Close
டிசம்பர் 26, 2024 4:55 மணி

இஸ்ரேலின் பாதையில் செல்கிறதா இந்தியா?

இஸ்ரேலின் பேஜர் தாக்குதல் -கோப்பு படம்

ஒரு நாட்டின் தலைமை எப்படியிருக்கனும்?

கடந்த வருடம் தொடங்கிய போரில் மட்டுமல்ல, இஸ்ரேலின் எல்லா வெற்றிக்கு பின்னாலும் இருப்பது அவர்களின் மொசாத் அமைப்பு.

அந்த பலமான உளவுத்துறையின் பலம் தான்,  அந்த ஆயிரம் தலை கொண்ட ஆதிசேஷனின் பலம். ஆயிரம் கரம் கொண்ட கர்த்தவீரியனின் பலம். இது தான் அவர்களுக்கு சக்திமிக்க காவல்.

இஸ்ரேல் ஒரு வித்தியாசமான நாடு. எல்லா சம்பவங்கள் முடிந்த பின்பு தான் அங்கு மொசாத்தின் செயல்பாட்டை மக்களுக்கு சொல்வார்கள். நடப்பது மற்றும் நடந்து கொண்டிருப்பதை சொல்ல மாட்டார்களே தவிர முன்பு எப்படி ஒரு நடவடிக்கையினை எடுத்தார்கள் என்பதை விலாவாரியாக சொல்வார்கள்.

நாட்டு மக்களுக்கு உண்மையினை சொல்லுதல், இளைய தலைமுறையினை அந்த சாகசங்களில் வளர்த்தல், அப்படியே எதிரிகளுக்கு மனோரீதியான அச்சத்தை கொடுத்தல் என பல விஷயம் இதில் உண்டு. இஸ்ரேலிய மக்களின் பணமும் நன்கொடையும் எப்படி அவர்களை காவல் காக்கின்றது என்பதும் உண்டு.

அப்படியான இஸ்ரேலின் மொசாத் இரு தினங்களுக்கு முன்பு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியது, அதன் தலைவர் டேவிட் பார்னியா பதிலளித்தார். ஆம், மொசாத்தின் தலைவரே இந்த ஒருவருடத்தில் மொசாத் செய்த அத்தனை திட்டங்களையும் வியூகங்களையும் விளக்கினார். அதில் முக்கியமானது ஹெஸ்புல்லா மேல் நடத்தப்பட்ட பேஜர் தாக்குதல்.

அதனை அழகாக விளக்கினார் பார்னியா. “நாங்கள் இந்த திட்டத்தை 10 ஆண்டுக்கு முன்பே தொடங்கினோம், எங்கள் தேர்வு வாக்கி டாக்கியாகத்தான் இருந்தது. ஆனால் ஹெஸ்புல்லா பேஜரின் தகவல் பாதுகாப்பானது என அதனை பல ஆயிரம் வாங்க முடிவெடுத்த தகவல் எங்களுக்கு வந்தது. நாங்கள் பலமான எதிரியினை வளைக்கும் வாய்ப்பாக இதை கருதினோம். இதோ இந்த நபரை மைக்கேல் என அனுப்பினோம். இவரோடு கப்ரியேல் என்பவர் சேர்ந்து கொண்டார். இந்த இரண்டும் புனைபெயர்கள்.

இந்த இருவரும் ஹங்கேரியில் ஒரு தொலைதொடர்பு கருவி தயாரிக்கும் ஆலையினை நிறுவினார்கள். பல தயாரிப்புக்களை செய்தார்கள். யாருக்கும் சந்தேகம் வராதபடி பார்த்துக் கொண்டார்கள். பின் மெல்ல ஹெஸ்புல்லா ஏஜென்டுகளை அணுகினார்கள். இல்லாத ஒரு உலகத்தை நாங்கள் உருவாக்கினோம், இந்த சம்பவம் 1998ல் வெளிவந்த ஹாலிவுட் படத்தின் சாயலில் இருந்தது, அந்த படத்தின் காட்சியினை நிஜமாக்கி காட்டினோம்.

அதில் ஹெஸ்புல்லா வீழ்ந்தது. 15 ஆயிரம் பேஜர்களை செய்து உள்ளே வெடிகுண்டை பொருத்தினோம். அதனை வெடிக்க வைக்க இரு பொத்தான்களை அழுத்தும்படி செய்து முடித்தோம்.

