Close
நவம்பர் 22, 2024 12:21 காலை

பகத்சிங் பிறந்த நாள் இன்று… இந்திய வரலாற்றில் தவிர்க்க முடியாத மாவீரன்…

பதக்சிங்

மாவீரன் பகத்சிங்கின் பிறந்த நாள் இன்று

பகத்சிங் வாழ்ந்த வாழ்க்கை காலம் குறுகியது என்றாலும், இன்று பல ஆண்டுகளை கடந்து, இறப்பதன் மூலமாகவும் ஒரு சகாப்தத்தினை உருவாக்க முடியும் என வாழ்ந்துக் காட்டிய பகத் சிங்.பல தசாப்தங்கள் கடந்தும் பேசப்படுகிற இந்த சிங்கத்தை தவிர்த்து விட்டு இந்திய வரலாற்றை எழுத முடியாது.

ஒரே ஒரு ஆங்கிலேய காவல் அதிகாரியின் மரணத்திற்கு, ஐந்து வருடங்கள் காத்திருந்து குரூரமாகப் பழிவாங்க, ஆங்கிலேயரின் சொந்தங்கள் துடித்ததென்றால், ஒட்டுமொத்த நாட்டையே அடிமையாக்கி எண்ணற்ற மக்களை ஈவிரக்கமின்றி கொன்ற ஆங்கிலேய காலணியாதிக்க வெறியர்களைப் பழிவாங்கினால் என்ன தவறு என்பதை ஒரு தர்க்கரீதியில் யோசிக்கிறபோது, இந்த புள்ளியில் தான் ஆயுதப்போராட்டமும், விடுதலைக்கான போரில் தவிர்க்க முடியாத போர்முறை என்பதை நியாயப்படுத்த வேண்டியுள்ளது.

புரட்சி என்பது எளிய மக்களை கொல்வது அல்ல என்கிற பகத் சிங்கின் வரிகளால் அதை ஊர்ஜிதப்படுத்திக்கொள்ளலாம். நாட்டின் விடுதலைக்காக, இனத்துக்காக போராடுகிற எந்த மாவீரனின் போர்முறையிலும் அடிப்படை நாதமாக அந்த வரிகள் தான் ஒலித்துக்கொண்டிருக்கும்.

போராளிகள் எழுதிய கடிதங்கள் எல்லாம், என்றும் போற்றுதலுக்குரியவை. தான் சிறையில் வாழ்ந்த காலத்தில் அடிப்படை வசதிகளே இல்லாத சூழலில் அடைந்த அவஸ்தைகளை ஒருபோதும் அவர் எழுதிய கடிதங்களில் வெளிப்படுத்தியதில்லை. மாரக்சின் மூலதனத்தில் இருந்து, ரூசோவின் சமுதாய ஒப்பந்தத்திலிருந்து, லெனினின் தத்துவங்களிருந்து, வால்ட்விட்மெனின், உமர்கய்யாமின் கவிதை வரிகளிலிருந்து என்று, தான் வாசித்தவற்றை பதிவு செய்கிறான் பகத் சிங்.

இதைப்போன்றே சேகுவேரா தன் மகளுக்கு எழுதிய கடிதத்தையும், தேச உணர்ச்சிகள் மற்றும் புரட்சிகர எண்ணங்களின் கூட்டு கலவைக்கு இன்னொரு உதாரணமாக கொள்ளலாம்.
மதத்தின் பெயரால் நடக்கும் வன்முறைகள் மற்றும் மதவாதம் ஒழிய மக்களுக்கு தெளிவை உண்டு செய்ய வேண்டும் என்றும் பல வருடங்களுக்கு முன்பே இருபது வயது இளைஞன்
ஒருவன் பதிவு செய்திருக்கிறான் என்பதை நம்பத்தான் வேண்டும்.

நம்புகிற நம் கண்களுக்கு முன்பாக, மதத்தின் பெயரால் நடைப்பெறும் வன்முறை நடந்தவண்ணமாக தானிருக்கிறது.. If the deaf have to hear, the sound has to be very loud என்கிற அவருடைய வரிகள், நம்மிடையே வாழும் போராளிகளின் செவிகளில் ஒலிக்காமலில்லை..என்றும் பகத் சிங் அவர்களுக்கு முன்மாதிரியாக முந்திக்கொண்டு வருவார்.

சாவதற்கு முன், கொஞ்ச நேரம் கொடுங்கள் வந்து விடுகிறேன் என்று சொன்ன பகத் சிங், தூக்கு மேடையில் தண்டனை நிறைவேற்றுவதற்காக அனைவரும் காத்திருக்கையில் கொஞ்சம் தாமதாக தான் வந்தார். இறுதிவரை நாத்திகனாக இருந்த அவர் அந்த இடைவெளியில் என்ன செய்தார் என அனைவரும் யோசித்தனர்.

“ஒரு புரட்சியாளன் இன்னொரு புரட்சியாளன் உடன் பேசிக்கொண்டு இருக்கிறேன், வந்து விடுகிறேன்!” என்றார் . ஆம்..அவர் கையில் இருந்தது லெனின்  எழுதிய  அரசும் புரட்சியும் என்ற நூல் தான்.

…இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top