Close
நவம்பர் 14, 2024 4:44 மணி

ஒரு மனைவியின் போர்முனை கொந்தளிப்புகள்..! எப்படி இருக்கும்..?

இந்திய விமானப்படை விமானம் -கோப்பு படம்

திருமணமான அன்றே கணவனை போர்க்களத்திற்கு ஒரு மனைவி அனுப்புகிறாள் என்றால், அவளுக்கு எப்படியான ஒரு மனதைரியம் இருக்கவேண்டும் என்று எண்ணிப்பாருங்கள். அப்படியான ஒரு சம்பவத்தை படித்துப்பாருங்கள்.

“போர் முனைக்காதல்”

ராகுலுக்கும் ரூஹிக்கும் திருமணமாகி நான்கு மணி நேரம்தான் ஆகி இருந்தது. திருமண சம்பிரதாயங்கள் முடிந்த சில மணி நேரங்களில் இருவரும் அவரவர் பொருட்களை பேக் செய்ய ஆரம்பித்தனர். பேக் செய்யும் போது ரூஹிக்கு கண்களில் கண்ணீர் பொங்கி வந்தது. இருவரும் எதுவும் பேசிக்கொள்ளாமல் ஏதோ பெரிய சம்பவம் நடந்ததைப் போல தங்கள் பொருட்களைக் கட்டிக் கொண்டிருந்தனர்.

ராகுலின் சகோதரி வீட்டிற்குள் ஓடி வந்து, தனது சகோதரன் ராகுலும் ரூஹியும் தங்கள் பைகளை பேக் செய்து கொண்டிருப்பதை குடும்பத்தினரிடம் கூறினாள். இதைக் கேட்டதும் அனைவரும் புதுமண தம்பதிகளின் அறைக்கு ஓடி வந்து வெளியே நின்றார்கள்.

ராகுலின் அம்மா கதவைத் தட்டி, “மகனே, ராகுல்.. என்ன நடந்தது? என்னிடம் சொல்லாமல் தேனிலவுக்குச் செல்ல பேக் செய்கிறாயா..?” என்று கேட்டார்.

ரூஹி மற்றும் ராகுல் இருவரும் உண்மையில் இந்திய விமானப்படையில் உள்ளனர். மேலும் இருவரும் ஒரு ரகசிய பணிக்காக விடுப்பில் இருந்து உடனே திரும்ப  தலைமையகத்தில் இருந்து அழைக்கப்பட்டுள்ளனர். அதனால், ராகுலும் ரூஹியும் விமானப்படைத் தளத்திற்குத் திரும்பவேண்டும்.

இருவரும் உறவினர்களிடம் கூறிவிட்டு விமானப்படைத் தளத்துக்கு திரும்பிவிட்டனர். அடுத்தநாள் ராகுல் எதிரிகளை வீழ்த்துவதற்கு அவர்களின் மறைவிடத்தில் குண்டுகளை வீச வேண்டும். அதுதான் அவனுக்கு கொடுக்கப்பட்டுள்ள ஆபரேஷன்.

.கோப்பு படம்

அன்று இரவு மனைவி ரூஹி கணவன் ராகுலிடம், ‘ராகுல், இனிமேல் நீதான் என் உயிர். ஆனால் நான் வைத்துள்ள உன்மீதான காதல் உனது பலவீனமாக மாறிவிடக்கூடாது. எப்போதும் தைரியமாக இரு. எதிரியை தோற்கடித்த பின்னரே திரும்பி வரவேண்டும். நீ வந்த பின்னர் நான் உன்னை இங்கே சந்திக்கிறேன். உன்னைக் கட்டித் தழுவ உனக்காக காத்திருக்கிறேன்’ என்றாள் கண்ணீரை மறைத்துக்கொண்டு கம்பீரமாக.

“ஒருவேளை எனக்கு ஏதாவது நடந்துவிட்டால்.. என்ன செய்வது?” என்றான் ராகுல்.

அப்போதும் நான் வெள்ளை நிற புடவை அணிந்துகொண்டு இங்குதான் இருப்பேன். உன் தியாகத்தை நினைத்து பெருமைப்படுவேன்.” என்றாள் ரூஹி அழுகையை அடக்கியவாறு.

மறுநாள் எதிரிகளின் கூடாரத்தை நோக்கி ராகுல் புறப்பட்டுவிட்டான். அவனது விமானத்துடன் மேலும் இரண்டு போர் விமானங்கள் புறப்பட்டன. ஒரு போர் விமானம் குண்டுகளை வீசி விபத்துக்குள்ளானது. விமானம் விபத்துக்கு உள்ளானதால், விமானப்படை தளத்தில் ஒருவித அமைதி நிலவியது.

