Close
நவம்பர் 25, 2024 4:56 காலை

மஹாராஷ்ட்ராவில் பா.ஜ.க., வெற்றியின் பின்னணி அதன் பழைய ஃபார்முலா..?

மஹாராஷ்டிராவில் தேர்தல் வெற்றியைக் கொண்டாடும் பாஜக நிர்வாகிகள்.

மஹாராஷ்ட்ராவில் பாஜக கூட்டணிக்கு பாராளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்வி மிக மோசமானது.

அதற்கு பல காரணங்கள் சொன்னாலும், வழக்கம் போல இஸ்லாமிய, சிறுபான்மை ஓட்டுக்களை ஒன்று சேர்த்ததும், இந்துக்களை ஜாதி ரீதியாக பிரித்ததும், கடைசி நேரத்தில் இட ஒதுக்கீடு பற்றிய வதந்திகளை காங்கிரஸ் கட்சியை நம்பாமல் வெளி நாட்டு சக்திகள் நேரடியாக களமிறங்கி செய்ததும் முக்கிய காரணம்.

நம் ஊர் போல பணம் தண்ணீராக கொட்டியது என்றெல்லாம் சொன்னால் அது பொய். ஆனால் அந்த பணம் ஆங்காங்கே இருந்த லோக்கல் தலைவர்களுக்கு கொடுத்து வாக்குகளை வளர்த்தார்கள். அதற்கு அவர்கள் பயன்படுத்தியது பாஜகவிற்கு எதிரான கடுமையான வெறுப்புணர்வு தான்.

அதே சமயம், பாஜகவில் மோடியின் பெயரைச் சொல்லிக் கொண்டு ஒரு கூட்டம், RSS இயக்கத்தை ஒதுக்கினார்கள். அவர்கள் ஒதுங்கியது மட்டுமல்ல எதிர்வினைகூட ஆற்றினார்கள். அதற்கு சிவசேனா எதிர் அணியில் இருக்க அந்த ஓட்டு பிரியாமல் எதிராக மாறியது. அதாவது ஒரு ஓட்டு விழாமல் போனால்.ஒரு ஓட்டுத்தான் இழப்பு, ஆனால் அது எதிரணிக்கு போனால் இழப்பு இரண்டு ஓட்டுக்கள் என்ற அரித்மெடிக் மிக முக்கியம்.

பாஜகவின் ஓவர் கான்ஃபிடென்ஸும் உடம்புக்கு ஆகவில்லை. அது பாஜக எதிர்பாராதது அல்ல, அதன் உள்ளாட்சி தேர்தலை நடத்தினால் அது பெரிய தோல்வியை சந்திக்கும் என்று அதை மீண்டும், மீண்டும் ஒத்திவைத்தது. ஆளும் கட்சிக்குள் ஒரு இணக்கம் இல்லை.

எனவே பாஜகவின் தோல்விக்கு இந்திய அளவில் முக்கிய காரணம் RSS உறவில் ஏற்பட்ட தொய்வு மிக முக்கிய காரணம். தேர்தலுக்கு பின்னால் தோல்வியை ஆராய்ந்த போது, ஒரு பாராளுமன்றத்தில் இருக்கும் ஆறு சட்டமன்றங்களில் 4 அல்லது 5 இடங்களில் பாஜக முன்னணியில் இருக்க, மீதி இருக்கும் குறிப்பிட்ட தொகுதியில் பெரிய முன்னெடுப்பை காங்கிரஸ் சார்பில் வெளி நாட்டு சக்திகள் செய்தது.

அதனால் அப்போதே ஸ்ரீராம் சொன்னது. எதிர்கட்சிகள் நினைப்பது போல பாஜகவை வீழ்த்தி விடலாம் என்பது சரியல்ல என்பது தான். பாராளுமன்ற தேர்தலுக்கு பின்பு மோடி, பகவத்தின் சந்திப்பில் இந்த விஷயங்கள் வெளிப்படையாக பேசப்பட்டு, பிரச்சினைகள சரி செய்யப்பட்டது.

