Close
டிசம்பர் 5, 2024 2:43 காலை

‘எப்ப வேணுமினாலும் படி; எப்ப வேணுமினாலும் முடி’ : மாணவர்களுக்கு யுஜிசி அசத்தல் சலுகை..!

பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி)

மாணவர்களுக்கு இளங்கலை படிப்பை முடிப்பதற்கு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) ஒரு புதிய வாய்ப்பை வழங்கியுள்ளது. இது வேலை பார்த்துக்கொண்டோ அல்லது குடும்ப சூழலினாலோ படிப்பை எப்போ வேண்டுமானாலும் தொடர்வதற்கு வழிவகை செய்யும்.

அதன்படி மாணவர்கள் விரும்பினால் இளங்கலை பட்டப்படிப்பை முன்கூட்டியோ அல்லது கூடுதல் காலம் எடுத்தோ படித்து முடிக்கும் புதிய கல்வி முறை வரும் கல்வி ஆண்டில் அமல்படுத்தப்படும்” என்று பல்கலைக்கழக மானியக் குழு தலைவர் ஜெகதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக மானியக் குழு கூட்டம் கடந்த நவம்பர் 13ம் தேதி நடந்தது. அந்த கூட்டத்தில், பட்டப்படிப்பு முடிப்பதற்கான காலம் பற்றிய முக்கியமான முடிவு ஒன்று எடுக்கப்பட்டு இருக்கிறது.

இது குறித்து பல்கலைக்கழக மானியக் குழு தலைவர் ஜெகதீஷ்குமார் கூறி இருப்பதாவது :-

மாணவர்கள் அவர்களின் கற்றல் திறன் அடிப்படையில் அவர்களது படிக்கும் காலத்தை குறைத்துக்கொள்ளவோ அல்லது நீட்டித்துக்கொள்ளவோ அவர்கள் முடிவு செய்து கொள்ளலாம்.

மாணவர்கள் அவர்களது இளங்கலை பட்டப்படிப்பை முன்கூட்டியே படித்து முடிக்கும் புதிய முறையும், படிப்பில் பின்தங்கிய மாணவர்கள் பட்டப்படிப்பை முடிக்க கூடுதல் கால அவகாசம் எடுத்துக்கொள்ளவும் புதிய முறையும் கொண்டுவருவதற்கு பல்கலைக்கழக மானியக் குழு கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

முன்கூட்டியே முடித்தல்; கூடுதல் அவகாசம் :

மாணவர்கள் அவர்கள் விரும்பினால் 4 ஆண்டுகள் அல்லது 3 ஆண்டு கால இளங்கலை பட்டப்படிப்பை ஓராண்டு அல்லது 6 மாதங்களுக்கு முன்னரே படித்து முடித்துவிடலாம். தேவைப்பட்டால் 6 மாதங்கள் அல்லது ஓராண்டு கூடுதல் காலமும் எடுத்துக் கொள்ளலாம். இந்த புதிய முறை வரும் கல்வி ஆண்டில் இருந்து அமலுக்கு வரவுள்ளது.

உயர்கல்வி நிறுவனங்கள் மாணவர்களின் கற்றல் திறன்களை மதிப்பிடுவதற்கு குழுக்களை அமைத்துக்கொள்ளும். மாணவர்களின் வேலை வாய்ப்புத் திறனையும், சுயதொழில் ஆர்வத்தையும் மேம்படுத்தும் வகையில் அவர்களுக்கு திறன்சார்ந்த கல்வி அளிக்கப்பட வேண்டும். இவ்வாறு பல்கலைக்கழக மானியக் குழு தலைவர் ஜெகதீஷ்குமார் கூறியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top