மஹாராஷ்டிர மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு மூன்று முறை தேர்தலில் மூன்றாம் முறை வென்ற கேப்டன் என்று அனைவராலும் அழைக்கப்படும் தமிழ்ச்செல்வனுக்கு அமைச்சராகும் வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது..
மஹாராஷ்டிரா மாநிலத்தில் சயான் கோலிவாடா தொகுதியில் போட்டியிட்ட கேப்டன் தமிழ்செல்வன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை விட 7,895 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவர் ஏற்கனவே இந்த தொகுதியில் 2014ம் ஆண்டு மற்றும் 2019ம் ஆண்டு நடந்த தேர்தல்களிலும் பா.ஜ., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.
தற்போது அவர் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளார்.மூன்றாம் முறை வென்ற தமிழ்ச்செல்வனுக்கு அமைச்சராகும் வாய்ப்பு இருப்பதாக கட்சி வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.தமிழரான, இவர் 3 முறை எம்.எல்.ஏ., ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளது அங்குள்ள தமிழ் மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த தமிழ்செல்வன் யார்?
புதுக்கோட்டை மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட தமிழ்செல்வன் மஹாராஷ்டிராவில் வார்டு கவுன்சிலராக இருந்து படிப்படியாக எம்.எல்.ஏ.ஆனவர். இவர் 1980ம் ஆண்டு காலத்தில் துபாய்க்கு வேலைக்கு அழைத்து செல்வதாக கூறி அழைத்து வரப்பட்டு மும்பை ரயில் நிலையத்தில் இறக்கி விட்டுவிட்டனர். அவ்வாறு ஏமாற்றப்பட்டவர் ஊருக்கு வரமுடியாமல் அங்கு கூலித் தொழிலாளியாக வேலை செய்துள்ளார்.
தமிழ்ச்செல்வனது தாய் மற்றும் தம்பி ஆகியோர் இன்னும் புதுக்கோட்டையில் தான் வசித்து வருகின்றனர். அவ்வப்போது அவர் ஊருக்கு வந்து செல்வது வழக்கம்.
2008ம் ஆண்டு மும்பை விமான நிலையத்தில் பயங்கரவாத தாக்குதல் நடந்த சமயத்தில் களத்தில் இறங்கியா தமிழ்செல்வன் 36 பேரின் உயிரை காப்பாற்றி ஹீரோவானார்.
அவர் தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவி பகுதியை உள்ளடக்கிய சியோன்- கோலிவாடா தொகுதியில் இருந்து 3 முறை எம்.எல்.ஏ.,வாக மஹாராஷ்டிரா சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டார்.
தமிழ்ச்செல்வனை மக்கள் பெயர் சொல்லி அழைக்கமாட்டார்கள். அவர் கேப்டன் என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். கேப்டன் என்றால்தான் பலருக்கு அவரைத் தெரியும் என்கிறார்கள் தாராவிப்பகுதி மக்கள்.