Close
டிசம்பர் 24, 2024 4:53 மணி

அங்கீகாரம் இல்லாமல் கடன் வழங்கும் நிறுவனத்துக்கு 10 ஆண்டு சிறை, ரூ.1கோடி அபராதம்..!

இந்திய ரிசர்வ் வங்கி - கோப்பு படம்

அங்கீகாரமில்லாமல் செயல்படும் கடன் வழங்கும் நிறுவனங்கள் தனி நபர்களுக்கு கடன் வழங்கினால் 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கும் வகையிலான மசோதா அறிமுகப்படுத்துவதற்கும் கடன் நடவடிக்கைகளை தடை செய்வது குறித்தும் பொதுமக்களிடம் கருத்து கேட்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நாடு முழுதும் உரிய அங்கீகாரம் பெறாமல் செயல்படும் கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள் தனி நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய பணிக் குழு ஒன்றை இந்திய ரிசர்வ் வங்கி நியமித்தது.

அந்த குழு தாக்கல் செய்த அறிக்கையில், உரிய அங்கீகாரமில்லாமல் கடன் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களுக்கு அதிகபட்சமாக ஏழு ஆண்டு சிறைத் தண்டனையும், 1 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் பரிந்துரை செய்தது.

இந்த நிலையில் கடன் வழங்கும் நிறுவனங்களை முறைப்படுத்தவும், கடன் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தவும் , ‘பியுலா’ எனப்படும் ஒழுங்கற்ற கடன் நடவடிக்கைகளை தடை செய்தல் மசோதாவை பார்லிமென்டில் தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்த மசோதா தொடர்பாக பொதுமக்களின் கருத்துகள் வரவேற்கப்படுவதாக அறிவித்துள்ள மத்திய அரசு, அதை அடுத்த ஆண்டு பிப்ரவரி 13ம் தேதிக்குள் அனுப்பலாம் என்றும் கால அவகாசத்தை வழங்கியுளளது.

அந்த வரைவு மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது:

ரிசர்வ் வங்கி அல்லது ஒழுங்குமுறை அதிகாரிகளால் அங்கீகரிக்கப்படாத தனி நபரோ அல்லது நிறுவனமோ, பொதுமக்களுக்கு கடன் வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை இந்த மசோதா தடை செய்கிறது.

உரிய அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் தனி நபர் அல்லது நிதி நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக ஏழு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும். அதேசமயம், அங்கீகாரம் இல்லாமல் கடன் வழங்குபவர்களுக்கு 2 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும்.

டிஜிட்டல் அல்லது வேறு வழிமுறைகளிலோ பணத்தை கடனாக கொடுத்துவிட்டு, கடன் வாங்குபவர்களை துன்புறுத்தினாலோ அல்லது கடன்களை மீட்க சட்டவிரோத வழிகளை பயன்படுத்தினாலோ, மூன்று முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்படும்.

கடன் வழங்குபவர், கடன் வாங்குபவர் அல்லது அது தொடர்பான சொத்து ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களிலோ அல்லது நமது நாட்டிற்கு வெளியே அமைந்திருந்தாலோ, அது தொடர்பான விசாரணை சிபிஐ அமைப்பிடம் ஒப்படைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top