இந்தியாவின் ஒருங்கிணைந்த பணப் பரிமாற்ற முறை (யுபிஐ) மூலம் நிகழாண்டு ஜனவரி முதல் நவம்பர் வரை 15,547 கோடி பரிவர்த்தனைகள் நடைபெற்றிருப்பதாக மத்திய நிதியமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
இதன்மூலம் ரூ. 223 லட்சம் கோடியிலான பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.
எண்ம(டிஜிட்டல்) பணப் பரிவர்த்தனையில் புரட்சியாக இந்த சாதனை பார்க்கப்படுவதாக நிதியமைச்சகத்தின் எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் எண்ம பணப் பரிவர்த்தனை முறையை எளிமையாக்க நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள யுபிஐ வலைதளத்தில் 623 வங்கிகள் இணைந்துள்ளன. ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், பூடான், நேபாளம், இலங்கை, பிரான்ஸ், மொரீஷியஸ் ஆகிய 7 நாடுகளிலும் யுபிஐ பரிவர்த்தனை ஏற்றுக்கொள்ளப்பட்டு அங்கும் இதன்மூலம் பணப் பரிவர்த்தனைகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.