ஆனால் சிக்கல் அந்த பேஜர்கள் அளவில் பெரியதாக இருந்தன. இனி ஹெஸ்புல்லா சந்தேகம் கொள்ளும் என நான் அஞ்சினேன். இது சொதப்பலாகி விடும் என மிக கலங்கினேன். ஆனால் இந்த மைக்கேல் திறமையானவர் அவர் என்னை சமாதானப்படுத்தினார். மிக கவர்ச்சிகரமான தள்ளுபடி விலையில் மகிழ்ந்த ஹெஸ்புல்லா அதனை அள்ளிச் சென்றது.

எங்களின் கவலை அந்த பேஜர் பொது மக்களுக்கோ, பொது ஊழியர்களுக்கோ ஹெஸ்புல்லாவினால் கொடுக்கப்பட கூடாது என்பதில் இருந்தது. அங்கே தான் பெரிய  சவால் இருந்தது. ஹெஸ்புல்லா எங்களை காப்பாற்றியது.

யுத்தம் தொடங்கியதும் நாங்கள் இந்த தாக்குதலை செய்யாமல் விட்டு விடத்தான் நினைத்தோம். காரணம் ஹெஸ்புல்லா நாங்கள் நினைத்தது போல் பலமானது அல்ல. அது பலம் இழந்த இயக்கம் என்பது அப்போது புரிந்தது.

ஆனால் இந்த பேஜர்கள் வேறு யாரிடமாவது சிக்கி அப்பாவிகள் பலியாகி விடக் கூடாது என்ற உணர்வும் இருந்தது. இன்னொன்று மிக நீண்டகாலமாக போக்கு காட்டிய ஹெஸ்புல்லா தலைமையினை இனியும் விடக் கூடாது என மேலிடம் உத்தரவிட்டது.

இதனால் இந்த தாக்குதலை செயல்படுத்தினோம். ஒவ்வொரு பேஜருக்கும் ஒரு செய்தி அனுப்பி இரு பொத்தான்களை அழுத்தி செய்தியினை பெறவும் என நாங்களே அனுப்பினோம். அவர்கள் அப்படி அழுத்தினார்கள் ஒரே நேரத்தில் 3000 பேஜர்கள் வெடித்தன. ஹெஸ்புல்லா அதிர்ந்தது; லெபனானே அதிர்ந்தது.

அவர்கள் அப்படி குழம்பிய நேரம் சில வாக்கி டாக்கிகளை வெடிக்க செய்தோம். ஹெஸ்புல்லா தலைமை மிரண்டது. அவர்கள் டிவி ரேடியோ ஏசி என எதையும் தொட அஞ்சினார்கள். மனதளவில் குழம்பினார்கள்.

இந்த மனவியல் குழப்பத்தில் சிக்கிய ஹெஸ்புல்லா தலைமை தவறு மேல் தவறு செய்தது. ஒரு கட்டத்தில் வசமாக எங்களிடம் சிக்கியது, பின் நடக்க வேண்டியது நடந்தது என்றார்.

இப்படி பேஜர் தாக்குதல் திட்டம் உட்பட இன்னும் பல தாக்குதல்களை ஒன்று விடாமல் விளக்கினார் பார்னியா. கூட்டத்தில் இருந்து கேள்வி கேட்கப்பட்டது. உலக அளவிலான பெரிய ஊடகம் என்பதால் சரியாக கேட்டார்கள். “இது அறம் அல்லவே, இது சரியான வழி இல்லையே, யுத்த நெறிக்கு புறம்பான ஏமாற்று தாக்குதல் அல்லவா?

இதனால் உங்களின் நற்பெயர் உலகில் கெட்டு போகாதா? உங்களை உலகம் பழிக்காதா?” டேவிட் பார்னியா சிரித்தபடி கேட்டார். “நல்ல பெயர் முக்கியமா, மக்களின் பாதுகாப்பு முக்க்கியமா?” “பாதுகாப்புத்தான்? என்றார் ஊடகவியளாளர்.

