Close
நவம்பர் 18, 2024 12:31 காலை

மணிப்பூர் மாநிலத்தில் கடத்திச் செல்லப்பட்ட 6 பேர் சடலமாக மீட்பு..! பதற்றம் நீடிப்பு..!

மணிப்பூர் கலவரம்-கோப்பு படம்

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் முதல் மெய்தி மற்றும் குக்கி சமூகத்தினரிடையே மோதல் உருவானது. இந்த கலவரத்தில் இரு தரப்பிலும் இருந்து 200க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். மேலும், ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த கலவரத்தைத்தொடர்ந்து அங்கு இணைய சேவைகள் முற்றிலும் தடை செய்யப்பட்டிருந்தது. பின்னர் அமைதி நிலை திரும்பியதும் இணைய சேவைகள் தொடங்கின. அந்த சமயத்தில் உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கும் சம்பவம் அரங்கேறியது. இரண்டு பெண்களை நிர்வாணமாக்கி ரோடுகளில் ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்டு வன்கொடுமை செய்யப்பட்ட வீடியோ வெளியாகியது.
அந்த வீடியோ ஒன்றே அந்த மாநிலத்தின் கோர முகத்தை பிற மாநிலங்களுக்கு மட்டுமல்ல இந்த உலகத்துக்கே காட்டியது.

பிரேன் சிங் தலைமையிலான பாஜ .ஆட்சி நடந்து வரும் மணிப்பூரில், மெய்தி மற்றும் குக்கி ஆகிய சமூகங்களுக்கிடையே உருவான கலவரம்,ஒரு ஆண்டு முடிந்த பின்னரும் இன்னும் நீடித்து வருகிறது. பல்வேறு தரப்பினரும் மத்திய அரசு தலையிட்டு பிரச்சனையை தீர்க்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

மணிப்பூர் கலவரத்துக்குப் பின்னர் மெல்ல மெல்ல மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி இருந்தனர். ஆனாலும், ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்களும், தாக்குதல் சம்பவங்களும் தொடர்ந்தன.

மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் கடந்த செப். 7ம் தேதி மீண்டும் ஒரு வன்முறைச் சம்பவம் ஏற்பட்டது.அப்போது 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதன் காரணமாக மீண்டும் அங்கு பதற்றம் தொற்றிக்கொண்டது.

இதேபோல் கடந்த 11ம் தேதி, அதே ஜிரிபாம் மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் முகாமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பின்னர், பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதலில் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்பட்ட 11 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அந்த சம்பவத்துக்கு அடுத்தநாள் குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட ஆறு பேரை தீவிரவாதிகள் என்று கூறப்படும் அவர்கள் கடத்திச் சென்றார்கள். அதனால் மணிப்பூரில் மீண்டும் பதற்றச் சூழல் உருவானது..

இந்த நிலையில்தான் தீவிரவாதிகள் என்று கூறப்படும் அவர்களால் கடத்திச் செல்லப்பட்ட 6 பேர் பிணமாக மீட்கப்பட்டுள்ளனர். அந்த ஆறு பேரும் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு ஆற்றில் வீசப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டனர்.

இந்தத் தகவல் மக்களிடையே பரவி மணிப்பூர் மீண்டும் போராட்டக் களமாக மாறத் தொடங்கியுள்ளது. இறந்தவர்களுக்கு ஆதரவாக பாஜக எம்எல்ஏ வீட்டை முற்றுகையிடத் தொடங்கியுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top