Close
நவம்பர் 24, 2024 7:15 காலை

சிறுகதைகள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றும்: கவிஞர் சோலச்சி

புதுக்கோட்டை

புதுக்கோட்டை கேகேசி கலைக்கல்லூரியில் நடந்த இலக்கிய மன்றக்கூட்டத்தில் பேசிய எழுத்தாளர் சோலச்சி.

 சிறுகதைகள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றும் என்றார்   எழுத்தாளர்-கவிஞர் சோலச்சி.

புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரி, தமிழாய்வுத்துறை, இளங்கலை மற்றும் முதுகலை மன்ற ஆண்டுக் கூட்டம்  நடைபெற்றது.

மன்ற ஆண்டுக் கூட்டத்திற்கு, கல்லூரி முதல்வர் முனைவர் பா.புவனேஸ்வரி தலைமை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் சோலச்சி    கலந்து கொண்டு இன்றைய சிறுகதைகளின் நோக்கும் போக்கும் என்ற தலைப்பில்  பேசியதாவது:

சிறுகதைகள் வாழ்க்கையை சிறப்பானதாகவும் மகிழ்ச்சியானதாகவும் மாற்றும். சிறுகதை வாசிப்பு ஒவ்வொருவருக்கும் அவசியமான ஒன்று. சிறுகதைகள் வாழ்க்கைக்கான வழிமுறைகளைச் சொல்லித் தருகிறது. எடுத்துக்காட்டாக எஸ்.ராமனின் ‘குடும்பம் எனும் கோலம்’ என்ற  சிறுகதைக்கூறலாம்.

கோலம் போடும்போது கவனம் சிதறி கோடு மாறினால் கோலம் அலங்கோலமாகிவிடும்.  அது போலதான் குடும்ப வாழ்க்கையும். கவனமாக,நெளிவு சுளிவோடு வாழக் கற்றுக்கொண்டால் இல்லறம் சிறப்பாக இருக்கும் என்று இந்தக் கதை கூறுகிறது.

என்ன தான் நாம் படித்து உயர்ந்த நிலையில் இருந்தாலும், அது பெண்களாக இருந்தாலும் ஆண்களாக இருந்தாலும் குடும்ப வாழ்க்கை என்பது தவிர்க்க முடியாது. அந்த வகையில் வாழ்க்கையை சிறப்பாக, மகிழ்ச்சியாக ஆக்கிக் கொள்ள இதுபோன்ற சிறுகதைகளை வாசிப்பது அவசியம் என்றார் சோலச்சி.
தொடர்ந்து ஆங்கிலத்துறைத்தலைவர் சி.வெள்ளையம்மாள்  ‘ஷெல்லியும் பாரதியும் ‘என்ற தலைப்பில் உரையாற்றினார்.

புதுக்கோட்டை வாசகர் பேரவைச் செயலர் சா.விஸ்வநாதன் வாழ்த்துரை வழங்கினார். முன்னதாக தமிழ்த் துறைத் தலைவர் மா.சாந்தி  வரவேற்றார். நிறைவாக இளங்கலை மன்றச்செயலர் செல்வி அ. மாலதி நன்றி கூறினார். நிகழ்வில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top