Close
நவம்பர் 21, 2024 6:32 மணி

இல்லம் தேடிக்கல்வித் திட்டம்… திரும்பிப் பார்க்க வைத்த தமிழ்நாடு…

தமிழ்நாடு

தமிழ்நாட்டின் வரம் இல்லம் தேடி கல்வி திட்டம்

இல்லம் தேடிக்கல்வித் திட்டம் தமிழ்நாட்டை  உலகம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

இது தொடர்பாக கல்வியாளர்கள் சங்கமம் நிறுவனர் சிகரம் சதிஷ்குமார் கூறியதாவது:

கல்வியாளர்கள் சங்கம்
சிகரம் சதிஷ்குமார்

உலகம் இதுவரை எத்தனையோ பேரிடர்களைச் சந்தித்திருக்கிறது. ஆனால் ஒரே நேரத்தில் ஒட்டுமொத்த உலகும் சிறைபிடிக்கப்பட்டது போன்ற வரலாறு கிடையாது.
இவையெல்லாம் கொரோனா என்கிற பெயரை உச்சரிக்கும்வரை வரலாறாக இருந்தது.

ஆனால் கொரோனா வந்த பிறகு ஒட்டுமொத்த உலகும் பாதிக்கப்பட்டது. மிகமுக்கியமாக கல்விமீதானபாதிப்பு என்பது மிகக்கடுமையானதாக இருந்தது.

ஏனெனில் ஏனைய பாதிப்புகள் எல்லாம்பொருளாதாரம் சார்ந்த பாதிப்புகள். இவற்றை உழைப்பின் மூலமோ,நிதியின் மூலமோ சரிசெய்துவிட முடியும். ஆனால் கல்வியின் மீதான பாதிப்பு என்பது வருங்காலத் தலைமுறை மீதான பாதிப்பாகும். அதனை நிதி கொண்டோ, பொருள்கொண்டோ சரிசெய்ய முடியாது.

எந்த வடிவிலேனும் கல்வியைக் கொடுத்தே கற்றல் இழப்பைச் சரிசெய்ய முடியும் என்னும் சூழலில் உலகமேஇணைய வழியில் கல்வியைக் கொடுக்க போராடிக் கொண்டிருந்த சூழலில், இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகிற்கே முன்னோடியாக இல்லம் தேடிக் கல்வி என்னும் ஓர் அற்புதமான திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியது.

எந்த திட்டத்திற்கும் இல்லாத சிறப்பு, அப்படியென்ன இந்தத் திட்டத்திற்கு மட்டும் உள்ளது என்ற கோணத்தில் பார்த்தால், எந்தச் சூழ்நிலையிலும் கல்வி தடைபட்டு விடக்கூடாது என்னும் ஒற்றை நோக்கத்தை முன்வைத்து மாணவர்களைத் தேடி, அவர்கள் வாழுமிடங்களிலேயே கல்விக்கான வாய்ப்பை வழங்க வேண்டும் என்கிற வகையில் திட்டமிட்டு, இத்திட்டம் வடிவமைக்கப்பட்டதும், கொரோனா காலத்தில் ஏற்பட்ட கற்றல் இழப்பை ஈடுசெய்யவும் இதுவரை 1, 81000 தன்னார்வர்களை களத்தில் இறக்கிச் சாதித்திருக்கிறது தமிழ்நாடு அரசு.

இதனை ஒரு சராசரித் திட்டமாக அணுகாமல்,தமிழ்நாட் டின் எதிர்காலத் தலைமுறைக்கான திட்டமாகக் கருதியதால்தான் இத்திட்டத்திற்கென தனி அலுவலராக இளம்பகவத்  அவர்களை நியமித்து இத்திட்டத்தின் முழு வெற்றிக்கான முனைப்பை முன்னெடுத்திருக்கின்றது தமிழ்நாடு அரசு.

இல்லம் தேடிக் கல்வித்திட்டம் குறித்து சில எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தாலும் அறிவுப்பூர்வமாகப் பார்க்கும் பொழுது, அதன் பயன் பெரும்பங்கு வகிக்கிறது.

