Close
நவம்பர் 21, 2024 11:44 மணி

நவராத்திரியையொட்டி உச்ச நீதிமன்ற உணவகத்தில் அசைவம் ‘கட்’..! கொதித்த வழக்கறிஞர்கள்..!

உச்ச நீதிமன்றம் (கோப்பு படம்)

நவராத்திரி விழா இன்று (3.10.2024) முதல் ஆரம்பமாகி உள்ளது. இந்த விழாவை கொண்டாடும் பெரும்பாலானவர்கள் ஒன்பது நாளும் தங்கள் வீடுகளில் கொலு வைத்து தினமும் மாலை வேளைகளில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்வார்கள். ஒன்பதாவது நாள் கோயில்களில் சிறப்பு பூஜைகளும் நடைபெறும். இந்த நிலையில், உச்சநீதிமன்ற உணவகத்தில் நவராத்திரியை முன்னிட்டு பெரும் சர்ச்சை ஒன்று ஏற்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற வளாகத்தில் அங்கு பணியாற்றும் பணியாளர்களுக்கென உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த உணவகத்தில் அனைத்து விதமான உணவும் பரிமாறப்பட்டுவந்தது. அதாவது சைவ மற்றும் அசைவ உணவுகள் வழங்கப்பட்டு வந்தது.

தற்போது நவராத்திரி விழா இன்று துவங்கியதை அடுத்து உணவகத்தில் அசைவ உணவு வழங்கப்படமாட்டாது என்றும், பூண்டு மற்றும் வெங்காயம் ஆகியவை உணவில் சேர்க்கப்படாது என்றும் அறிவித்திருப்பதாக கூறுகிறார்கள்.

இந்த நடவடிக்கைக்கு கவலை தெரிவித்து உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் பதிவு சங்கத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அந்தக் கடிதத்தில், “இதுவரை நடந்த நவராத்திரி காலங்களில், நவராத்திரி பூஜை அனுசரிப்பவர்கள் தங்கள் நவராத்திரி உணவுகளை வீட்டில் இருந்து கொண்டுவருவார்கள். மற்றவர்களுக்கு உணவகத்தில் எந்த கட்டுப்பாடும் கிடையாது. இதுநாள் வரை இந்த மரபுதான் பின்பற்றப்பட்டு வந்தது.ஆனால், இந்த ஆண்டு நவராத்திரியில் அந்த மரபு மாறியுள்ளது. தற்போது வெறும் நவராத்திரி உணவு மட்டுமே வழங்க உணவகம் முடிவு செய்துள்ளது.

உச்ச நீதிமன்ற உணவகம் அனைவருக்குமானது. நாம் அனைவரும் அதைச் சார்ந்து இருக்கிறோம். ஒரு சிலரின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வதற்காக அசைவம் அல்லது வெங்காயம்-பூண்டுடன் உணவைப் பரிமாறாதது நமது பன்மைத்துவ மரபுகளுக்குப் பொருந்தாத ஒன்றாகும். மேலும் ஒருவருக்கொருவர் மரியாதை இல்லாமல் போகும் நிலை ஏற்படும்.

எனவே உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் பதிவு சங்கம், உச்சநீதிமன்ற உணவகத்தில் வழக்கமாக வழங்கப்படும் உணவையே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தக் கட்டுப்பாடுகள் ஒரு தவறான முன்னுதாரணத்தை முன்னெடுக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த மாற்றத்தை அனுமதிப்பது எதிர்காலத்தில் மேலும் பல திணிப்புகளுக்கு வழிவகுக்கும் என்றும், உச்ச நீதிமன்ற உணவகம் நீண்டகாலமாக நிலைநிறுத்தி வரும் பன்முகத்தன்மை மற்றும் பன்மைத்துவத்தை மீறும் சாத்தியம் இருப்பதாகவும் கடிதத்தில் வழக்கறிஞர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

அனைத்து தனிநபர்களின் உணவு விருப்பங்களும் மதிக்கப்படுவதை உறுதிசெய்யும் வகையில், நவராத்திரி உணவுடன் உச்சநீதிமன்ற உணவகத்தில் வழக்கமான உணவு முறையையும் பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top