நமது நாட்டில் சுத்தமான காற்று இருக்கும் நகரங்களின் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த நகரங்களும் இடம் பிடித்துள்ளன.
கடந்த சில ஆண்டுகளாகவே டெல்லி போன்ற வடமாநிலங்களில் உள்ள மாநிலங்களின் காற்றின் தரம் மிக மோசமாக மாசடைந்து வந்தது. இந்த மாசுவைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
பனிமூட்டம் சூழ்ந்து காணப்படும் டெல்லியில், காற்று மாசுபாடும் கவலைக்குரிய விஷயமாக மாறி உள்ளது. வட மாநிலங்களில் பெரும்பாலான நகரங்கள் காற்று மாசுபாட்டில் கவலைக்குரிய தரக்குறியீட்டையே பெற்று வருகின்றன.
அதே வேளையில், நாடு முழுவதும் அதிகம் பாதித்த மற்றும் தரமான காற்று உள்ள நகரங்களின் பட்டியல் கடந்த வாரத்தில் வெளியானது.
அதில் தரமான காற்று உள்ள தமிழக நகரமாக திருநெல்வேலி விளங்குகிறது. நாடு முழுவதும் இருந்து வெளியான டாப் 10 பட்டியலில் நெல்லைக்கு முதலிடம் என்பது குறிப்பிடத்தக்கது. 5வது இடத்தில் தஞ்சை உள்ளது. அந்த பட்டியல் வரிசையில் 1. நெல்லை, 2. நஹர்லாகன் (அருணாசல பிரதேசம்), 3. மடிக்கேரி (கர்நாடகா), 4. விஜயபுரா (கர்நாடகா), 5. தஞ்சை (தமிழகம்), 6. கோப்பல் (கர்நாடகா), 7. வாரணாசி (உத்தரபிரதேசம்), 8. ஹூப்ளி (கர்நாடகா), 9. கண்ணூர் (கேரளா),10. சால் (சத்தீஸ்கர்) ஆகிய நகரங்கள் இடம் பிடித்துள்ளன.
அதேபோல, காற்று மாசுபாடு அதிகம் உள்ள நகரங்களின் பட்டியலில் டெல்லி முதலிடத்தில் உள்ளது. 1. டெல்லி 2. காஷியாபாத் (உத்தரபிரதேசம்), 3. பைரனிஹாட் (மேகாலயா), 4. சண்டிகர் (பஞ்சாப்), 5. ஹபூர் (உத்தரபிரதேசம்), 6. தனபாத்(ஜார்க்கண்ட்),7. பாடி (ஹிமாச்சல பிரதேசம்), 8. கிரேட்டர் நொய்டா (உ.பி.,) 9. குஞ்சேமுரா (மஹாராஷ்டிரா), 10. நொய்டா (உ.பி.,) ஆகிய நகரங்கள் இடம்பிடித்துள்ளன.
காற்றின் குறியீடுகளின் அடிப்படையில் ஏற்படும் விளைவுகள் :
0 – 50 – குறைவான தாக்கம்
51 – 100 – நோய் எதிர்ப்புதிறன் குறைவாக உள்ளவர்களுக்கு மூச்சு விடுவதில் சற்று சிரமம் இருக்கும்
101 – 200- ஆஸ்துமா, இதயநோய், நுரையீரல் தொடர்பான நோய் உள்ளவர்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருக்கும்
201 – 300 – நீண்டநேரம் வெளியில் இருப்பவர்களுக்கு சுவாச கோளாறுகள் ஏற்படும்
301 – 400 – சுவாச நோய்கள் ஏற்படக் கூடும்
401 – 500 – ஆரோக்கியமானவர்களை பாதிப்பது மட்டுமன்றி ஏற்கனவே நோயுடன் இருப்பவர்களை தீவிரமாக பாதிக்கும்.
மோசமான காற்றின் தரத்தில் தமிழகம் இடம் பெறவில்லை என்பது பெருத்த நிம்மதியே.