சுரேஷ் கோபி சினிமாவில் நடிக்கப்போவதாக கூறியுளளதற்கு பிரதமர் மோடி எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் சுற்றுலா, பெட்ரோலியம், இயற்கை எரிவாயு துறைகளில் அதிக கவனம் செலுத்த பிரதமர் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபியை சினிமாவில் நடிக்க வேண்டாம் என்று பிரதமர் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கேரளாவிலிருந்து வெற்றிபெற்ற ஒரே பாஜக எம்.பி.யான சுரேஷ் கோபிக்கு சுற்றுலா மற்றும் பெட்ரோலியத்துறைக்கான மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
தற்போது மத்திய இணை அமைச்சராக உள்ள சுரேஷ் கோபி மலையாள நடிகரும் ஆவார். அவர் சினிமாவில் மீண்டும் நடிக்கப்போவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தார். நடிகனான நான் சினிமாவில் நடிக்காமல் என்னால் இருக்க முடியாது என்று கூறியதுடன் எனது அமைச்சர் பணிக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடாமல் கேரவன் வாகனத்தில் அதிகாரிகளை அமர்த்தி பணிகளை கவனிக்க ஏற்பாடு செய்யப்போவதாகவும் சுரேஷ் கோபி கூறியிருந்தார்.
இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பிரதமர் மோடி, சுற்றுலா, பெட்ரோலியம், இயற்கை எரிவாயு துறைகளில் அதிக கவனம் செலுத்த அறிவுறுத்தியதாக தெரிய வந்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் வெளியாகவேண்டிய சுரேஷ் கோபியின் ‘ஒட்டக்கொம்பன்’ படம் பிரதமர் அலுவலக தலையீடு காரணமாக இன்னும் வெளியாகாமல் இருப்பதாக கூறுகிறார்கள்.
இதற்கிடையே அவர் மேலும் இரண்டு படங்களில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டுள்ளதாகவும், அந்த இரண்டு படங்களுக்கும் இன்னும் ஒப்பந்தம் மட்டும் கையெழுத்தாகாமல் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் அறிவுறுத்தல் இருப்பதால் குழப்பம் அடைந்துள்ள சுரேஷ் கோபி அமைச்சர் பதவியை தொடர்வதா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.