Close
நவம்பர் 22, 2024 12:10 காலை

குறளோவியப் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு ஆட்சியர் கவிதா ராமு பரிசளிப்பு

புதுக்கோட்டை

குறளோவியப் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசளித்த மாவட்ட ஆட்சியர் கவிதாராமு

திருக்குறள் குறளோவியப் போட்டியில் வெற்றி பெற்ற5 மாணவிகளுக்கு காசோலைகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது

தமிழ் இணையக் கல்விக்கழகம் சார்பில் நடைபெற்ற திருக்குறள் குறளோவியப் போட்டியில் வெற்றிபெற்ற புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 5 மாணவிகளுக்கு, காசோலைகள் மற்றும் சான்றிதழ்களை, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு   (30.05.2022) திங்கள்கிழமை வழங்கினார்.

பின்னர் ஆட்சியர் கூறியதாவது:மாநில அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கென ‘குறளோவியம்” என்ற பெயரில் ஓவியப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் சிறந்த 365 ஓவியங்கள் தேர்வு  செய்து, போட்டியில் வெற்றி பெற்ற முதல் மூன்று இடங்களைப் பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு  தமிழ்நாடு முதலமைச்சரால் பரிசுகள் வழங்கப்பட்டது.

மேலும், இக்குறளோவியப் போட்டியில் தெரிவு செய்யப்பட்ட 365 ஓவியங்கள் திருக்குறள் குறளோவியம் தினசரி நாட்காட் டிப் புத்தகமாக அச்சிடப்பட்டு, பொதுமக்களுக்காக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இத்திருக்குறள் குறளோவியப் போட்டியில் வெற்றி பெற்று சிறப்புப் பரிசாக ரூ.5,000 -மும், ஊக்கப் பரிசாக ரூ.1,000 -மும் மற்றும் அனைத்து மாணவர்களுக்குச் சான்றிதழ்களும் வழங்கப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மொத்தம் 5 மாணவி களுக்கு, காசோலைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப் பட்டுள்ளது. அதன்படி, கல்லாக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவி வெ.அகல்யா மற்றும் பிலிவலம் மவுண்ட் சீயோன் சர்வதேச பள்ளியை சேர்ந்த  பிளஸ்1  வகுப்பு பயிலும் மாணவி க.பவித்ரா பானு ஆகிய 2 மாணவிகளுக்கு தலா சிறப்புப் பரிசாக ரூ.5,000 காசோலையும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

மேலும் ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணவி ப.தேவிகா, பொன்னமராவதி அரிமா பதின்ம மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி பொ.தேஜன்யா, பொன்னமராவதி அமல அன்னை மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவி கு.கீதா ஆகிய 3 மாணவிகளுக்கு தலா ஊக்கப் பரிசாக ரூ.1,000 காசோலையும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது என  தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top