Close
ஜனவரி 8, 2025 6:19 மணி

தமிழகத்திலும் வெளிநாட்டினர் ஊடுருவல்..!

பங்காளதேசத்துக் காரர்கள் -கோப்பு படம்

டெல்லியில் சட்டசபை தேர்தல் நடைபெறுவதையொட்டி, வெளிநாட்டினர் தங்கியிருக்கின்றனரா என்ற சோதனை சில தினங்களாக நடந்து வருகிறது.

இதில், வங்கதேசத்தைச் சேர்ந்த 132 பேர் சட்டவிரோதமாக தங்கியிருப்பது கண்டறியப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர். இது தவிர பதுங்கியிருந்தவர்களில் கானா, உகாண்டா, நைஜீரியா, உஸ்பெகிஸ்தான் போன்ற பல நாட்டவர்களும் அடங்குவர்.

வங்கதேசத்தில் உள்நாட்டு கலவரம் ஏற்பட்டு ஆட்சிமாற்றம் நடந்ததில் இருந்தே, அந்நாட்டைச் சேர்ந்தவர்கள் இந்தியாவிற்குள் ஊடுருவும் நிகழ்வுகள் நடந்து வருகின்றன.

கடந்த 5 மாதங்களில் அசாமில் 1000 பேர், திரிபுராவில் 1000 பேர் ஊடுருவியிருப்பது கண்டறியப்பட்டு அவர்கள் வங்கதேசத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். வங்கதேசத்தை ஒட்டிய அசாம், திரிபுரா, மேற்கு வங்கம் ஆகிய எல்லையோர மாநிலங்களில் ஊடுருவல் அதிகரித்துள்ளது.

வங்கதேசத்தில் சமீபத்தில் கலவரம் ஏற்பட்டதால், அந்நாட்டின் பிரதான தொழில்களில் ஒன்றான ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதில் வேலையிழந்த பல தொழிலாளர்கள் இந்தியாவிற்குள் வேலை தேடி ஊடுருவ முயல்கின்றனர்.

இந்த விவகாரம் வங்கதேசத்தை ஒட்டியுள்ள இந்திய மாநிலங்களோடு முடிந்து விடவில்லை. ஜவுளி உற்பத்தியில் வங்கதேசத்திற்கு போட்டியாக திகழும் தமிழகத்தின் திருப்பூர் மாநகரமும் ஊடுருவல்காரர்களின் இலக்காக உள்ளது.

சமீபத்தில் கோவை, திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கி வேலை பார்த்த வங்கதேசத்தவர் பிடிபட்டனர். அவர்களிடம் இந்தியர் என்பதற்கான அடையாளமாக போலி ஆதார் அட்டைகள் இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது. 100-க்கும் மேற்பட்டோருக்கு போலி ஆதார் அட்டைகளை ஏற்பாடு செய்து கொடுத்த ஏஜென்ட் ஒருவரும் திருப்பூரில் பிடிபட்டுள்ளார்.

அவர் கடந்த 13 ஆண்டுகளாக இந்தியாவின் பல பகுதிகளில் வசித்திருப்பதும், மேற்குவங்கத்தில் சட்டவிரோத அமைப்பு ஒன்றுடன் தொடர்புடையவராக இருந்து, அசாம் காவல் துறையால் தேடப்படும் குற்றவாளியாக இருந்ததும் அதிர்ச்சிகரமான தகவல்களாக உள்ளன. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top