பள்ளிக்கல்வித்துறையின் முன்னெடுப்பு நடவடிக்கைகளுக்கு கல்வியாளர்கள் சங்கமம் வரவேற்பு தெரிவித்துள்ளது. உதவிபெறும் பள்ளிகளில் காணப்படும் கூடுதல் பணியிடங்களுக்கும் அனுமதி அளிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளது.
கல்வியாளர்கள் சங்கமம் நிர்வாகி சிகரம் சதிஷ்குமார் வெளியிட்ட அறிக்கை:
அரசுப் பள்ளிகளில் காலிப்பணியிடங்கள் என்பது தொடர்ந்து இருந்து வருகின்ற சூழலில், காலச்சூழலின் காரணமாக நிரந்தரப் பணியிடங்களாக இல்லாமல், தொகுப்பூதியத்தில் ஆசிரியர்களை நியமித்துக்கொண்டிருக்கின்ற சூழலில், நீண்டகாலமாக அரசு உதவிபெறும் பள்ளிகளில் பெரும்பாலான இடங்களில் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் பணியிடங்கள் இல்லாமல், அதிகப்படியான ஆசிரியர்களைக் கொண்டு இயங்கி வருகின்றன.
ஒரு மாவட்டத்திற்கு சராசரியாக நூற்றுக்கணக்கான ஆசிரியர்களும் ,சில மாவட்டங்களில் அதற்கு மேலும் பணிபுரிகின் றனர். இவர்களுக்கு அரசு மூலமாகவே ஊதியம் வழங்கப்பட்டு வருகின்றது. அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை என எந்தநிலைப் பள்ளிகளாக இருந்தாலும் கூடுதல் ஆசிரியர்களை, அரசுப் பள்ளிகளின் காலிப்பணியிடங்களுக்கு உடனடியாக ஈர்த்துக் கொள்ள வேண்டும் என தொடர்ந்து அரசிடம் கோரிக்கை வைத்து வந்தோம்.
அதுகுறித்த முன்னெடுப்பை பள்ளிக்கல்வித்துறை தற்போது தொடங்கியிருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. இதுஆக்கப் பூர்வமான அவசியமான முன்னெடுப்பு ஆகும். அதேநேரத்தில், உதவிபெறும் பள்ளிகளில் காணப்படும் கூடுதல் பணியிடங்களுக்கும் அனுமதி வழங்கவும் அரசு நடவடிக்கை வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.