தேர்தல்களில் நேரடியாகப் பிரசாரம் செய்வதில்லை கௌதம் அதானி.
ஆனால், கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக இந்தியாவில் எங்கு தேர்தல் நடந்தாலும், அங்கு பிரசாரம் அதானியை மையப்படுத்தியே நடக்கிறது. இந்தியாவிலேயே பணக்கார மாநிலமான மகாராஷ்டிராவில் சட்டமன்றத் தேர்தல் தற்போது நடந்து முடிந்திருக்கிறது.
அதானி குஜராத்தைச் சேர்ந்தவர் என்றாலும், அவருக்கு மகாராஷ்டிராவில் ஏராளமான தொழில்கள் இருக்கின்றன. அவர் மகாராஷ்டிராவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முயன்றார் என்ற விஷயம் இப்போது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா தேர்தலில் பரபரப்பான இருமுனைப் போட்டி நடந்தது. ஒரு பக்கம் காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன.
இன்னொரு பக்கம் பா.ஜ.க-வுடன் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆகியவை கூட்டணி அமைத்தன. இந்த மோதலால் மகாராஷ்டிரா அரசியல் களம் எப்போதும் இல்லாத அளவுக்குச் சூடுபிடித்தது.
ஒவ்வொரு கட்சியும் எதிர்த்தரப்பினர் மீது ஏராளமான அவதூறுகளைச் சுமத்தின. இந்நிலையில், அஜித் பவார் போட்ட ‘சேம் சைடு கோல்’ ஒன்று, பா.ஜ.க கூட்டணியை தர்மசங்கடத்துக்கு ஆளாக்கியது.
கடந்த 2019 தேர்தலில் பா.ஜ.க-வும் சிவசேனாவும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. ஆட்சி அமைக்கும் அளவுக்கு அந்தக் கூட்டணிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைத்தது. காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி இரண்டாம் இடம் பிடித்தது.
ஆனால், தேர்தல் முடிவுகள் வந்தபிறகு ‘‘முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு எங்களுக்கு முதல்வர் பதவி தருவதாக தேர்தலுக்கு முன்பு அமித்ஷா உறுதியளித்தார். அதன்படி முதல்வர் பதவி வேண்டும்’’ என்று முரண்டு பிடித்தார் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே. அதனால் பா.ஜ.க கூட்டணி ஆட்சியமைக்க முடியாத சூழல் ஏற்பட்டது.
ஆனால், அதன்பின் ஒரு திடீர்த் திருப்பம் நிகழ்ந்தது. ஓர் அதிகாலை நேரத்தில் அவசரமாக பா.ஜ.க-வைச் சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகப் பதவியேற்க, தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார் துணை முதல்வராகப் பதவியேற்றார். காங்கிரஸ் கூட்டணியில் இருந்த இவர்கள் எப்படி இங்கு வந்தார்கள் என்று பரபரப்பு ஏற்பட, ‘‘எனக்குத் தெரியாமல் அஜித் பவார் அங்கு போய்விட்டார்.
பா.ஜ.க-வுடன் நாங்கள் கூட்டணி அமைக்கவில்லை” என்று மறுத்தார் சரத்பவார். அவர் கட்சி எம்.எல்.ஏ-க்கள் பலரும் அஜித் பவாரைக் கைகழுவிவிட்டு சரத் பவார் பக்கம் வந்துவிட, 80 மணி நேரத்தில் அந்த ஆட்சி கவிழ்ந்தது.
மீண்டும் சரத் பவாரிடமே வந்து அடைக்கலமானார் அஜித் பவார். அதைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்களை சம்மதிக்கவைத்து, சிவசேனா- காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை உருவாக்கினார் சரத் பவார். கூட்டணி முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்றார்.
சில ஆண்டுகளில் சிவசேனாவையும், சரத்பவார் கட்சியையும் உடைத்து அங்கு பா.ஜ.க ஆட்சிக்கு வந்தது தனிக்கதை. ஆனால், அந்த 2019-ம் ஆண்டு 80 மணி நேர ஆட்சி எப்படி அமைந்தது என்று எழுந்த சர்ச்சை தான் இப்போது அதானியைச் சுற்றி வருகிறது. அதுபற்றி வீடியோ பேட்டி ஒன்றில் அஜித் பவார் பேசியிருந்தார்.
