‘லோக்கல் சர்க்கிள்’ எனும் சமூக வலைதள அமைப்பு அரசு சார்ந்த பணிகள் பெறுவதற்கு தொழில் நிறுவனங்கள் லஞ்சம் கொடுப்பது தொடர்பாக நாடு முழுவதும் 159 மாவட்டங்களில் ஒரு ஆய்வினை நடத்தியது.
அந்த ஆய்வின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :-
அரசு நிறுவனங்களுக்கு பொருட்கள் சப்ளை செய்ய தகுதி பெறுவது, ஒப்பந்தம் கோருவது, ஒப்பந்தம் பெறுவது, பணி செய்து முடித்து அதற்கான தொகையை பெறுவது போன்ற எல்லா நடைமுறைகளுக்கும் கடந்த ஓராண்டில் லஞ்சம் கொடுத்துள்ளதாக 68 சதவீத நிறுவனங்கள் ஒப்புக்கொண்டுள்ளன. கொடுக்கப்பட்ட மொத்த லஞ்சப்பணத்தில் 75 சதவீதம் சட்டம், உணவு, சுகாதாரம், மருந்து போன்ற துறைகளுக்கு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஜிஎஸ்டி.எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, மாசு கட்டுப்பாட்டு வாரியம், மாநகராட்சிகள், மின்சாரம் போன்ற துறைகளுக்கு லஞ்சம் கொடுத்திருப்பதாக பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இந்த தகவல்களை பெறுவதற்கு நாடு முழுதும், 18,000 நிறுவனங்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 54 சதவீதம் பேர் லஞ்சம் தந்தே ஆகவேண்டும் என்று கட்டாயப்படுத்தி வாங்கியதாக தெரிவித்துள்ளனர். அதே வேளையில் 46 சதவீதம் பேர் காரியம் விரைவாக நடப்பதற்காக தாமாகவே லஞ்சம் கொடுப்பதாகக் கூறி இருக்கின்றனர்.
அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே வேலை சுலபமாகவும் வேகமாகவும் நடக்கிறது. இது ஏழுதப்படாத சட்டம் போலவே உள்ளது. அதனால் லஞ்சம் வாங்குவது ஒரு நடைமுறையாகவே மாறிவிட்டத என்று பெரும்பாலான நிறுவனங்கள் கூறியுள்ளன.
லஞ்சம் கொடுக்காமல் அரசின் சேவைகளை பெற்றுள்ளதாக 16 சதவீதம் பேர் கூறி இருக்கின்றனர். அதே போல 19 சதவீதம் பேர் லஞ்சம் கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்றும் கூறியுள்ளனர்.
அரசுத் துறைகளுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு ‘இ – மார்க்கெட்’ எனப்படும் ஆன்லைன் செயல்பாட்டு நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை லஞ்சம் பெறுவதைக் குறைத்துள்ளது. ஆனாலும், நிறுவனங்கள் சப்ளை செய்வதற்கான தகுதி பெறுவது, ஒப்பந்தம் பெறுவது, பணிக்கான தொகையை பெறுவது போன்ற நடைமுறைகளில் லஞ்சம் குறையவில்லை என்றும் அறிக்கை கூறுகிறது.
டிஜிட்டல் மயமாக்கல், ‘சிசிடிவி’ கண்காணிப்பு கேமரா போன்ற நவீன வசதிகள் இருந்தாலும், லஞ்சம் வாங்கும் நடைமுறை மாறவில்லை. யாரும் அறியாமல் கதவுக்குப் பின்னால் லஞ்சம் வாங்குகின்றனர். லஞ்சம் குறையவில்லை என்றாலும், முன்னர் இருந்ததைக்காட்டிலும் கடந்த 12 மாதங்களில் லஞ்சம் கொடுக்கும் காலம் மற்றும் தொகை அளவு குறைந்துள்ளதையும் தொழில் நிறுவனங்கள் ஒப்புக்கொண்டுள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.