Close
நவம்பர் 23, 2024 9:53 காலை

பிரதமரின் வித்யாலக்ஷ்மி திட்டம் வந்தாச்சு..! கல்விக்கடன் வாங்குவதும் ஈசியாச்சு..!

பிரதமரின் உயர்கல்விக்கான வித்யாலக்ஷ்மி திட்டம் -கோப்பு படம்

நமது நாட்டில் தரமான உயர்கல்வி அனைத்து மாணவர்களுக்கும் எளிதில் சென்றடையும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் இருக்கும் திறமையான மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கும் வகையில் பிரதமர் வித்யாலக்ஷ்மி (PM Vidyalaxmi) என்ற திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஏனெனில் சிறந்த மாணவர்களாக உருவாகவேண்டும் என்ற இலட்சியம் கொண்ட சிறந்த மாணவர்களுக்கு பணம் ஒரு தடையாக இருந்துவிடக் கூடாது என்ற உயரிய நோக்கத்துடன் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் சிறப்பு இத்திட்டத்தின் மூலம் வங்கிகளிடமிருந்து கடன் பெறுவதற்கு மாணவர்கள் எந்த உத்தரவாதமும் அளிக்கத் தேவை இல்லை. இந்த திட்டத்தின் கீழ், சிறந்த 860 தரமான உயர்கல்வி நிறுவனங்களில் (QHEIs) சேரும் மாணவர்களுக்கு எளிய முறையில் கல்விக்கடன் வழங்க வழிவகை செய்யப்பட்டுளளது.

மாணவர்களுக்காக பிரத்யேகமாக கொண்டுவரப்பட்டுள்ள இந்த திட்டத்தின் மூலமாக மாணவர்கள் வெளிப்படையான மற்றும் முற்றிலும் டிஜிட்டல் விண்ணப்பம் மூலம் கல்விக்கடன் பெறலாம். இதில், ரூ.7.5 லட்சம் வரையிலான கடன் தொகைக்கு, இந்திய அரசு 75சதவீத கடன் உத்தரவாதத்தை வழங்குகிறது.

அதனால் வங்கிகளும் அதிக நம்பிக்கையுடன் மாணவர்களுக்கு கடன் வழங்க முன்வரும். மேலும், ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம் வரை உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு, உயர்கல்வி பயில்வதற்கு ஏற்படும் நிதிச் சுமையை குறைப்பதற்கான நோக்கத்தில் ரூ.10 லட்சம் வரையிலான கடனுக்கு 3சதவீத வட்டி மானியம் வழங்கப்படுகிறது. மேலும், ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் மாணவர்களுக்கு வட்டி மானியம் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதில், அரசு நிறுவனங்களைச் சேர்ந்த மற்றும் தொழில்நுட்ப அல்லது தொழில்முறைப் படிப்புகளைத் தேர்ந்தெடுக்கும் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024-25 முதல் 2030-31 காலகட்டத்தில் 7 லட்சம் புதிய மாணவர்கள் இந்த வட்டி மானியத்தின் பலனைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆண்டுக்கு ரூ.4.5 லட்சம் வரை சம்பாதிக்கும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு முழு வட்டி மானியம் வழங்கும் தற்போதைய திட்டங்களின் அடிப்படையில் இது கட்டமைக்கப்பட்டுள்ளது. பிரதமர் வித்யாலக்ஷ்மி திட்டத்தின் மூலமாக தரமான உயர்கல்வி மாணவர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்வதற்கான முயற்சிகளை வலுப்படுத்த அரசு முயற்சி எடுத்து வருகிறது.

விண்ணப்பிக்கும் முறை :

பிஎம்-வித்யாலக்ஷ்மி’ என்ற ஒருங்கிணைந்த போர்ட்டலில் மாணவர்கள் கல்விக் கடனுக்கும் வட்டி மானியத்திற்கும் விண்ணப்பிக்க முடியும். அனைத்து வங்கிகளும் பயன்படுத்தக்கூடிய எளிமையான விண்ணப்ப செயல்முறை மூலம், ஈ-வவுச்சர் மற்றும் சென்ட்ரல் பேங்க் டிஜிட்டல் கரன்சி (CBDC) வாலட்கள் மூலம் வட்டி மானியம் செலுத்தப்படும்.

நாட்டில் உள்ள தரமான உயர் கல்வி நிறுவனங்களுக்கு இந்த திட்டம் பொருந்தும். 860 தகுதி வாய்ந்த உயர்கல்வி (கியூஎச்இஐ) நிறுவனங்களில் சேரும் 22 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறுவார்கள். இந்திய இளைஞர்களுக்கு தரமான உயர்கல்வி கிடைப்பதை இந்த திட்டம் உறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top