இந்தியாவில் சூரிய மின் விநியோகம் தொடர்பான ஒப்பந்தம் பெறுவதற்கு, சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் லஞ்சம் தர, பிரபல தொழிலதிபர் கௌதம் அதானி முன்வந்ததாகக் கூறி அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
நியூயார்க் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கில், கெளதம் அதானி மற்றும் அவரது உறவினர் சாகர் அதானி உட்பட 7 பேர் மீது ஊழல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதில், இந்தியாவில் சூரிய மின்விநியோகம் செய்வதற்கான ஒப்பந்தம் பெறுவதற்கு, இந்திய அதிகாரிகளுக்கு சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் லஞ்சம் தர அதானி முன்வந்ததாகக் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், அடுத்த 20 ஆண்டுகளுக்கு, அதானி குழுமத்திற்கு ஆண்டுதோறும் சுமார் 16 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் லாபம் கிடைக்கும் என புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முறைகேடாகப் பெறப்பட்ட இந்த ஒப்பந்தத்தை முன்வைத்து, கடன் மற்றும் பத்திரங்கள் மூலம், அமெரிக்க நிறுவனங்களிடம் இருந்து சுமார் 25 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை அதானி குழுமம் திரட்டியுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 2020ம் ஆண்டு முதல், இந்திய அதிகாரிகளை அதானி தனிப்பட்ட முறையில் சந்தித்து, லஞ்சம் தருவது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. கூடவே இந்திய அதிகாரிகளுடன் சாகர் அதானி தொலைபேசியில் பேசியதற்கான ஆதாரங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து, கௌதம் அதானி உள்ளிட்ட 7 பேருக்கு அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இந்த நிலையில், இது தொடர்பாக அதானி குழுமம் தரப்பில் எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை.
அமெரிக்க நிதியைப் பயன்படுத்த மாட்டோம்:
அமெரிக்காவில் இருந்து திரட்டப்பட்ட நிதியைப் பயன்படுத்த மாட்டோம் என்று இந்திய பங்குசந்தைகளுக்கு அதானி குழுமம் கடிதம் அனுப்பியுள்ளது.
அமெரிக்க நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளைச் சுட்டிக்காட்டியுள்ள அதானி குழுமம், அந்நாட்டில் இருந்து திரட்டப்பட்ட நிதியை தங்கள் நிறுவனம் பயன்படுத்தாது என்று விளக்கம் அளித்துள்ளது.