Close
ஏப்ரல் 3, 2025 4:01 காலை

இந்தியாவின் சாதனை.. சீனாவுக்கு வந்த சோதனை

இந்தியா தனது அரிஹந்த் வகை நீர்மூழ்கி கப்பலில் இருந்து K4 வகை ஏவுகணையினை வெற்றிகரமாக சோதனை செய்தது. இந்த K4  ஏவுகணை என்பது அணுவிசையால் இயங்கும் நீர்மூழ்கி கப்பலிலிருந்து அணுகுண்டை சுமந்து சென்று 3500 கி.மீ., துாரம் வரை தாக்கக்கூடியது.

ஆனால் இந்தியா ஒரு விஷயத்தை சொல்லியது. அதாவது நாங்களாக எந்த நாட்டையும் முதலில் அணுகுண்டால் தாக்க மாட்டோம் (No first use) என்று சொன்னது. அது சரிதானே என்று நாம் நினைக்கலாம், ஆனால் அதில் பெரிய ஆபத்து அடங்கி உள்ளது. உக்ரைன் அனுபவத்தை வைத்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டாமா?

ஆம், நமது அணு ஆயுதத்தை வைத்திருந்தால் மட்டும் போதாது, அதை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும், யார் தாக்கினாலும் நாம் திருப்பி தாக்க வேண்டும். அப்போது அணு ஆயுதமும், அதை தாக்கும் வசதியும் நம்மிடம் இருக்க வேண்டும்.

ஆனால் நமது அணு ஆயுதங்கள் நிறுத்தி வைத்திருக்கு இடம் ஒன்றும் மிகப்பெரிய ரகசியமில்லை. எங்கெல்லாம் அணு ஆயுதத்தை வீசும் ஏவுகணை, விமானங்கள் உள்ளதோ அங்கே தான் அணு ஆயுதம் இருக்கும் என்பது ஊரறிந்த ரகசியம்.

அப்படி என்றால் அந்த பகுதியை நமது எதிரியானா சீனாவும், பாகிஸ்தானும் ஒரு சேர அதனிடம் இருக்கும் சிறு அணு ஆயுதத்தால் முதலில் தாக்கினாலே அந்த ஏரியா அருகில் இருக்கும் எல்லாம் பஸ்பமாகி விடும் அல்லது அணுக்கதிர் வீச்சால் உயிர் வாழத்தகுதி இல்லாத இடமாகி விடும். அப்போது அங்கே இருக்கும் அணு ஆயுதத்தை எப்படி பயன்படுத்துவது?

அப்படியென்றால் நம்மிடம் அணு ஆயுதம் இருந்தும் பிரயோஜனம் இல்லை. அப்படியெனில் நம் அணு ஆயுதம் இருக்கும் இடத்தை மிக ரகசியமாக வைத்திருக்க வேண்டும். அதுவும் நாம் முதலில் தாக்க மாட்டோம் என்ற கொள்கையுடன் இருக்கும் போது, நாம் அந்த நாட்டை திருப்பி தாக்கும் வலிமை நமக்கு கட்டாயம் இருக்க வேண்டும்.

இன்று உலகில் நிலத்தில் எங்கே கொண்டு மறைத்து வைத்தாலும் கண்டுபிடித்து விடுவார்கள். நம்மிடம் இருக்கும் விமானந்தாங்கி கப்பலாக இருந்தாலும் கண்டுபிடித்து தாக்க முடியும். கண்டுபிடிக்க முடியாதது என்பது ஆழ்கடலில் இருக்கும் நீர்மூழ்கி கப்பல்கள் மட்டுமே. அந்த நீர்மூழ்கி கப்பல்கள் அணு ஆயுதத்தை கொண்டு செலுத்தும் வகையாக  இருக்க வேண்டும்.

அந்த வகை நீர்மூழ்கி கப்பல் தான் இந்த அரிஹாந்த் வகை நீர்மூழ்கி கப்பல். அவை அணு விசையால் இயங்குவதால் அது நீண்டகாலம் நீரில் மூழ்கி இருக்க முடியும். முன்பு இதே சோதனையை நாம் வேறு வகையில் செயற்கையாக ஆழ்கடலில் இருந்து செய்தோம், ஆனால் இப்போது நம்முடைய புதிய அரிஹாந்தில் இருந்தே செய்து விட்டோம். அதுவும் K4 என்ற 3,500 கிமீ சென்று தாக்கக்கூடியது. அதாவது, வங்காள விரிகுடாவில் இருந்து சீனாவின் எந்த பகுதியையும் நம்மால் தாக்க முடியும் என்பதே.

