பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) சார்பில் தேசிய கல்விக்கொள்கை 2020-ஐ நடைமுறைப்படுத்துவது தொடர்பாக தென்மண்டல அளவில் தன்னாட்சி கல்லூரிகளுக்கான கருத்தரங்கம் சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் நடந்தது.
இக்கருத்தரங்கை யுஜிசி தலைவர் எம்.ஜெகதிஷ் குமார் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும் போது, “சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி தலைமையிலான நிபுணர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மாணவர்கள் இளங்கலை பட்டப்படிப்பை முன்கூட்டியே படித்து முடிக்கும் புதிய முறைக்கும், அதேபோல், படிப்பில் பின்தங்கியுள்ள மாணவர்கள் கூடுதல் காலஅவகாசம் எடுத்துக்கொள்ளும் புதிய முறைக்கும் யுஜிசி கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
இதன்படி மாணவர்கள் விரும்பினால் 4 ஆண்டு கால அல்லது 3 ஆண்டு கால இளங்கலை பட்டப்படிப்பை ஓராண்டு அல்லது 6 மாதங்களுக்கு முன்னரே படித்து முடித்து விடலாம். அதேபோல், படிப்பில் சற்று பின்தங்கிய மாணவர்கள் தேவைப்பட்டால் 6 மாதங்கள் அல்லது ஓராண்டு கூடுதல் காலம் எடுத்தும் படிக்கலாம். இந்த புதிய முறை வரும் கல்வி ஆண்டில் அமலுக்கு வர உள்ளது” என்று கூறினார்.