Close
செப்டம்பர் 20, 2024 1:42 காலை

ஜம்மு காஷ்மீரை ஆளப்போவது யாரு..? எகிறிக்கிடக்கும் எதிர்பார்ப்பு..!

ஜம்மு காஷ்மீர் தேர்தல் 2024 (கோப்பு படம்)

மூன்று கட்டங்களாக நடக்கவுள்ள ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தல் பணிகள் ஜரூராக நடந்து வருகிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்துக்கான சட்டப்பிரிவு 370 நீக்கம் செய்யப்பட்ட பின்னர் மாநில அந்தஸ்தும் நீக்கப்பட்டு அது யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. இந்த சூழலில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் ஜம்மு காஷ்மீருக்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.

ஜம்மு காஷ்மீரில் மொத்தம் 90 தொகுதிகள் உள்ளன. இதில், ஜம்மு பிராந்தியப்பகுதியில் 43 தொகுதிகளும், காஷ்மீர் பள்ளத்தாக்குப்பகுதியில் 47 தொகுதிகளும் உள்ளன. இந்த 90 தொகுதிகளுக்கும் செப். 18, செப். 25 மற்றும் அக். 1 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை அக். 8ம் தேதி நடைபெறஉள்ளது.

இந்தத் தேர்தலில் மெகபூபா முப்தியின் காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி, பா.ஜ.க., காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி புதிதாய் கட்சி ஆரம்பித்த முன்னாள் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத்தின் ஜனநாயக முன்னேற்ற ஆசாத் கட்சி, ஆம் ஆத்மி, பகுஜன் சாம்ஜ் உள்ளிட்ட கட்சிகள் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளன.

அதேபோல், காங்கிரஸ், பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சி, சி.பி.எம்., பாந்தரஸ் ஆகிய கட்சிகள் ஒரு கூட்டணியாக போட்டியிடுகின்றன. இதில், காங்கிரஸ் 32 தொகுதிகளிலும், தேசிய மாநாட்டுக் கட்சி 51 இடங்களிலும், சி.பி.எம். மற்றும் பாந்தரஸ் ஆகிய கட்சிகள் தலா ஒரு இடத்திலும் போட்டியிடுவதாக கூட்டணி முடிவாகியுள்ளது.

இந்தக் கூட்டணியில் ஐந்து தொகுதிகளில் காங்கிரசுக்கும், தேசி மாநாட்டு கட்சிக்கும் இடையே உடன்பாடு ஏற்பாடாததால் அந்தத் தொகுதிகளில் இரு கட்சிகளுமே தனித் தனியாக வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.

சிறப்பு மற்றும் மாநில அந்தஸ்துகள் நீக்கிய பின் நடக்கும் முதல் தேர்தல், யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட பிறகு நடக்கும் முதல் தேர்தல் என்ற இரண்டு கோணங்களில் கவனம் பெற்றுள்ள ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தபின்னர் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு நடக்கும் முதல் தேர்தல் என்பதால் பாஜக மீது அதிக கவனம் விழலாம் என்று ஒருதரப்பினர் கருதுகின்றனர். அதேபோல ஆட்சியை பிடிப்பதற்காக எல்லா கட்சிகளும் தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்துள்ளதும் மக்களிடம் கவனம் பெற்றுள்ளன.

காங்கிரசுடன் கூட்டணியில் இருக்கும் தேசிய மாநாட்டுக் கட்சி, ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்டத்தின் சிறப்பு பிரிவுகளை மீண்டும் கொண்டுவருவோம். பிரச்சனைகளுக்கு தீர்வு காண பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம்’ என்று கூறியுள்ளது.

காங்கிரஸ் கட்சி, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 3000, மீண்டும் மாநில அந்தஸ்து உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்துள்ளது.

அதேபோல பாஜகவும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அப்போது பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, காஷ்மீரில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க வகைசெய்யும் தேசிய மாநாட்டு கட்சியின் நிலைப்பாட்டை காங்கிரஸ் ஆதரிக்கிறதா என்று கேள்வி எழுப்பினார்.

அதேபோல், தேர்தல் முடிந்த பிறகு மாநில அந்தஸ்து அளிப்பது குறித்து பரிசலிக்கப்படும் என ஏற்கனவே அறிவித்துள்ளோம். அதேபோல், மாநில அந்தஸ்து மத்திய அரசால் மட்டுமே வழங்க முடியும். மாநில அரசால் அது முடியாது என தெரிவித்திருந்தார்.

பாஜக தேர்தல் வாக்குறுதிகளாக விவசாயிகளுக்கு வழங்கப்படும் ஆண்டு உதவித் தொகை ரூ. 6 ஆயிரத்தில் இருந்து ரூ. 10 ஆயிரமாக உயர்த்தப்படும். மிகவும் வயதான பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ. 18,000 வழங்கப்படும், சேதப்படுத்தப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்கள் சீரமைக்கப்படும், ஆண்டுக்கு 2 சமையல் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் போன்றவை பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படியாக ஜம்மு காஷ்மீரில் ஆட்சியைப் பிடிக்க கட்சிகள் வாக்குறுதிகளை அள்ளிக் கொடுத்துள்ளன. மேலும், எல்லாக்கட்சியினரும் ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து மீண்டும் வழங்குவது குறித்தும், பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவருவது குறித்தும் பேசியுள்ளன.

மூன்று கட்டங்களாக நடக்கவுள்ள வாக்குப்பதிவு ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வரும் அக். 8ம் தேதி நடைபெறஉள்ளது. அக். 8ம் தேதி ஜம்மு காஷ்மீர் மக்கள் எந்தக் கட்சிக்கு ஆதரவை தரப்போகிறார்கள் என்பது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம், ஜம்மு காஷ்மீருக்கு அரசாளும் உரிமை யாருக்கென்று?

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top