புதிய வருமான வரி சட்டம் எளிமைப்படுத்தப்பட்டதாக இருக்கும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
புதிய வருமான வரி மசோதா 600 பக்கங்கள், 23 அத்தியாயங்கள், 16 அட்டவணைகள் மற்றும் 536 உட்பிரிவுகள் ஆகியவற்றை கொண்டுள்ளது. மதிப்பீட்டு ஆண்டு என்பது வரி ஆண்டு எனவும், முந்தைய ஆண்டு என்பது நிதி ஆண்டு என்றும் மாற்றப்பட்டுள்ளது. வரி ஆண்டு என்பது ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து தொடங்கும் 12 மாதங்களை குறிப்பதாகும். அதன்படி இது, நிதியாண்டின் கட்டமைப்போடு சீரமைப்பு செய்யப்பட்டுள்ளது.
தற்போது 2024-25 நிதியாண்டில் சம்பாதித்த வருமானம் அடுத்த நிதியாண்டில் மதிப்பிடப்படுகிறது. இந்த புதிய வரிமுறையில் 2025-26 மதிப்பீட்டு ஆண்டாக இருக்கும். மேலும், மத்திய நேரடி வரிகள் வாரியம், வரி நிர்வாக விதிகளை நிறுவவும், இணக்கமான நடவடிக்கைகளை செயல்படுத்தவும், டிஜிட்டல் கண்காணிப்பு அமைப்புகளை அடிக்கடி சட்ட மாற்றங்கள் தேவையின்றி செயல்படுத்தவும் இப்புதிய மசோதா அனுமதிக்கும் என தெரிகிறது.