Close
நவம்பர் 22, 2024 11:57 காலை

ஜூலை 29 ல் தொடங்கும் புதுக்கோட்டை புத்தகத்திருவிழா: சுமார் 80 அரங்குகளுக்கு முன் பதிவு

புதுக்கோட்டை

புத்தகத்திருவிழா தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கவிதாராமு தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டம்

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம்- தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து  நடத்தும்‘புதுக்கோட்டை புத்தகத் திருவிழா” குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது தீவிரமாக நடைபெறுகிறது என்றார் மாவட்ட ஆட்சியர் கவிதாராமு.

புத்தகத்திருவிழா தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியர் மேலும் பேசியதாவது:
புதுக்கோட்டையில் 5வது புத்தகத் திருவிழா ஜுலை 29 முதல் ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில் நடைபெறவுள்ளது. இப்புத்தகத் திருவிழா குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன் ஒருபகுதியாக  நேற்று  (07.07.2022) புதுக்கோட்டை அரசு இராணியார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவியர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியரகத்தில் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் கலந்துகொண்ட ‘புதுக்கோட்டை வாசிக்கிறது” நிகழ்ச்சி வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்டத்திற்குட்பட்ட 1,061 தொடக்கப்பள்ளிகள், 290 நடுநிலைப்பள்ளிகள், 112 உயர்நிலைப்பள்ளிகள், 107 அரசு மேல்நிலைப்பள்ளிகள், 96 உதவிபெறும் பள்ளிகள், 285 மழலையர் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 1,967 பள்ளிகளை சேர்ந்த 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் மாவட்ட ஆட்சியரகத்தைச் சேர்ந்த 150 அலுவலர்கள், ஊராட்சி ஒன்றியம், ஊராட்சிமன்ற அலுவலகம், பொது நூலகம், கிராம சேவை மையம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணியாளர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் 14,457 நபர்கள் பங்கேற்று புத்தகங்களை வாசித்தனர்.

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து ஜுலை 29 முதல் ஆகஸ்ட் 7 -ஆம் தேதி வரை புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில் 5-ஆவது புத்தகத்  திருவிழாவில் தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற புத்தகப் பதிப்பகங்கள் தங்களுடைய புத்தகங்களை விற்பனை மற்றும் காட்சிப்படுத்துவதற்காக 70 முதல் 80 அரங்குகள் அமைக்கப்படவுள்ளது.

பொதுமக்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்துவதற் காகவும், புத்தகத் திருவிழா குறித்தும், புத்தக வாசிப்பின் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், புத்தக விழாவுக்கு தினம்தோறும் பள்ளி மாணவர்களை அழைத்து வந்து பார்க்க வைக்க  அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என்றார் ஆட்சியர் கவிதா ராமு.  .

இதில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செ.மணிவண்ணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) தமிழ்செல்வி, உதவி இயக்குநர்கள் ஸ்ருதி (ஊராட்சிகள்), இளங்கோ தாயுமானவன் (தணிக்கை),  புத்தக திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள் கவிஞர் முத்துநிலவன், கவிஞர் தங்கமூர்த்தி, ராஜ்குமார், வீரமுத்து, பாலகிருஷ்ணன்,  அன்பு மணவாளன், முத்துகுமார்,  விமலா மற்றும் அரசு இராணியார் மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் தமிழரசி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top