“பதிலை நீங்களே சொல்லிவிட்டீர்கள். இந்த அறமற்ற போரை நாங்கள் தொடங்கவில்லை. அந்த தர்மத்துக்கும் அடங்காத எங்கும் முறை படுத்த முடியாத கோழைத்தனமான போரை, இரக்கமே தர்மமே இல்லாத போரை அவர்கள் தான் தீவிரவாதத்தோடு தொடங்கினார்கள்.

ஒரே இரவில் திருட்டுத்தனமாக வந்து எம்மக்கள் முதியவர்களை கொன்று , பெண்களை கற்பழித்து கொன்று சிறாறை கொன்று, 250 பேரை பிடித்து சென்றது என்னவழி தர்மம்? அதர்மத்துக்கு எதிரான போரில் அதர்மமே சரியானது. அவர்கள் எந்த வழியில் வந்தாலும் ஏதோ ஒரு வழியில் நாங்கள் முறியடிப்போம். நாகத்தை அடித்து கொல்ல கம்பு வேண்டுமா? கம்பி வேண்டுமா என யோசிப்பதில் அர்த்தமில்லை. ஆம், நற்பெயரெல்லாம் எங்களுக்கு வேண்டாம் நாட்டின் பாதுகாப்பே முக்கியம் என்றார் பார்னியா.

இன்று உலகை அதிரவைத்த பேட்டி இது தான், தலைவன் என்றால் பாதுகாப்பு அமைப்பு என்றால் இப்படி இருக்க வேண்டும். அதுவும் அதிபயங்கர கோஷ்டிகளுடன் மோதும் போது இப்படி ஒரு குரலும் உறுதியும் வேண்டும். தலைவனுக்கு தேவை நல்ல பெயர் அல்ல, நல்ல ஆற்றல், தன் மக்களை எந்த எல்லைக்கும் சென்று காக்கும் ஆற்றல். இந்தியாவிலும் தற்போது இப்படி ஒரு தலைமை அமைந்துள்ளது நாம் வாங்கி வந்த வரம்.

சரி, இப்படியெல்லாம் மொசாத் மேடை போட்டு தங்கள் சாகசத்தை விளக்குகின்றதே, இதனை தீவிரவாதிகள் படித்து இவர்கள் திட்டத்தை பிடித்துவிட மாட்டார்களா?

அவ்வளவுக்கு முட்டாள் அல்ல மொசாத், அவர்கள் திட்டமெல்லாம் முடிந்த பின்பு தான் விக்கெட் விழுந்த பின்பு தான் தெரியுமே அன்றி அதற்கு முன் அணுவும் கசியாது. அப்படியே மாற்று திட்டமும் எப்போதும் உண்டு. இதை பார்க்கும் போது , 1973ல் அவர்கள் தளபதி மோசே தயான் கொடுத்த பேட்டி தான் நினைவுக்கு வரும்.

அப்போது சுமார் 7 நாட்டு ராணுவத்தினர் எட்டு திக்கிலும் சூழ்ந்தனர். இந்த ராணுவத்தை விரட்டி அடித்து இஸ்ரேல் பெரும் வெற்றி பெற்றிருந்த நேரம், அவர்களின் ஆச்சரியமான தளபதி மோசே தயான் இப்படி நாங்கள் எப்படி வென்றோம் என போர் வியூகத்தை பகிரங்கமாக சொல்லி கொண்டிருந்தார். ஒரு நிருபர் கேட்டார் “இப்படி மிக முக்கியமான வியூகத்தை ராணுவ ரகசியத்தை வெளியில் சொல்கின்றீர்களே? , அச்சமாக இல்லையா??”

அவர் சிரித்து சொன்னார் “இந்த வியூகம் உங்களுக்கு புரிந்த அளவு அவர்களுக்கு புரியும் என நினைகின்றீர்கள், சரி புரிந்தாலும் என்ன கிழித்து விடுவார்கள்?, விட்டு விடுவோமா?” என்றார். இஸ்ரேல் என்றால் இஸ்ரேல் தான். இப்போது இஸ்ரேலின் பாதையில் தான் இந்தியாவும் பயணிக்கிறது என்பதை மறந்து விடக்கூடாது.  இஸ்ரேல் இந்தியாவின் நெருங்கிய நண்பன் என்பதையும் உலக நாடுகள் மறக்கவில்லை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top