இல்லம்தேடி கல்வி
இல்லம்தேடி கல்வித்திட்ட வகுப்பை பார்வையிட்ட முதலவர் மு.க.ஸ்டாலின்

பள்ளிக்கு வர வாய்ப்பில்லாதவர்களுக்காக என்றில்லாமல்,
பள்ளியில் பயிலும் 1 முதல் 8 வரையிலான அரசுப் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் அடிப்படைக் கல்வியை வழங்கிடும் உறுதியோடு , தொடக்க நிலை மற்றும் நடுநிலை என இரு பிரிவாக தன்னார்வலர்களைத் தேர்ந்தெடுத்து முழு அர்ப்பணிப்பு உணர்வோடு கல்வியைக் கரைசேர்க்கும் முடிவோடு களத்தில் இறக்கியிருக்கின்றது இல்லம் தேடிக் கல்வித் திட்டம்.

ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு தன்னார்வலர்கள் கிடைப்பார்களா என எல்லோரும் யோசித்துக் கொண்டிருந்த வேளையில் நாங்கள் ஊதியத்திற்காக வரவில்லை.அர்ப்பணிப்பு உணர்வோடு மாணவர்கள் கடந்த ஈராண்டுகளில் இழந்த கல்வியை மீட்டெடுப்பதற்காக வந்திருக்கின்றோம் என 1,81000 தன்னார்வலர்கள் இல்லம் தேடிக் கல்வித்திட்டத்தில் இணைந்திருப்பது பெரும்சாதனையாகவே பார்க்கப்படுகின்றது.

ஏனெனில் ஊதியத்தை ஒரு பொருட்டாகக்கருதாமல்தினமும் இரண்டு மணி நேரம் ஒதுக்கி, அரசுப் பள்ளி மாணவர்களின் அடிப்படைக் கல்வியை உறுதிப்படுத்தவும், வலுப்படுத்தவும் தாங்கள் சார்ந்த பகுதிகளில் அரசோடு கைகோர்த்திருக்கும் தன்னார்வலர்களை வணக்கத்திற் குரியவர்களாகவே பார்க்க வேண்டியிருக்கிறது

மாணவர்களுக்கு கற்பிப்பதற்காக கற்றல் உபகரணங்கள் தயாரிப்பு, அறிவியல் கண்காட்சி ஆடல் ,பாடல், விளையாட்டு என மாலை நேர வகுப்புகள் மகிழ்வான வகுப்பறைகளாக காட்சியளித்துக் கொண்டிருக்கின்றன.

அரசுப்பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுடைய பெற்றோர் பெரும்பாலும் தனது குழந்தைகளது கல்வியில் பெரும் அக்கறை செலுத்த இயலாத நிலையில்தான் பெரும்பாலும் காணப்படுகின்றனர்.

பள்ளியில் ஏற்படும் சந்தேகங்களை மறுமுறை கேட்டுத் தெளிவுறும் வாய்ப்பு அரசுப்பள்ளியில் பயிலும்அனைத்துக் குழந்தைகளுக்கும் கிடைப்பதில்லை.

ஆனால் இல்லம் தேடிக் கல்வித்திட்டம் வந்தபிறகு தனது வீட்டின் அருகிலேயே கற்றல் மையங்கள் செயல்படுவதாலும்,
தான் நன்கு அறிந்த தனது சுற்றத்தில் உள்ள ஒருவரே தன்னார்வலராக செயல்படுவதாலும்தயக்கமுன்றி தன் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவுறும் வாய்ப்பு இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் மூலம் மாணவர்களுக்குக் கிடைத்துள்ளது.

அத்துடன் கொரோனா கால இடைவெளியில் கற்பிக்க முடியாத பாடங்களை ஆசிரியர் தற்போது கற்பிக்க வாய்ப்பில்லாமல் இருக்கின்றது. ஏனெனில் அவர்களால் நடப்பு ஆண்டிற்குரிய பாடப்பகுதியை மட்டுமே நடத்துவதற்கு நேரம் இருக்கின்றது.

ஆனால் இடையில் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை நிரப்புவது யார்? அந்த அடிப்படைத் திறன்களை மீட்டெடுக்கப்போவது யார்? என்னும் வினாக்களை எல்லாம் எழுப்பினால், நிச்சயமாக அந்தப் பெரும் பொறுப்பை ஏற்று ,அதனை நோக்கி வெற்றிகரமாக சென்றுகொண்டிருப்பவர்கள் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் தன்னார்வலர்களே!

