Close
டிசம்பர் 12, 2024 2:42 மணி

ராணுவ வீரரின் கடமையை முடித்த சக ராணுவ வீரர்கள்..! ஊரே வாழ்த்தியது..!

திருமணம் செய்துவைத்த ராணுவ வீரர்கள்

உத்தரபிரதேச மாநிலம், மதுரா மாவட்டத்தில் ராணுவ வீரர் குடும்பத்தில் நடந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் பலரையும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.மகளுக்கு திருமண ஏற்பாடுகள் செய்துகொண்டிருந்த நேரத்தில் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் செய்யவேண்டிய கடமையை அவருடன் பணியாற்றிய சக ராணுவ வீரர்கள் நிறைவேற்றி அசத்தி உள்ளனர்.

உத்தரபிரதேசம் மாநிலம் மதுரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுபேதார் தேவேந்திர சிங். அவர் ஒரு ராணுவ வீரர் ஆவார். அவருக்கு வயது 48. அவரது மகள் ஜோதிக்கு திருமணம் செய்ய குடும்பத்தினரால் முடிவு செய்யப்பட்டது. அதனால் ராணுவ வீரர் சுபேதார் தேவேந்திர சிங் விடுமுறை எடுத்துக்கொண்டு மகள் திருமண ஏற்பாட்டுக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

கார் விபத்தில் உயிரிழந்த சுபேதார்

மகள் கல்யாணத்திற்கான ஏற்பாடுகளை சந்தோஷத்துடன் செய்துகொண்டிருந்தார். எந்த கண் பட்டதோ தெரியவில்லை. திருமணத்திற்கு 2 நாட்கள் முன்னதாக சுபேதார் தனது உறவினர் ஒருவருடன் மாண்டிற்கு காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவர்கள் சென்ற கார் விபத்தில் சிக்கியதில் இரண்டுபேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த தகவல் குடும்பத்தினரை பெரும் சோகத்தில் தள்ளியது. குடும்பமே அதிர்ச்சியில் உறைந்து நின்றது.

மணப்பெண் ஜோதி தனது தந்தை இறந்த சோகத்தில் திருமணம் வேண்டாம் என்று மறுப்பு தெரிவித்து விட்டார். இந்த சம்பவத்தை அறிந்த சுபேதார் தேவேந்திர சிங்குடன் பணியாற்றிய ராணுவ வீரர்கள் உடனே மதுராவிற்கு வந்து சேர்ந்தனர்.

உன் அப்பாவின் கனவு உனது திருமணம் நல்ல படியாக நடக்க வேண்டும் என்பது தான். அவரது ஆசையை நீ நிறைவேற்றவேண்டும் என்று அவர்களோடு மகளின் திருமணம் குறித்து சுபேதார் பகிர்ந்துகொண்டவைகளை எடுத்துக் கூறி ஜோதியை மனம் மாறச் செய்தனர். இதையடுத்து, திருமணம் ஏற்பாடுகளை சிறப்பாக செய்தனர்.

ராணுவ வீரர்கள் முன்னின்று திருமணத்தை சிறப்பாக நடத்தி முடித்தனர். விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் செய்யவேண்டிய கடமையை சக ராணுவ வீரர்கள் நிறைவேற்றி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மணமகளின் மாமா நரேந்திர சிங் என்பவர் கூறும்போது :-

சுபேதார் தேவேந்திர சிங் உயிரிழந்ததும் எங்கள் குடும்பமே சிதைந்து போனது. ஆனால் ராணுவ வீரர்கள் இந்த இக்கட்டான சூழ்நிலையில் உள்ளே நுழைந்து திருமணத்தை நடத்தி வைத்தது மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமண விழாவை சிறப்பாக நடத்தியதுடன், மணப்பெண் ஜோதியின் மனதை மாற்றி திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்கவைத்ததே அவர்களின் மிகப்பெரிய சாதனை. அந்த பெண்ணுக்கு மனஉறுதியைக் கொடுத்தனர்.

திருமணத்துக்குப் பின்னர் உறவினர்களும், கிராம மக்களும் மணமக்களை வாழ்த்தினார்கள். இவ்வாறு சுபேதார் உறவினர் கூறினார். மணமகன் சௌரப் சிங்கின் தந்தை சத்யவீர், உயிரிழந்த ராணுவ வீரர் சுபேதார் தேவேந்திர சிங்குடன் இணைந்து ஒன்றாக ராணுவத்தில் பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊர் மக்களும் ஜோதியின் உறவினர்களும் ராணுவ வீரர்களை நன்றியோடு வாழ்த்தினார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top