Close
டிசம்பர் 18, 2024 9:18 காலை

பணிக்கே வராத டாக்டர்கள் : 36 டாக்டர்களை கேரள அரசு அதிரடி டிஸ்மிஸ்..!

கேரளா அரசு, மருத்துவ பணிக்கு முன்னறிவிப்பு இல்லாமல் நீண்ட விடுப்பில் இருந்த மருத்துவர்களை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது.

கேரள மாநிலத்தில் எந்தவித அதிகாரபூர்வமான முன் அறிவிப்பு இல்லாமல் பணிக்கு வராமல் இருந்த 36 அரசு டாக்டர்களை பணிநீக்கம் செய்து கேரளா அரசு உத்தரவிட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் மருத்துவத்துறை இயக்குநர் அலுவலக பதிவுகளின்படி 600க்கும் மேற்பட்ட டாக்டர்கள் முறையான முன் அனுமதி இல்லாமல் பணிக்கு வராமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களில் பலர் பற்றிய தகவல்கள் 2008ம் ஆண்டு முதல் பணி பதிவேட்டில் இல்லை. இதையடுத்து, சம்பந்தப்பட்ட அந்த டாக்டர்களுக்கு உரிய விளக்கம் அளிக்கவேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மருத்துவக்கல்வித் துறையின் தரவுகள்படி, 337 பேர் மருத்துவக் கல்லூரிகளில் பணிக்கு வராமல் இருந்துள்ளனர். இவர்களில் டாக்டர்கள், மருத்துவ ஊழியர்கள் உள்ளிட்டோரும் அடக்கம். அவர்கள் அனைவருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அவர்களில் 291 பேர் உரிய விளக்கம் அளித்துவிட்டதாக தெரியவந்துள்ளது.

இந்தநிலையில், எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் அதிகாரப்பூர்வமாக மருத்துவத்துறைக்கு அறிவிக்காமல் தொடர் விடுமுறை எடுத்து பணிக்கு வராமல் இருந்த 36 அரசு டாக்டர்கள் அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 33 பேரை மருத்துவ சேவைகள் துறை இயக்குநர் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். 3 பேர் மருத்துவக்கல்வி இயக்குநரால் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

விளக்கம் கேட்டு அனுப்பப்பட்ட நோட்டீசுக்கு எவ்வித பதிலும் தராமல் இருந்த 17 அரசு டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. தொடர்ந்து விளக்கத்தை சமர்ப்பிக்காமல் இருப்பதால் சம்பந்தப்பட்ட டாக்டர்கள் தனியார் துறையில் வேலை செய்யலாம் அல்லது வெளிநாடு சென்றிருக்கலாம் என்று மருத்துவக் கல்வித்துறை அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top