அதன் விளைவு, RSS தொண்டர்கள் நூற்றுக்கணக்கான மீட்டிங் போட்டனர். வீடு வீடாக சென்று ஓட்டு சேகரிப்பு என்று ஒரு பக்கம் நடக்க, அது மீண்டும் இந்து என்ற உணர்வையும் கையில் எடுக்க தயங்கவில்லை.

காங்கிரஸுக்கு உதவிய சக்திகள் மாநில அளவில் இறங்கவில்லை. தவிர ராகுலின் தவறான வியூக அரசியல், மீதியை பார்த்துக் கொண்டது. இந்த தேர்தலில் மோடியின் பிரச்சாரம் குறைந்த போதும், 6608 கூட்டங்கள் போட்டு மிகப்பெரிய முன்னெடுப்பை ஒரு பக்கம் RSS செய்ய, மறுபக்கம் தொண்டர்கள் வீடு வீடாக ஓட்டு சேகரித்தார்கள்.

அதே சமயம் மஹாவில் ஒரு கட்சி வெற்றி பெரும் இடத்தில், அதன் கூட்டணி கட்சி நின்றால் கூட வெற்றி பெற முடியாதாம். அதன் அந்த இடங்களை அறிந்து, RSS இன் ஆலோசனையின் பேரில் ஜெயிக்கும் கட்சிக்கு மற்ற கட்சிகள் விட்டுக் கொடுத்தார்கள்.

அதே ஃபார்முலா காங்கிரஸுக்கும் பொருந்தும். ஆனால் அங்கே இட ஒதுக்கீட்டில் ஏற்பட்ட முரண்பாட்டால், அது எதிர்வினையானது. காலகாலமாக வெற்றி பெற்ற இடங்கள் அதன் மூலம் காங்கிரஸ் கைவிட்டு போனது.

அதே சமயம், பாஜக இலவசம் என்பது மிக மோசமான எதிரி, அதை எதிர்கட்சிகளின் ஏகபோக உரிமையாக விட்டு விடாமல், தனது கொள்கையில் சமரசம் செய்து கொண்டு, தேர்தலுக்கு முன்பே அதை செய்தது. எனவே எல்லாமும் சேர்ந்து காங்கிரஸ் கூட்டணிக்கு மொத்தமாக ஆப்படித்தார்கள்.

இனிமேல் யார் முதல்வர் என்ற பேச்செல்லாம் இல்லை, சென்ற முறை பாஜக விட்டுக் கொடுத்தது. இந்த முறை மற்ற கட்சிகள் விட்டுக்கொடுக்கும். அதற்கேற்ப பாஜகவும் 133+ இடங்களை (11 இடங்கள் மட்டுமே குறைவு, ஆனால் 6 சுயேச்சைகள் இருக்கிறார்கள்) பெற்றதால், அது அப்போதும் கூட்டணி ஆட்சி தான் அமைக்கும்.

இது பெரிய சரிவை காங்கிரஸை விட, தாக்கரேவிற்கும், சரத் பவாருக்கும் கொடுத்துள்ளது.  அதனால் மீள்வது என்பது மட்டுமல்ல, இப்போது தாக்கரே தனது கட்சியை இழக்க வேண்டி வரலாம்.

குறிப்பாக அது தன்னிடம் இருக்கும் எம்பிக்களை இழக்கவும், சரத்பவாரின் கட்சி எம்பிக்களும் பாஜகவுடன் நேரடி அல்லது மறைமுகமாக உதவுவார்கள். அது பாஜகவிற்கு ஏதாவது நெருக்கடிகளை கொடுக்காமல் தடுக்கவல்லது. எனவே இந்த வெற்றிக்கு, வரப்போகும் வெற்றிகளுக்கும் RSS மிக முக்கிய காரணமாக இருக்கும்.

பாஜகவின் யுக்தியால் எல்லா இடத்திலும் வெற்றி பெற்று விட முடியாது. ஆம் அதற்கு மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப் போன்ற மாநிலத்தில் அதனால் தனித்து வெற்றி பெற முடியாத சூழலில், RSS அங்கே வலுவாக இல்லாத சூழலில், அடித்தாடும் கட்டாயம் அதற்கு உண்டு. ஆனால் அது மோடி இருக்கும் வரை நடக்காது என்கிறார்கள், பார்க்கலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top