இந்தியக் கடலோரக் காவல் படையினருக்கு அமெரிக்க கடலோரக் காவல் படையின் நடமாடும் பயிற்சிக் குழு நடத்திய 12 நாள் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.
இது குறித்து பாதுகாப்பு அமைச்சகம் சனிக்கிழமை வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்திய கடலோரக் காவல் படையினருக்கு அமெரிக்க கடலோர காவல்படையினர் சார்பில் சிறப்பு பயிற்சி முகாம் சென்னையில் நடைபெற்றது. 12 நாள்கள் நடைபெற்ற இப்பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.
இதில் ரோந்துப் பணியின்போது மேற்கொள்ள வேண்டிய பல்வேறு உத்திகள், போதைப்பொருள் தடுப்பு, கடத்தல் எதிர்ப்பு, மனித கடத்தல் எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் கடலில் எதிர்கொள்ளக்கூடிய பிற கடல்சார் பாதுகாப்பு சவால்களின் போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் உள்ளிட்டவைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
மேலும் எழுத்து தேர்வு மற்றும் ரோந்துக் கப்பல்கள் மூலம் ஒத்திகை நிகழ்வுகள் மூலம் கூடுதல் பயிற்சியும் அளிக்கப்பட்டது. இப்பயிற்சி முகாமில் ஐந்து பிராந்தியங்களைச் சேர்ந்த கடலோரக் காவல் படை அதிகாரிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இப்பயிற்சியை பெறுவதன் மூலம் இந்திய கடல்சார் பகுதிகளில் ரோந்துப் பணியின்போது புதிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி பாதுகாப்பு பணிகளை பலப்படுத்திடவும், இருநாடுகளிடையே நல்லுறவு, ஒத்துழைப்பு உள்ளிட்டவைகளை மேம்படுத்தவும் உதவிகரமாக இருக்கும்.
பயிற்சி முகாம் நிறைவு விழா கடலோரக் காவல் படை விமான தளத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் அமெரிக்க துணைத் தூதரகத்தின் அரசியல், பொருளாதாரத் துறை தலைவர் விர்சா பெர்கின்ஸ், கடலோரக் காவல்படையின் கிழக்குப் பகுதி டி.ஐ.ஜி. சதீஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.