புதுக்கோட்டை அருகேயுள்ள மேலப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழாவில் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை .முத்துராஜா பங்கேற்று மாணவர்களுக்கு பரிசளித்தார்.
புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய மேலப்பட்டி அரசு நடுநிலை ப்பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்விற்கு பள்ளியின் தலைமை ஆசிரியை சீதாலெட்சுமி தலைமை வகித்தார். அறிவியல் ஆசிரியர் மகேஸ்வரன் அனைவரையும் வரவேற்றார். புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை .முத்துராஜா கலந்து கொண்டு எட்டாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கான தேசிய திறனாய்வு தேர்வு புத்தகங்களை வழங்கினார்.
பின்னர் அவர் பேசுகையில், தமிழக முதல்வர், உங்களைப் போன்ற மாணவ, மாணவிகளுக்கு கொண்டு வந்துள்ள பல்வேறு நலத் திட்டங்களை நல்லமுறையில் நீங்கள் அனைவரும் பயன்படுத்தி சிறந்த முறையில் படிக்க வேண்டும்.
தமிழக முதல்வர் கொண்டு வந்துள்ள திட்டங்களை கல்வி அமைச்சர் அதனை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக மாணவிகளுக்கான கல்வி உதவி தொகை ரூ1000- கல்வி மேம்பாட்டிற்கு மிகவும் உறுதுணையாக அமைந்திருக் கின்றது . மாணவர்கள் அனைவரும் கல்வியில் மேம்பாடு அடைந்து சமுதாயத்தையும் நாட்டையும் பாதுகாக்கக் கூடிய வகையில் உங்களுடைய கல்வித்திறமை அமைய வேண்டும்.
இந்த கல்வி வளர்ச்சி நாளில் மாவட்டஅளவில் திறனறிவு தேர்வில் இந்த பள்ளி மாணவ, மாணவிகள் அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளதை பாராட்டுகின்றேன் என்றார் எம்எல்ஏ முத்துராஜா.
நிகழ்வில் பள்ளியின் அறிவியல் ஆசிரியர் மகேஸ்வரன் கண்டுபிடித்த புதிய கண்டுபிடிப்பான உடற்பயிற்சி சாதனத்திலிருந்து மின்சாரம் தயாரித்தல் என்ற புதிய கருவியினை பார்வையிட்டு இயக்கிப் பார்த்து, ஆசிரியருக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.
விழாவில் மணவிடுதி ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல் ,ஆசிரியர்கள் மகேஸ்வரன், ஜெயந்தி, இந்திரா ஜெயலெட்சுமி மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக சரவணன் நன்றிகூறினார்