பொதுவாக குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு சிறை தண்டனை அனுபவிக்கும் கைதிகள் தங்களது குடும்பத்தினர் உயிரிழப்பு, மகன், மகளின் திருமணத்திற்காகவும், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டாலும் பரோல் கேட்பது வழக்கம்.
அதன்படி, கோர்ட்டுகளும் கைதிகளுக்கு பரோலில் சிறையில் இருந்து வெளியே வருவதற்கு அனுமதி வழங்கும்.இந்த நிலையில், கர்நாடக ஐகோர்ட் விவசாயம் செய்வதற்காக ஆயுள் தண்டனை கைதிக்கு 3 மாதம் பரோல் வழங்கி உள்ளது.
அதாவது ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகா சித்ததேவனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரா (வயது 36). இவருக்கும், ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. அந்த கள்ளத்தொடர்புக்கு இடையூறாக பெண்ணின் கணவர் இருந்துள்ளார்.
இதையடுத்து, அந்த பெண்ணின் கணவரை சந்திரா கொலை செய்திருந்தார். இந்த கொலை வழக்கில் ராமநகர் மாவட்டம் கனகபுரா கூடுதல் செசன்சு கோர்ட்டு, கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 23-ந் தேதி சந்திராவுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறி இருந்தது.
இதையடுத்து, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சந்திரா அடைக்கப்பட்டார். 10 ஆண்டுகளாக அவர் ஆயுள் தண்டனை கைதியாக சிறைவாசம் அனுபவித்து வருகிறார். இதற்கிடையில், கனகபுராவில் தனது தந்தை பெயரில் இருக்கும் நிலத்தில் விவசாயம் செய்யப் போவதாகவும், அதற்காக தனக்கு பரோல் வழங்க வேண்டும் என்று கோரி சந்திரா சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அவர் கடந்த 10 ஆண்டுகளாக சிறையில் இருந்து பரோலில் வெளியே வரவில்லை என்பதையும் மனுவில் சந்திரா குறிப்பிட்டு இருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை ஐகோர்ட் நீதிபதி ஹேமந்த் சந்தனகவுடர் முன்னிலையில் நடைபெற்று வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, சந்திரா கடந்த 10 ஆண்டுகளாக பரோலில் வெளியே வராமல் இருப்பதை கருத்தில் கொண்டும், தந்தைக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்ய வேண்டும் என்று நினைப்பதாலும், அவருக்கு 90 நாட்கள் பரோல் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த 90 நாட்களில் விவசாய பணிகளை மட்டுமே சந்திரா மேற்கொள்ள வேண்டும் என்றும், வேறு எந்த விதமான சட்டவிரோத செயல்களிலும், குற்றங்களிலும் ஈடுபடக்கூடாது என்றும் நீதிபதி ஹேமந்த் சந்தனகவுடர் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.