‘‘ஆட்சி அமைப்பது தொடர்பாக ஐந்து முறை கூடிப்பேசினோம். டெல்லியில் அதானி வீட்டில் தான் கூட்டம் நடந்தது. அதானியும் இருந்தார், அமித்ஷாவும் இருந்தார். சரத் பவார், தேவேந்திர பட்னாவிஸ், நான் என்று எல்லோருமே இருந்தோம். கடைசியில் பழி மட்டும் என் தலையில் விழுந்தது” என்று அஜித் பவார் பேசியிருந்தார்.
இதைத் தொடர்ந்து அரசியல் சூறாவளி கிளம்பியது. ‘‘பா.ஜ.க-வின் சார்பில் அரசியல் பேரம் பேச அதானி யார்? கூட்டணிகளை உருவாக்கும் பொறுப்பை அவருக்கு யார் கொடுத்தது?
மகாராஷ்டிராவில் பா.ஜ.க கூட்டணி ஆட்சியைக் கொண்டுவர அவர் துடித்தது ஏன்?’’ என்று உத்தவ் தாக்கரே கட்சி கேட்டது. ‘‘ஆட்சி அமைப்பது தொடர்பான கூட்டத்தில் அதானிக்கு என்ன வேலை? அவருக்கு இதில் ஏன் இவ்வளவு ஆர்வம்?” என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியது.
இப்படி அதானியைப் பற்றி எல்லோரும் கேள்விகள் எழுப்பியதால், அஜித் பவாருக்குக் கடும் நெருக்கடி வந்திருக்கும் போல! மறுநாளே, ‘‘நான் சொன்னது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது. அந்தக் கூட்டத்தில் அதானி இல்லை” என்று மறுத்தார். அதன்பின் ‘இங்கே நல்ல மீன்கள் விற்கப்படும்’ காமெடி போல ஒவ்வொருவரும் ஒன்றைச் சொன்னார்கள்.
சரத் பவார் முதலில் வந்தார். ‘‘அதானி வீட்டில் இரவு விருந்துடன் கூட்டம் நடந்தது உண்மை. ஆனால், கூட்டத்தில் அதானி இல்லை. மற்ற எல்லோரும் பங்கேற்றோம். என் கட்சியினர் சிலர் எனக்கு நெருக்கடி கொடுத்தார்கள்.
பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்தால், அவர்கள்மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் வாங்கப்படும் என்றார்கள். அதனால் போனேன். ஆனால், பா.ஜ.க சொன்ன சொல்லைக் காப்பாற்றாது என்று தெரிந்ததால் பின்வாங்கிவிட்டேன்’’ என்றார்.
தேவேந்திர பட்னாவிஸ் இதை வேறுவிதமாகச் சொன்னார். ‘‘கூட்டம் நடந்தது உண்மை. ஆனால், அது அதானி வீட்டில் நடக்கவில்லை. அதானியும் பங்கேற்கவில்லை. மற்ற எல்லோரும் கூடிப் பேசினோம். ஆனால், சரத் பவார் பிறகு எங்கள் முதுகில் குத்திவிட்டார்’’ என்றார்.
எது எப்படியோ, தேர்தல் நேரத்தில் இந்த சர்ச்சைக்குரிய விஷயம் வெளியாகி பா.ஜ.க-வுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியது. சரத் பவாரை தர்மசங்கடத்துக்கு ஆளாக்க நினைத்து அஜித் பவார் பேசியது, அவர்கள் கூட்டணிக்கே நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
அதானியுடன் பா.ஜ.க-வுக்கு இருக்கும் நெருக்கம் குறித்துத் தேர்தல் பிரசாரத்தில் திரும்பத் திரும்ப ராகுல் காந்தி பேசி வந்தார். குறிப்பாக, உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி ஆட்சியைக் கவிழ்த்து விட்டு ஏக்நாத் ஷிண்டே தலைமையில் புதிய அரசை பா.ஜ.க உருவாக்கியபிறகு, தாராவி மேம்பாட்டுத் திட்ட ஒப்பந்தம் அதானிக்குத் தரப்பட்டது. 20,000 கோடி ரூபாய் திட்டம் இது. இதில் அரசின் தலையீடு இல்லாத அளவுக்குப் பல சலுகைகள் அதானி நிறுவனத்துக்குத் தரப்பட்டுள்ளது.
