Close
ஏப்ரல் 4, 2025 3:03 மணி

ரூ.1 சம்பளம் வாங்கியவர் இன்று பலநுாறு கோடிக்கு அதிபதி..!

புரபஷனல் கொரியர் நிறுவனத்தை தோற்றுவித்தவர்களில் ஒருவரான அகமது மீரான்.

திருநெல்வேலி மாவட்டம், களக்காடில் எளிமையான குடும்பத்தில் பிறந்தவர் அகமது மீரான். 19-வது வயதில் 1975ம் ஆண்டில், இளநிலை பட்டப்படிப்பு படித்துக் கொண்டு இருந்த போது தொலைபேசித் துறையில் ஆபரேட்டர் வேலைக்கு விண்ணப்பம் செய்தார். 180 ரூபாய் மாதச் சம்பளத்துடன் வேலை கிடைத்தது.

வெற்றி மீதுள்ள ஆசையின் விளைவாக, சரியான பாதையை நோக்கிப் பயணித்தார். வேலையை விட்டு விலகினார். ஒரு டிராவல் ஏஜென்சி தொடங்கினார். பின்னர் புரபசனல் கொரியர்ஸ் என்ற நிறுவனத்தை 7 பேருடன் இணைந்து 1987-ம் ஆண்டு தொடங்கினார்.

இது குறித்து அகமதுமீரான் கூறியதாவது: “கூடுதல் தொழில் வாய்ப்புகள் குறித்து தேடத் தொடங்கினேன். என் நண்பர்களிடம்  சொல்லி வைத்தேன். இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஒரு நண்பர், கொச்சியில் இருந்து செயல்படும் கொரியர் நிறுவனமான கோஸ்ட் கொரியர் என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

அந்த கொரியர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், சென்னையில் ஒரு ஏஜென்ட் நியமிக்க வேண்டும் என்று நினைத்திருந்தார். “சென்னையில் அவர்களுக்கு ஏற்கனவே சில வாடிக்கையாளர்கள் இருந்தனர். இந்தத் தொழில் வாய்ப்பை நான் ஏற்றுக் கொண்டேன். இதற்காக இரண்டு ஊழியர்களை நியமித்தேன். மொத்த வருவாயில் இருந்து 15 சதவிகிதம் கமிஷனாகப் பெற்றேன்.

1985-ம் ஆண்டுக்கு மத்தியில் இந்த வாய்ப்பை ஏற்றுக் கொண்டபோது, எங்கள் மாத வருவாய் 1,500 ரூபாயாக இருந்தது. ஆனால், ஒன்றரை வருடத்துக்குள் 10 மடங்கு அதிகமாக 15 ஆயிரம் ரூபாய் வரை வருவாய் உயர்ந்தது. வணிக நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டேன்.

கொரியர் சேவைக்கு இந்தியாவில் அது தொடக்க நிலைதான். வாடிக்கையாளர்களிடம் பேசி ஆர்டர்கள் பெற்றேன் என்கிறார்.

இந்தியன் வங்கி, நபார்டு வங்கி உள்ளிட்ட பெரிய வாடிக்கையாளர்களுக்கு அவரே நேரில் சென்று கொரியர் டெலிவரி செய்தார். அவருடைய வாடிக்கையாளர்களிடம் மும்பை போன்ற நகரங்களில் இருந்து முந்தைய நாள் கொடுக்கப்பட்ட ஆவணங்களை மறுநாள் டெலிவரி செய்ய முடிவதைச் சுட்டிக் காட்டுவார்.

“நான் பஜாஜ் எம்.80  பைக் வைத்திருந்தேன். ஆரம்ப காலகட்டங்களில் அதில்தான் தினமும் கொரியர் பாக்கெட்களை கொடுக்கவும், வாங்கவும் விமானநிலையம் செல்வேன்,” என்று நினைவு கூறுகிறார் மீரான். இப்போது அவர் ஒரு சொகுசான மெர்சிடிஸ் பென்ஸ் கார் வைத்திருக்கிறார். அதில்தான் அவர் பயணிக்கிறார்.

1986-ம் ஆண்டில், கொச்சியில் சில மாற்றங்கள் நடந்தன. எனவே, பல்வேறு நகரங்களில் இருந்த கோஸ்ட் கொரியர் நிறுவன ஏஜென்ட்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். நிறுவனத்துடன் தொடர்பில் இருந்த மீரான் உட்பட 8  பேர் அதில் இருந்து விலகினர். அவர்கள் ஒன்றிணைந்து கோஸ்ட் இன்டர்நேஷனல் என்ற ஒரு புதிய கொரியர் நிறுவனத்தைத் தொடங்கினர்.

பின்னர், சட்டப்பிரச்னை காரணமாக 1987-ம் ஆண்டு  புரபஷனல் கொரியர்ஸ் என்று நிறுவனத்தின் பெயர் மாற்றப்பட்டது. ஒவ்வொரு நகரத்திலும் முகவர்கள் நியமிக்கப்பட்டனர். தொழில் விரிவாக்கம் பெற்றது.

தற்போது மீரான், அதன் சென்னை உரிமையாளராக தானே  வணிகத்தைக் கவனித்துக் கொள்கின்றார். அவரிடம்  2,000 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். 90 கிளைகளுடன், இப்போதைய ஆண்டு வரவு செலவு 100 கோடி ரூபாயாக இருக்கின்றது.

“ஒவ்வொரு மாதமும், ஊழியர்களுக்கு 2 கோடி ரூபாய் சம்பளம் தருகின்றோம். எண்ணற்ற வேலை வாய்ப்புகளை உருவாக்கி உள்ளேன் என்ற வகையில் இது எனக்கு அளவு கடந்த மகிழ்ச்சி மனநிறைவு அளிக்கிறது.

இன்றைக்கு 9000ம் கிளைகள் இருக்கின்றன. தமிழகத்தில் புரபஷனல் என்ற பிராண்ட்டின் கீழ் 8,000 பேர் பணியாற்றுகின்றனர். மீரான்,  கல்வித்துறையிலும் கால் பதித்திருக்கிறார்.  சென்னையில் யுனிட்டி பப்ளிக் ஸ்கூல் என்ற பெயரில் சி.பி.எஸ்.இ பள்ளியைத் தொடங்கினார். இப்போது அந்தப் பள்ளியில் 2,400 பேர் படிக்கின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top