முதன் முதலில் இந்தியாவில் ரூபாய் அறிமுகமானது எப்படி என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.
உலகில் பயன்படுத்தப்படும் நாணயங்கள் வரிசையில் இந்தியாவின் பங்கு மிகப்பெரியது. பண நடைமுறை இல்லாத காலகட்டத்தில் பண்டமாற்று முறையில்தான் வணிகம் செயல்பாட்டு நடவடிக்கைகள் நடந்து வந்தன. மௌரிய பேரரசர் காலத்தில்தான் வெள்ளி நாணயம் கொண்டுவரப்பட்டது. காலப்போக்கில் இது செப்பு, தங்கம் என பல்வேறு வடிவங்களாக மாற்றம் பெற்று பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.
டெல்லியை ஆட்சிசெய்து வந்த ஷெர்ஷா சூரி கி.பி.1540ம் ஆண்டில் ‘ரூபியா’ என்று சொல்லக்கூடிய 11.5 கிராம் எடையிலான வெள்ளி நாணயத்தை அறிமுகப்படுத்தினார். ரூபியா என்பதன் பொருள் ‘வார்க்கப்பட்ட வெள்ளி’ என்பதாகும்.
அதுவே காலப்போக்கில் சிறிது சிறிதாக மருவி ‘ருபி’ என்றாகி பின்னர் , ‘ரூபாய்’ என தற்போது வரை தழுவி நிற்கிறது. சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே இந்தியாவில் ரூபாய் அதிகாரப்பூர்வமான பணமாக அறிவிக்கப்பட்டது.
இந்தியாவில் 1882ம் ஆண்டில் ஆங்கிலேயர்களால், முதல் முறையாகக் காகித நோட்டில் பணம் அறிமுகப்படுத்தப்பட்டது. தொடர்ந்து 19ம் நூற்றாண்டில் வெள்ளி நாணயமும் புழக்கத்திற்கு கொண்டுவரப்பட்டது.
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னரே அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களின் முயற்சியால், 1935ம் ஆண்டு ரிசர்வ் வங்கி அமைக்கப்பட்டது. அப்போது, ஆறாம் ஜார்ஜ் மன்னரின் உருவம் பொறிக்கப்பட்டு 5 ரூபாய்த் தாளை ஆர்.பி.ஐ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அதனால் இந்திய பொருளாதாரம் சர்வதேச அளவில் வளர்ச்சி கண்டது.
1947ம் ஆண்டு ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெற்றபின், அமெரிக்க டாலரின் மதிப்பு இந்தியாவில் ஒரு ரூபாய் என இருந்தது. விடுதலைக்கு பிந்தைய காலகட்டத்தில், இந்திய ரூபாய் 16 அணாக்களாக பிரிக்கப்பட்டு ஒரு அணாவின் மதிப்பு 4 பைசாக்களாகக் கணக்கிடப்பட்டது. பின்பு, 1957ம் ஆண்டு 100 பைசாக்கள் ஒரு ரூபாய் என, பண மதிப்பில் மாற்றம் கொண்டு வரப்பட்டது.
1960ம் ஆண்டுகளில் ஏற்பட்ட பண வீக்கம், இந்தியாவை நாணயங்கள் அச்சிடுவதில் இருந்து சில சிக்கலை ஏற்படுத்தியது. எனவே, இந்தியா அப்போது அலுமினிய உலோகம் பயன்படுத்தி நாணயங்களை அச்சிடத் தொடங்கியது.
1970ம் ஆண்டுகளில் எஃகு உலோகத்தில் 10 முதல் 50 பைசா வரையிலான நாணயங்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டன. 1954ம் ஆண்டு முதல் 1978ம் ஆண்டு வரைக்கும் இந்தியாவில் 5,000 மற்றும் 10,000 ரூபாய்த் தாள்களும் புழக்கத்தில் இருந்தன. அவைகளை பின்னர் ஏற்பட்ட பணவீக்கம் காரணமாக இந்திய ரிசர்வ் வங்கி தடை செய்தது.
தொடக்க காலத்தில் பணத்தில் 4 தலை கொண்ட சிங்கம் பொறிக்கப்பட்டுவந்த நிலையில், 1996ம் ஆண்டு முதல் காந்தியின் படம் பொறிக்கப்பட்டு வருகிறது.
தற்போது பைசாக்கள் திரும்பப்பெறப்பட்ட நிலையில், ரூபாய்கள் மட்டும் புழக்கத்தில் உள்ளன. அதுவும், 2016ம் ஆண்டு பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட போது 500 மற்றும் 1000 ரூபாய் இந்திய அரசால் திரும்பப் பெறப்பட்டது. பின்னர் புதிய வடிவத்தில் 500 ரூபாய் தாளும் புதிதாக 2000 ரூபாய் தாள்களும் வெளியிடப்பட்டன. அதன் பின்னர் புதிய நூறு ரூபாய் தாள்களும் 200 ரூபாய் தாள்களும் பயன்பாட்டிற்கு வந்தன.
தற்போது 2000 ரூபாய் தாள்களையும் இந்திய ரிசர்வ் வங்கி திரும்பப் பெற்று வருகிறது.
தற்போது ரூபாய் என்பதற்கு தனி சின்னம் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரூபாய் சின்னம் வடிவமைப்பு :
டி. உதய குமார் என்ற இளைஞர் இந்திய ரூபாய் சின்னத்தை வடிவமைத்தார் (₹). உதயகுமார், கள்ளக்குறிச்சியை சொந்த ஊராகக்கொண்டவர். அண்ணா பல்கலையில் பி.ஆர்க். படித்தவர்.
அதன் வடிவமைப்பு
இந்த சின்னம் தேவநாகரி எழுத்து “ரா” (र) மற்றும் செங்குத்து பட்டை இல்லாமல் ரோமானிய பெரிய எழுத்து “ஆர்” ஆகியவற்றின் கலவையாகும். மேலே உள்ள இரண்டு கிடைமட்ட கோடுகள் தேசியக் கொடியையும் “சமமான” அடையாளத்தையும் குறிக்கின்றன.
அது 2010ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி அன்று இந்திய அரசால் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.