வழக்கமான பள்ளிக்கல்வியில் கூட 30 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்னும் நடைமுறைதான் வழக்கத்தில் உள்ளது.
ஆனால் இல்லம் தேடிக் கல்வித்திட்டத்தில் 20 மாணவர்களுக்கு ஒரு தன்னார்வலர் , அவர்களது வருகையைக் கண்காணிக்க ஆன்லைனில் வருகைப்பதிவு என மாணவர்களின் 100% தவறாத வருகைக்காக பம்பரமாகச் சுழன்று செயலாற்றிக் கொண்டிருக்கின்றார் ல்லம் தேடிக் கல்வித்திட்டத்தின் சிறப்பு அலுவலர்  இளம்பகவத்.

மேலும் இத்திட்டத்தின் மூலம் எப்படியேனும் அரசுப் பள்ளி மாணவர்களின் குறைந்த பட்ச கற்றல் அடைவுகளை உறுதி செய்துவிட வேண்டும் என்னும் உறுதியோடு பயணிக் கின்றார்.

இதற்காக கல்வியின் மீது அக்கறை உள்ள,சமூக மேம்பாட்டுக் கான களத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் போன்ற சமூகப்பணி அமைப்புகளையும் இத்திட்டத்தில் இணைத்து இல்லம் தேடிக் கல்வித்திட்டத்தின் பயணத்தை வலுப்படுத்திக்கொண்டிருக்கின்றார்.

இல்லம் தேடிக் கல்வித் திட்டத்திற்கு கடந்த நிதிநிலை அறிக்கையில் 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்த தமிழ்நாடு அரசு , தற்போதைய நிதிநிலை அறிக்கையிலும் 200 கோடி ரூபாயை மேலும் ஒதுக்கீடு செய்திருக்கின்றது.

பள்ளிகள் இயல்பாக செயல்படத்தொடங்கிய பின்னும் ஏன் இல்லம் தேடிக் கல்வித் திட்டம் தொடர வேண்டும் எனக் கேள்வி எழுப்பினால், காரணம் மிகச்சரியாக இருக்கின்றது.

கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் இரண்டு ஆண்டுகளில் ஏற்பட்ட கற்றல் இடைவெளி என்பதும், கற்றல் பாதிப்பு என்பதும் அதனது தாக்கத்தை ஆராயும்பொழுது, பாதிப்பின் வீச்சு மிகப்பெரியதாக உள்ளது.

உயர்நிலை, மேல்நிலை என்னும்பொழுது மாணவர்கள் எப்படியேனும் தங்களைத் தயார்செய்து கொள்ள வாய்ப்புக் கிடைத்து விடும். ஆனால் தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் என்பவை கல்வியின் அடித்தளமாகத் திகழ்பவை.மாணவர் களது கற்றல் இங்கு பாதிக்கப்பட்டால் அது வரும் நாட்களில் அவர்களது உயர்கல்வியை மட்டுமல்ல, அவர்களது எதிர்காலத்தையே பாதிப்படையச் செய்யும்.

எனவே அவர்களது கற்றல் இழப்பைச் சரிசெய்ய இல்லம் தேடிக் கல்வி திட்டம் இந்த 6 மாதங்கள் அல்ல, இன்னும் ஓர் ஆண்டு நீட்டித்தாலும் அது சரியான ஒன்றாகவே இருக்கும்.
ஏனெனில் ஈராண்டுகால முழுமையான கற்றல் இழப்பை 6 மாதங்களில் மீட்டெடுப்பது என்பது சவாலானது அல்லவா!.
எனவே கற்றல் இழப்பு என்பது சரிசெய்யப்படும் வரை
இத்திட்டத்தின் காலம் நீட்டிக்கப்படுதலும் அவசியமே.

பள்ளியில் பயிலும் மாணாக்கர்களே இல்லம் தேடிக் கல்வித்திட்டலும் இணைந்து பயில்வதால், மாணவர்களை நன்கு அறிந்த ஆசிரியர்கள் இல்லம் தேடிக் கல்வித்திட்டத்தின் தன்னார்வலர்களுக்கு மாணவர்களது கற்றல் நிலை குறித்த விபரங்களை பகிர்ந்து கொண்டு , சம்பந்தப்பட்ட இல்லம் தேடிக் கல்வி மையங்களோடு தொடர்பில் இருந்தால்,

கொரோனா காலத்தில் ஏற்பட்ட மாணவர்களுடைய கற்றல் இழப்பு என்பதைச் சரி செய்யப்படக்கூடிய வாய்ப்பு விரைவில் ஏற்படும். கல்விக்கு கொரோனா சாபம் என்றால்,இல்லம் தேடிக்கல்வித்திட்டம் வரம் என்றார் கல்வியாளர்கள் சங்கமம் நிறுவனர் சிகரம் சதீஷ்குமார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top