இந்தியா தான் 3,500 கிமீ துாரம் பாயும் என்று சொல்கிறது. ஆனால் சீனாவோ இந்தியாவின் இந்த ஏவுகணை 5000 கிமீ சென்று தாக்கக்கூடியது என்கிறது. ஆனால் சீனாவே 5,000 கிமீ துாரம்  ஏவுகணை என்று சொல்லும் போது, இந்தியா ஏன் அதை மறைக்க வேண்டும்? தேவையற்ற எதிரிகள் வேண்டாம் என்பதால் தான்.

நமது எதிரி சீனாவும், பாகிஸ்தானும் தான். மற்ற சந்தேக வலையில் உள்ள ஓரிரு நாடுகள் இந்தியாவை தாக்கலாம் என்று கனவு கூட காண முடியாது. அந்த காலம் எல்லாம் மலை ஏறிவிட்டது. இந்தியா தனக்கு எதிராக செயல்பட்ட பல நாடுகளை தனக்கு ஆதரவாக மாற்றி விட்டது.

அது மட்டுமல்ல நாம் ஏற்கனவே சோதித்து விட்ட K5 என்பது 5,000 கிமீ சென்று தாக்கக்கூடியது. ஆனால் சீனா அது 8,000 கிமீ செல்லக்கூடியது என்கிறது. நாம் அக்னி 6 வைத்திருக்கிறோம். அது  10,000 கி.மீ., சென்று தாக்கவல்லது. இப்போது சீனாவோ அல்லது அமெரிக்காவோ கூட நம்மை தாக்க முடியாது. ஏனென்றால் நம்மிடம் இருக்கும் அணு ஆயுதமும், அதை மறைத்து வைத்து கொண்டு செலுத்தும் வசதியும் நம்மிடம் இருக்கிறது என்பதால் தான்.

இந்தியாவிடம் 18 நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளன. அதில் ஆறு கப்பல்கள் அணு ஆயுதத்தை கொண்டு செல்லும் திறன் பெற்றவை. அணு ஆயுதத்தை செலுத்தும் திறன் கொண்ட இன்னும் 6 நீர்மூழ்கி கப்பல்கள் 2026 க்குள் நம் கப்பற்படையில் சேர்ந்து விடும். அதில் ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் அணுவிசை நீர்மூழ்கிகப்பல்களும், பிரான்ஸிடம் இருந்து வாங்கும் டீசல் நீர்மூழ்கி கப்பல்களும் அணு ஆயுதத்தை தாங்குவது மட்டுமல்ல, இந்திய பெருங்கடலில் மட்டுமல்ல உலகில் எங்கு வேண்டுமானாலும் நிற்கலாம். ஏன் தென்சீனக்கடலில் கூட இருக்கலாம்.

அப்படியெனில் சீனாவிற்கு அதனிடம் 68 நிர்மூழ்கி கப்பல் இருந்தாலும் அவற்றால் இந்தியாவின் அணு ஆயுத தாக்குதலை தடுக்க, தவிர்க்க முடியாது. அதுவும் மல்டி டிப்பிடு ஒரு ஏவுகணை பல இலக்குகளை தாக்கக்கூடியது என்றால், ஒரு ஏவுகணை ஒரு சீனாவின் தலை நகரத்தையே நரகமாக்கிவிடும் என்றால் சீனா பயப்படாதா?

மேலும் அந்த நீர்மூழ்கி கப்பலை ஒளித்து வைக்கும் துறைமுகம் ஒன்றையும் இந்தியா கட்டி முடிக்கும் நிலையில் இருப்பதால், அதனை கண்டுபிடிப்பது என்பது இன்னும் இயலாத காரியம்.

அது இல்லாமல், இந்தியா அடுத்த ஒவ்வொரு ஆண்டும் தலா இரண்டு நீர்மூழ்கி கப்பல்களை கப்பற்படையில் சேர்க்கப் போகிறது எனும் போது, இன்னும் கூடுதல் பயம் சீனாவிற்கு மட்டுமல்ல, அமெரிக்காவிற்கே வரத்தானே செய்யும். அப்போது அதன் நாடுபிடிக்கும் எண்ணம்?

சமீபத்தில் சீனா நமது எல்லையில் இருந்து பின் வாங்கியதற்கு இதுவும் ஒரு காரணம் என்கிறார்கள். நாம் அவர்களை முதலில் தாக்கப்போவதில்லை என்றாலும் எல்லை மீறினால் பஸ்பமாக்கி விடுவோம் என்ற பயம் இருக்கத் தானே செய்யும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top