‘‘மும்பை மாநகரின் மையப்பகுதியில் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த 259 ஹெக்டேர் நிலத்தை அதானிக்குக் கொடுப்பதற்காகத்தான் எங்கள் கூட்டணி அரசு கவிழ்க்கப்பட்டது.
அதானி போன்ற பெரும் பணக்காரர்கள் ஆட்டுவிக்கும் பொம்மையாக மோடி செயல்படுகிறார்” என்று குற்றம் சாட்டுகிறார் ராகுல் காந்தி. உத்தவ் தாக்கரே கட்சியும், ‘‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வோம்” என்று பிரசாரம் செய்து வந்தது.
இப்படி ஒருபக்கம் காங்கிரஸும் உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவும் அதானிக்கு எதிராகப் பொங்கினாலும், சரத் பவார் மட்டும் இதுபோலப் பேசுவதில்லை. ‘‘நான் அதானியை விமர்சனம் செய்ய மாட்டேன்” என வெளிப்படையாகச் சொல்பவர் அவர்.
ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியாகி அதானி குழுமப் பங்கு முதலீடுகள் குறித்து சர்ச்சை எழுந்தபோது, ‘இதுபற்றி நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை வேண்டும்’ என்று எதிர்க்கட்சிகள் பலவும் கோரின. எதிர்க்கட்சி வரிசையில் இந்த விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்த தலைவர், சரத் பவார்.
அதானிக்கு நெருக்கமான நண்பர் பவார். எந்த அளவுக்கு நண்பர் என்றால், சரத் பவாரின் சொந்த ஊரான பாராமதி பகுதியில் அவர்கள் குடும்ப அறக்கட்டளையான வித்யா பிரதிஷ் தான் பல கல்வி நிறுவனங்களை நடத்திவருகிறது. இந்த வளாகத்தில் ஒரு டெக்னாலஜி மையம் அமைக்க சரத் பவார் நன்கொடை கேட்டதும் 25 கோடி ரூபாயைக் கொடுத்தார் அதானி.
இந்தியா கூட்டணியில் உள்ள மற்ற எல்லாக் கட்சிகளும் அதானியை விமர்சனம் செய்தாலும், வருடத்தில் இரண்டு மூன்று முறையாவது அதானியும் பவாரும் சந்தித்து விடுவார்கள். சமீபத்தில் குஜராத்தில் அதானியின் தொழில் வளாகம் ஒன்றை சரத்பவார் திறந்து வைத்திருக்கிறார். ‘‘அதானி கடின உழைப்பாளி. ரொம்ப எளிமையான மனிதர்” என்று அப்போது பவார் புகழ்ந்தார்.
2008-ம் ஆண்டு மும்பை தாஜ் ஹோட்டலை பாகிஸ்தான் தீவிரவாதிகள் முற்றுகையிட்டுத் தாக்கியபோது, அந்த ஹோட்டலுக்குள் சிக்கிக்கொண்ட முக்கியப் பிரமுகர்களில் ஒருவர் அதானி. அப்போது பவார் மத்திய அமைச்சர்.
மகாராஷ்டிராவில் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்றது. அந்த நேரத்தில் அதானி முதலில் போன் செய்தது பவாருக்குத்தான். போலீஸ் படை ஒன்றை அனுப்பி அதானியை முதலில் மீட்கச் செய்தார் பவார்.
தான் வாழ்நாள் முழுவதும் பவாருக்கு நன்றிக்கடன் பட்டிருப்பதாக எப்போதும் சொல்வார் அதானி. அப்போது இறுகிய நட்பு, இப்போதும் தொடர்கிறது. அதானி நிறுவனம் மின் உற்பத்தித் துறையில் இறங்குவதற்குக் காரணமே பவார் தான். மோடியும் பவாரும் அதானி வழியாகவே தகவல்கள் பரிமாறிக்கொள்வதாக டெல்லி வட்டாரத்தில் பேச்சுகள் உண்டு. இப்போது மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகளிலும் அதானி கை ஒங்கியதாக விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன.