Close
நவம்பர் 22, 2024 4:13 காலை

கன மழையால் மணலி மாநகராட்சி பள்ளியின் மேற்கூரையில் மழைநீர் கசியும் அவலம்

சென்னை

கனமழையால் மேற்கூரையிலிருந்து ஒழுகிய மழைநீரால் கசிந்த மணலி மாநகராட்சி தொடக்கப் பள்ளிக் கட்டடம்.

கனமழையால் மணலி மாநகராட்சி பள்ளிக் கட்டடத்தின் மேற்கூரை சேதமடைந்து மழைநீர் கசிவதன் காரணமாக
மாணவர்களின் பாதுகாப்பு கருதி பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

சென்னை மணலியில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த மழையால் பள்ளிக் கட்டடத்தின் கூரையிலிருந்த மழைநீர் கொட்டியது. இதனையடுத்து பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு கருதி பள்ளிக்கு திங்கள்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது.

சென்னை மாநகராட்சி சார்பில் நடத்தப்படும் சென்னை தொடக்கப் பள்ளி மணலி பாடசாலை தெருவில் அமைந்துள்ளது. இங்கு மழலையர் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புவரை மாணவர்கள் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.  30-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். சுமார் 40 வகுப்பறைகள் உள்ளன.

இங்குள்ள வகுப்பறைகள் பெரும்பாலானவை சேதமடைந்துள்ளன. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு கனமழை கொட்டியது. திங்கள்கிழமை பள்ளிக்கு வந்த மாணவர்கள் கட்டடத்தின் கான்கிரீட் கூரை சேதமடைந்து வகுப்பறையில் மழைநீர் தேங்கி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த பெற்றோர்கள், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் புண்ணியகோட்டி,  21-வது வட்ட மாமன்ற உறுப்பினர் முல்லை ஜி.ராஜேஷ் சேகர் உள்ளிட்டோர் அங்கு வந்து பள்ளியின் தலைமை ஆசிரியர் கோமளேஸ்வரியுடன் ஆலோசனை நடத்தினர். அதில் மாணவர்கள் பாதுகாப்பு கருதி திங்கள்கிழமை பள்ளிக்கு ஒட்டுமொத்தமாக விடுமுறைவிடப்பட்டதையடுத்து மாணவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் சென்றனர்.

தமிழகத்திலேயே அதிக மாணவர்கள் பயிலும் பள்ளி:
இது குறித்து மாமன்ற உறுப்பினர் முல்லை ஜி ராஜேஷ் சேகர் (அ.தி.மு.க) கூறியதாவது: தமிழகத்திலேயே அதிக அளவிலான மாணவர்கள் பயிலும் தொடக்கப்பள்ளி மணலி மாநகராட்சி பள்ளிதான்.  இங்குள்ள வகுப்பறைகள் சேதமடைந்துள்ளன. 40 வகுப்பறைகளில் 8 மட்டுமே புதிதாகக் கட்டப்பட்டது.

 இப்பள்ளியே ஸ்மார்ட் பள்ளியாக மாற்ற தமிழக அரசு மாற்றியமைக்க உள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் இதற்கான பூர்வாங்கப் பணிகள் கூட இன்னும் தொடங்கியபாடில்லை.   இப்பள்ளிக்கு புதிய கட்டடங்களை  கட்டுவதற்கு சுமார் ரூ. 9 கோடி மதிப்பீட்டில் திட்டம் தயார் நிலையில் உள்ளது என அதிகாரிகள் தெரிவிக்கின்றன

ர்.  இத்திட்டத்தின் பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும். அதுவரை மாணவர்களின் நலன் கருதி மாற்று இடத்தில் வகுப்பறைகளை நடத்திட அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் ராஜேஷ் சேகர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top