மோசமான வானிலை காரணமாக மற்ற விமானத்துடனான தொடர்புகளும் துண்டிக்கப்பட்டது. இதற்கிடையில், ராகுலின் போர் விமானம் வெடிகுண்டுகளை எதிரிகளின் கூடாரத்தில் வீசியதாக ஒரு தகவல் வருகிறது. எல்லோரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

திடீரென ராகுலின் விமானத்துடனான அனைத்து தொடர்பும் துண்டிக்கப்பட்டுவிட்டது. இதையறிந்த ரூஹியின் இதயம் வேகமாக துடித்தது. நெஞ்சம் ஏனோ விம்மிப்புடைத்தது. “என்ன ஆனதோ தெரியவில்லையே..?: என்று மனதுக்குள் அழுதாள். அவளின் உள்ளுக்குள்ளான அழுகை மூக்கு சிவந்து விரிவடைவதில் தெரிந்தது.

அத்தகைய இறுக்கமான சூழ்நிலையில், 2 போர் விமானங்கள் தரையிறங்கின. ரூஹிக்கு மீண்டும் மனதுக்குள் தைரியம் எழுந்தது. ஆனால் ராகுலின் போர் விமானம் இரண்டு மூன்று மணி நேரமாகியும் தொடர்பும் இல்லை. மீண்டும் வரவும் இல்லை. ரூஹி உடைந்து போனாள். அவள் கடமையில் இருப்பதால் அவளால் அழ முடியவில்லை. அவள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு காத்திருந்தாள். கண்கள் மட்டும் சிவந்து காணப்பட்டது.

நீண்டநேரமாகியும் ராகுல் திரும்பாததால் ராகுலின் மறைவுச் செய்தி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், விமானப்படை தளத்தில் திடீரென விமானம் ஒன்று தென்பட்டது. அந்த விமானம் ராகுல் ஒட்டிச் சென்ற விமானம். ராகுலுக்கு முற்றிலும் காயம் ஏற்பட்டிருந்தது. ஆனாலும் விமானத்தை எந்த சிக்கலும் இல்லாமல் தரையிறக்கினான் என்பது மகிழ்ச்சியான விஷயம்.

பலத்த காயங்களுடன் விமானத்தில் இருந்து இறங்கிய ராகுலை நோக்கி ஓடிய ரூஹி ராகுலை கட்டி அணைத்துக் கொண்டாள். அவனது காயங்களில் இருந்த குருதியுடன் அவளது கண்ணீர் ஒன்று சேர்ந்தது. ஆனாலும் ராகுலுக்கு காயங்களின் மீதான கண்ணீரின் எரிச்சல் தெரியவில்லை. மனைவியின் அன்புதான் மேலோங்கி இருந்தது. அவன் விமானப்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுத் திரும்பினான்.

அந்த போரில் தீரமாக போராடிய ராகுலுக்கு வீர் சக்ரா விருது கிடைத்தது. விருது கிடைத்தபின்னர் ராகுலிடம், உங்கள் சாதனைக்கான உத்வேகம் யார்? என்ற கேள்வி கேட்கப்பட்டது.

தயங்காமல் அடுத்த நொடியே,”என் மனைவி ரூஹி தான் எனக்கு இன்ஸ்பிரேஷன்” என்று ராகுல் கூறினான். ‘அவள் தன்னைத்தானே தேற்றிக் கொண்டது மட்டுமல்லாமல் எனக்கும் தைரியத்தைக் கொடுத்தாள். அவளின் நம்பிக்கையால்தான் நான் உயிருடன் திரும்ப முடிந்தது.இன்று உங்கள் முன்னால் நிற்கமுடிகிறது.” என்றான் பெருமையாக. ரூஹியின் கண்களின் ஓரத்தில் கண்ணீர் துளித்திருந்தது.

ஒரு இந்தியப் பெண்ணால் மட்டுமே இந்த அளவு வலிமையாக இருக்க முடியும். ஒரு தாயாகவும், மண்ணுக்காக உயிரைக் கொடுக்கவும், தன்னையே தியாகம் செய்யவும் ஒரு இந்தியப்பெண்ணால் மட்டுமே முடியும். அதுவே அவளுக்கான வலிமை. அதுவே அவளது ஆளுமை.

திருமணம் என்பது இருவரை இணைக்கும் உறவு மட்டுமின்றி ஒருவரை மற்றவருக்கு பாதுகாப்புக் கேடயமாக்கி, இருவரும் இணைந்து வாழ்வதற்கான ஒரு காரணத்தைத் தருகிறது என்பது உண்மைதான்.

இந்தியப் பெண்களும் அவர்களின் தைரியமும் கிடைக்கப்பெற்றவர்கள் பாக்கியவான்கள்.

வாழ்க இந்தியா.!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top