1838 -ல் சமயப்பணி தொடர்பாக இந்தியா வந்த ராபர்ட் கால்டுவெல் தமிழின் அழகியலை அறிந்து, அவர் தமிழைக் கற்பதற்காகச் சென்னையில் சில காலம் தங்கி மொழியைத் திறம்பட பயின்றதாக தரவுகள் சொல்கின்றன.
வட்டார வழக்கு மொழிகளைக் கொண்டது தமிழ் என்பதால், பேச்சு வழக்கை அறியவும், அதன் மூலத்தை தெரிந்து கொள்ளவும் தமிழகத்தின் பல பகுதிகளுக்கு பயணத்தை வடிவமைத்துக் கொண்டு தமிழ் மொழியில் உள்ள வட்டார மொழிகளை கண்டறிந்தார்.
தமிழ் மற்றும் ஏனைய திராவிட மொழிகள் உட்பட்ட எல்லா இந்திய மொழிகளுக்கும் தாய் சமஸ்கிருதமே என்கிற கருத்து பரவலாக்கப்பட்ட கால கட்டத்தில், அதை மறுத்து திராவிட மொழிகளின் தொன்மையையும், சிறப்பையும் தகுந்த சான்றுகளுடன் நிறுவி அவற்றுக்குரிய தனிப் பெருமையை உலகுக்கு உணர்த்திய பெருமையும், 1856 -ஆம் ஆண்டில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நூல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தை சாரும். தென்னிந்தியாவில் பேசப்படும் பல்வேறு மொழிகள் தொடர்பான ஒப்பீட்டு ஆய்வு நூல் இது.
தமிழ், சமஸ்கிருதத்துக்கு புறம்பான தனியான ஒரு மொழிக் குடும்பம் என்பது மட்டுமன்றி இம் மொழிகளிலிருந்து சமஸ்கிருதமும், பிற இந்திய மொழிகள் பலவும் கூட சொற்களைக் கடன் வாங்கியுள்ளன என்றும் இந்த நூல் எடுத்துக் காட்டுகின்றது
ராபர்ட் கால்ட்வெல், ஷெல்டன் பொல்லாக், ஜார்ஜ் ஹார்ட் உட்பட நம் தமிழறிஞர்கள் பலராலும் முன்னெடுக்கப்பட்ட மொழிகளின் தொன்மை பற்றிய ஆய்வுகள் தெளிவை தந்தது, முடிவை அல்ல. அன்றைய காலக்கட்டத்தில் அவர்கள் ஆய்வுக்காக எடுத்துக்கொண்ட நூல்கள் தந்த குறிப்புகளை வைத்து மட்டுமே முடிவுக்கு வர இயலாது.
உயிரின் தோற்றம் போன்றே மொழியின் மீதான ஆராய்ச்சிகளுக்கும், அதற்கான தொடக்கமும் முடிவுகளும் இல்லை. கிடைக்கக்கூடிய தரவுகள் தவிர்த்து பல கருதுகோள்களை உள்ளடக்கிய அனைத்து ஆராய்ச்சி செயல்களின் நம்பகத்தன்மையும் அனுமானங்களும் நூறு சதவிகிதம் துல்லியமானதாக இருப்பதற்கு வாய்ப்பில்லை.
இது இப்படி இருக்க, இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு நாம் நம் மொழி பெருமையையும் தொன்மையையும் பேசி திரிய போகிறோம். பல படையெடுப்புகளை, பல கலாசார மாற்றங்களை எதிர்கொண்டு வந்திருக்கிற மொழி நம்முடையது.
நம் மொழி அழியாது என்கிற அசாத்திய நம்பிக்கை, அதன் தொன்மையையும் செழுமையையும் வைத்து சொல்லிவி டலாம். ஒரு மொழியை பேசுகிறவர்கள் அந்த மொழியை அவர்கள் வாழும் தலைமுறையில் கொண்டாட வேண்டும், அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்ல அடித்தளம் அமைக்க வேண்டும். இவை தான் இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு, நம் மொழியை உயிரோட்டத்துடன் வைக்க வழிச்செய்யும்.
ஒருபுறம் தமிழ்மொழி அதன் புதிய நிலையை வெற்றிகரமாக கடந்து வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது… அதன் மறுபுறம் ஒரு கூட்டம் தன் மொழியை இழந்து தன் தலைமுறை களை அகதிகளாக்கி கொண்டிருக்கிறது… தன் தாய்நாட்டை இழந்தவன் அகதி அல்ல… தன் அடையாளத்தை இழந்தவனே அகதி ஆவான்…
இந்த தாய்மொழியை இழக்கும் கூட்டம் உலகின் ஒவ்வொரு மொழியிலும் இருக்கிறது. ஒரு கட்டத்திற்கு மேல் இவர்கள் தான், சுற்றுப்புறம் வழங்கும் ஒரு மொழியை தன் தாய்மொழி என்று ஏற்றுக்கொண்டு, தான் வந்த வரலாறு மறந்து சூழல் தந்த வாழ்க்கையை வாழ்ந்து விட்டு செல்கிறார்கள்.
தாய் மொழியை கற்காத ஒரு தலைமுறை நம் கண் முன்னரே வளர்ந்து வருகிறது என்பதையும் எளிதாய் கடந்து செல்ல முடியவில்லை.
இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