18 வயதை தாண்டிய மனைவியுடன் கணவன் கட்டாய உறவில் ஈடுபடுவது பாலியல் வன்கொடுமை அல்ல என்பதுதான் நாடாளுமன்றத்தின் கருத்து என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
மனைவியை கட்டாயப்படுத்தி தாம்பத்திய உறவு கொள்வது கூட குற்றம்தான் என அறிவிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், முரண்பட்ட தீர்ப்பை வழங்கியது. இதனையடுத்து மனுதாரர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த மேல்முறையீட்டு மனு, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்சுக்கு விசாணைக்கு வந்தது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்திருந்தது.
அந்தப் பிரமாணப் பத்திரத்தில், ‘‘திருமண உறவில் பாலியல் வன்கொடுமையைக் குற்றமாக்குவது திருமண உறவுகளை பாதிக்கும். அவ்வாறான பாதிப்புகள் சமூகத்தில் கடுமையான குழப்பங்களுக்கும் இடையூறுக்கும் வழிவகுக்கும். எனவே கணவனுக்கான சட்டப் பதுகாப்பு நீடிக்க வேண்டும். அதனால் இதை குற்றமாகக் கருதுவது சரியல்ல’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தலைமை நீதிபதி அமர்வுக்கு முன்பு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தன. அப்போது இந்திய ஜனநாயக மகளிர் சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கருணாநிதி, “பாலியல் உறவில் பெண்ணின் சம்மதம் என்பது மிகவும் முக்கியம். கணவனுக்கு சட்ட பாதுகாப்பு அளிக்கும் சட்டப்பிரிவு ரத்து செய்யப்படவேண்டும்” என்று வாதிட்டார்.
அவரது வாதத்திற்கு பதில் அளித்த நீதிபதிகள், “சட்டப் பாதுகாப்பு அளிப்பதை ரத்து செய்துவிட்டால், அதன்பிறகு கட்டாய உறவில் ஈடுபடும் கணவர்களை பாலியல் வன்கொடுமை சட்டப்பிரிவின் கீழ் விசாரிக்க வேண்டுமா அல்லது இதற்கென தனியான குற்றத்தை கோர்ட்டு உருவாக்க வேண்டுமா என்பது குழப்பமாக உள்ளது.
கணவனுக்கான சட்டப்பாதுகாப்பு அரசியல் சாசனம் அளிக்கும் சமத்துவ உரிமை, வாழ்வுரிமை, தனியுரிமை ஆகியவற்றை மீறுவதாக நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால், இந்த சட்டப்பிரிவை நிறைவேற்றிய போது, 18 வயதை தாண்டிய மனைவியுடன் கணவன் கட்டாய உறவில் ஈடுபடுவது பாலியல் வன்கொடுமை அல்ல என்பதுதான் நாடாளுமன்றத்தின் கருத்து.
இது அரசியல் சாசனம் சம்பந்தப்பட்ட பிரச்னை. எங்களுக்கு முன் இரண்டு தீர்ப்புகள் உள்ளன. கணவனுக்கு சட்டப் பாதுகாப்பு அளிக்கும் சட்டப் பிரிவு செல்லுமா என்பதுதான் இப்போதைய மையப் பிரச்னை. அதுபற்றி முடிவு செய்வோம்” எனத் தெரிவித்துள்ளனர். மேலும், மத்திய அரசின் மனுவுக்கு பதில் அளிக்குமாறு மனுதாரர்களை நீதிபதிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.