தமிழகத்திற்கு நீட் நுழைவு தேர்வில் இருந்து விலக்குக் கோரும் மசோதா இதுவரை குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக வரவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட மசோதா குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்புவதற்காக உள்துறை அமைச்சகத்திற்கு வந்துள்ளதா? இந்த விவகாரத்தில் மத்திய அரசின் பதில் என்ன என்று மக்களவையில் திமுக எம்பி ஆ ராசா கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ள மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார், குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைத்து மசோதாக்களையும் மத்திய உள்துறை அமைச்சகம் கையாண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கு உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ள தகவலின் படி, நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி தமிழ்நாடு அரசால் நிறைவேற்றப் பட்டு குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட மசோதா, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு இதுவரை கிடைக்கவில்லை என்று அமைச்சர் பாரதி பிரவீன் பவார் கூறியுள்ளார்.