல்லியதாய் ஒரு புன்னகையுடன் தியோடர் சொன்னான்,

“இப்போது உங்களிடம் என் அம்மாவின் வாசம் வருகிறது. இறக்கும் முன் அவர் இறுதியாய் வைத்திருந்த சென்ட் இதுதான். இந்த பிரேஸ்லெட்தான் என் அம்மாவின் இறந்த உடலை பெட்டிக்குள் வைக்கும் முன் அவர் உடலில் இருந்து அகற்றப்பட்டது ” என்று கூறினான்.

ஆசிரியை சுமதிக்கு கண்ணீர் பொங்கிவிட்டது. தன்னையும் தியோடர் ஒரு தாயாக நினைப்பது மாசற்ற தாயுணர்வாக இருந்தது.

ஓராண்டு கழிந்தது. ஆசிரியை சுமதி மேசையின் மீது ஓர் கடிதம் கிடந்தது. ”

“நான் எத்தனையோ ஆசிரியர்களை பார்த்துவிட்டேன். ஆனால், நான் பார்த்த ஆசிரியர்களிலேயே சிறந்தவர் நீங்கள் மட்டுமே-” அன்புடன் டெடி. என்று எழுதப்பட்டு இருந்தது.

மாணவனுக்கு கற்பிக்கும் ஆசிரியை

இப்படியாக ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் ஆசிரியை சுமதிக்கு ஒரு கடிதம் கிடைத்து வந்தது. ஆனால் அதே வரிகளுடன்,

“நான் எத்தனையோ ஆசிரியர்களை பார்த்துவிட்டேன். ஆனால், நான் பார்த்த ஆசிரியர்களிலேயே சிறந்தவர் நீங்கள் மட்டுமே-” அன்புடன் டெடி.

ஆண்டுகள் பல வேகமாய் உருண்டோடின. அவர்களுக்கிடையேயான தொடர்பு எப்படியோ அறுந்து போனது. தியோடருடனான உறவு இல்லாமல் போய்விட்டது. ஆசிரியை சுமதியும் ஓய்வு பெற்றுவிட்டார். பல ஆண்டுகளுக்குப் பின்னர் அவருக்கு ஒரு கடிதம் வந்திருந்தது. அந்தக் கடிதம் டாக்டர் தியோடரிடமிருந்து,

ஆசிரியை சுமதிக்கு,

“நான் எத்தனையோ ஆசிரியர்களை பார்த்துவிட்டேன். ஆனால், நான் பார்த்த ஆசிரியர்களிலேயே சிறந்தவர் நீங்கள் மட்டுமே, தற்போது எனக்குத் திருமணம் ஆகவுள்ளது. உங்கள் வருகை இல்லாமல் எனது திருமணத்தை நினைத்துக்கூட பார்க்கக் முடியவில்லை.” நான் உங்களின் அன்பு டெடி, டாக்டர் தியோடர்

என்று குறிப்பிடப்பட்டு இருந்ததுடன் திருமணத்துக்கு போய் வர சுமதி டீச்சருக்கு விமான டிக்கட்டுக்களும் இணைக்கப்பட்டிருந்தன.

ஆசிரியை சுமதிக்கு இருப்புக் கொள்ளவில்லை.

அவரிடம் அந்த தியோடர் கொடுத்த சென்ட் பாட்டில் தற்போது இல்லை. ஆனால் பிரேஸ்லெட் பாதுகாப்பாய் இருந்தது. அதை அணிந்து கொண்டு திருமணத்திற்குப் புறப்பட்டார்.

திருமணத்துக்குச் சென்று பின் இருக்கையொன்றில் அமர முற்பட்டபோது அங்கிருந்த ஊழியர்கள் அவரை எப்படியோ அடையாளம் கண்டு, அவரை முன் வரிசையில் இருந்த ஆசனம் ஒன்றை நோக்கி அழைத்துச் சென்றனர்.

அவருக்கென ஒதுக்கப்பட்டிருந்த ஆசனத்தில் ”அம்மா “ என்று எழுதப்பட்டிருந்தது.  ஆசிரியை சுமதி ஆசனத்தில் அமர்ந்து கண்ணீர்விட்டு அழுதார். தியோடர் வந்து அம்மாவை கட்டிப்பிடிப்பதுபோல சுமதி டீச்சரைக் கட்டி அணைத்து இருந்தான். அவன் கண்களிலும் கண்ணீர்.

திருமணம் முடிந்தது. டாக்டர் தியோடர் தன் புது மனைவியிடம் ஆசிரியை சுமதியை அறிமுகம் செய்து வைத்தார்.

”இவர் மட்டும் இல்லையென்றால் நான் இன்று இந்த இடத்தில் நின்றிருக்கவே முடியாது’ தியோடரின் கண்களில் கண்ணீர்.

ஆசிரியை சுமதி புதுப் பெண்ணைப் பார்த்து ‘ டெடி இல்லையென்றால்,
ஒரு ஆசிரியர் தன் மாணவர்களுக்கு முதலில் ஒரு தாயாய் இருக்க வேண்டுமென்பதை அறிந்திருக்கவே முடியாது” என்று சொன்னார் கண்ணீருடன்.

ஆசிரியர்களே..!

உங்கள் வகுப்பிலும் ஒரு டெடி இருக்கிறான். உங்கள் உதவிக்காக காத்துக் கொண்டிருக்கிறான். உங்களாலும் அந்த ஆசிரியை சுமதியாக இருக்க முடியும்.

இனி அடுத்த நாள் காலை வகுப்பறைக்குள் நுழையும் போது ஒரு ஆசிரியராய் இல்லாமல் தாயாக, தந்தையாக நுழைந்து பாருங்கள். உங்களால் ஒரு பிள்ளையின் வாழ்க்கையில் நல்லதோர் திருப்புமுனையை ஏற்படுத்த முடியும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top