தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளிகளில் செயல்படும் தொன்மை பாதுகாப்பு மன்ற மாணவர்களுக்கு தொல்லியல் பண்பாடு வரலாற்று ஆர்வத்தை மேம்படுத்திட நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக மாணவர்களின் அருகாமைப்பகுதியில் தொன்மை முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பார்வையிட்டு அவ்விடத்தின் முக்கியத்துவத்துவம் குறித்து அறிந்து கொள்ளுவதற்கும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தோடும், பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் தொன்மை பாதுகாப்பு மன்றம் செயல்படும் பள்ளிகளான கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பெருங்களூர் அரசு மேல்நிலைப்பள்ளிகளின் தொன்மை பாதுகாப்பு மன்றங்கள் ஒன்றாக இணைந்து பெருங்களூர் சிவாலய கல்வெட்டுகள், மாந்தாங்குடி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட சிற்பங்கள் கல்வெட்டுகள் ஆகியவற்றை பார்வையிட்டனர்.
தொடர் நிகழ்வாக புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில், தொன்மையை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்வு அருங்காட்சியக அரங்கில் நடைபெற்றது. தொன்மையான பொருட்களை பாதுகாப்பது, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சின்னங்கள் மற்றும் பொருட்களை அடையாளம் காண்பது அவற்றை பாதுகாப்பது குறித்தும்,

புதைபொருட்களை பாதுகாப்பதற்காக அரசு இயற்றியுள்ள சட்டங்கள் மற்றும் அந்த சட்டங்களின் படி பொதுமக்கள் எவ்வாறு பழமையான பொருட்களை பாதுகாக்க வேண்டும் என்பது குறித்தும், இந்திய குடிமகனின் அடிப்படை கடமைகளில் ஒன்றான தொன்மங்களை பாதுகாத்தல் குறித்தும் எடுத்துக் கூறப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட தொன்மை பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆ. மணிகண்டன் மாணவர்களுக்கு பயிற்சியளித்தார்.
அப்பொழுது அருங்காட்சியகத்தில் உள்ள அரும்பொருட்களின் முக்கியத்துவம் குறித்தும் கால வரையறைகள் குறித்தும் கல்வெட்டுகளை அடையாளம் காணுதல் சிற்பங்களை அடையாளம் காணுதல் குறித்தும், தாவரங்கள் மற்றும் விலங்குகளை பதப்படுத்தும் நுட்பங்கள் குறித்தும் ஓலைச்சுவடிகள் உள்ளிட்டவற்றை பாதுகாப்பதற்காக பயன்படுத் தப்படும் நுட்பங்கள் குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது.

நிகழ்வின் ஒரு பகுதியாக கற்கால கருவிகள் குறித்து அருங்காட்சியக காப்பாட்சியர் பக்கிரிசாமி சென்னை ஆதம்பாக்கம் பகுதியில் கொற்றளை ஆற்றில் கிடைத்த 14 லட்சம் ஆண்டுகள் பழமையான கற்கருவிகள் குறித்தும்,புதிய கற்கால கருவிகள் குறித்தும் நேரடியாக மாணவர்களை அந்த கருவிகளை தொட்டு பார்த்து உணரச் செய்தும் விளக்கிப் பேசினார்.
இறுதியாக மாணவர்கள் களப்பயணத்திலும் அருங்காட்சியகத்திலும் கிடைத்த தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர். நிகழ்வில் பெருங்களூர் பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர் வாசுகி வரவேற்று பேசினார். கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் செல்வக்குமார் நன்றி கூறினார் . நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பை ஆசிரியர் மதிவாணன் , அருங்காட்சியக ஊழியர்கள் செய்தனர்.