தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பார்வைத்திறன் குறைபாடு டைய மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம்.
தழிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிக்கான நலத்துறையின் கீழ் இருபாலருக்குமான விடுதியுடன் கூடிய பார்வைத்திறன் குறையுடையோருக்கான சிறப்பு பள்ளி தஞ்சாவூர், மேம்பாலம் அருகில் இயங்கி வருகிறது. இங்கு 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை இலவச கல்வி அளிக்கப்படுகிறது.
இச்சிறப்பு பள்ளியில் சேரும் பார்வைத்திறன் குறைபாடுடைய மாணவ, மாணவியருக்கு ஆண்கள், பெண்கள் என தனித்தனி இலவச விடுதி வசதி, சத்தான உணவு, 4 செட் விலையில்லா சீருடை, விலையில்லா பிரெய்லி பாட புத்தகங்கள் ஆகியவை வழங்கப்படுகின்றன.
மேலும், பார்வைத்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி களுக்கான உதவி உபகரணங்கள் கல்வி உதவித்தொகை வாசிப்பாளர் உதவித்தொகை ஆகியவை வழங்கப்படுகிறது. இப்பள்ளியில் நடைபயிற்சி, விளையாட்டுப்போட்டிகள், பேச்சு போட்டிகள், நடனம், யோகா, சிலம்பம் போன்ற கலைகள் கற்பிக்கப்படுகின்றன. மாதந்தோறும் மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது.
பதினோராம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கு கணினி அறிவியல் பாடப்பிரிவுகள் சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் பயிற்றுநர்களை கொண்டு கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது. சமச்சீர் கல்வி பாடத்திட்டம் பிரெய்லி முறையில் கற்பிக்கப்படுகிறது, மேலும் இலவச கல்விச்சுற்றுலா அழைத்துச்செல்லப்படுகிறது.
எனவே, தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பார்வை குறைபாடு டைய மாணவ, மாணவியர்களை தஞ்சாவூர் அரசு பார்வைத் திறன் குறையுடையோருக்கான சிறப்பு பள்ளியில் சேர்க்கை பெற சிறப்பு முகாம் 30.06.2022 அன்று பார்வைத் திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி, மேம்பாலம், தஞ்சாவூரில் நடைபெறவுள்ளது.
இவ்வாய்ப்பை பார்வைத்திறன் குறைபாடுடைய மாணவ, மாணவிகள் பயன்படுத்தி கொள்ளுமாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தகவல் தெரிவித்துள்ளார்.