புதுக்கோட்டை மாவட்டம், கைக்குறிச்சியில் நடைபெற்ற மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வான 535 பேருக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், கைக்குறிச்சி ஸ்ரீ பாரதி மகளிர் கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரியில், மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக ,நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திய மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் கவிதாராமு தலைமையில் நடைபெற்றது.
இந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 112 நிறுவனங்கள் பங்கேற்றன. இம்முகாமில் பதிவு செய்ய 2,768 பேர் கலந்துகொண்டனர்.
இதில் தேர்வு செய்யப்பட்ட 535 பேருக்கு பணிநியமன ஆணைகளை, தமிழக சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் (09.04.2022) வழங்கினர்..
இதில், சட்ட அமைச்சர் ரகுபதி பேசியதாவது;
தமிழகத்தை அனைத்துத்துறைகளிலும் முன்னேற்ற வேண்டும் என்ற அடிப்படையில் இளைஞர்களின் தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில், புதிய தொழில் முதலீடுகளை ஈர்த்து தொழில் வளம் மிக்க மாநிலமாக தமிழகத்தை மாற்றிட முழு மூச்சுடன் முதலமைச்சர் செயலாற்றி வருகிறார்.
கடந்த 10 மாதங்களில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 2,000 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை அரசு மூலமாக ஏற்படுத்தித்தரப்பட்டுள்ளது. மேலும் தொழில் வளத்தை முன்னேற்றும் வகையில் அதற்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும் தமிழ்நாடு முதலமைச்சர் ஏற்படுத்தி வருகிறார்.
எனவே இளைஞர்கள் அனைவரும் இந்த வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டு தங்களது எதிர்கால வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.
சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன் பேசியதாவது;
மக்களாட்சி தத்துவத்தை நிலை நிறுத்தும் வகையில் விளிம்பு நிலை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையிலும் பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார்.
அதன்படி இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் புதிய தொழிற்சாலைகளை உருவாக்குவதற்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும், அதற்கு தேவையான பணிகளையும் மேற்கொண்டு வருகிறார்.
பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இதுபோன்ற திட்டங்களை இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
இம்முகாமில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா , மாவட்ட வருவாய் அலுவலர் கே.கே.செல்லபாண்டியன் அவர்கள், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குநர் ரேவதி,.
மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயலட்சுமி, திருவரங்குளம் ஒன்றியக்குழுத் தலைவர் வள்ளியம்மை தங்கமணி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர் கோகுலகிருஷ்ணன், ஸ்ரீ பாரதி மகளிர் கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரி தலைவர் குரு. தனசேகரன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.