தமிழகத்தில் கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தால் துறைமுகங்கள் முடங்கியது.
நீண்ட காலமாக உயர்த்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ள வாடகை உயர்வு ஒப்பந்ததை உடனடியாக செயல்படுத்தக் கோரி அனைத்து கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு திங்கள்கிழமை தொடங்கிய காலவரையற்ற வேலைநிறுத்தம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் மூன்றாவது நாளாக தொடர்கிறது. இதனையடுத்து சென்னை எண்ணூர் காட்டுப்பள்ளி ஆகிய துறைமுகங்களில் ஏற்றுமதி, இறக்குமதி பணிகள் அடியோடு ஸ்தம்பித்துள்ளது.
தமிழகம், கர்நாடகா, ஆந்திரபிரதேசம், தெலுங்கானா மாநிலங்களின் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்தில் சென்னை, எண்ணூர் காமராஜர், காட்டுப்பள்ளி அதானி ஆகிய துறைமுகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஏற்றுமதி, இறக்குமதி சரக்குகளைக் கையாள்வதற்காக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 40-க்கும் மேற்பட்ட சரக்குப் பெட்டக நிலையங்கள், கிடங்குகள் உள்ளன. சரக்குப் பெட்டக நிலையங்களுக்கும், துறைமுகங்களுக்கும் இடையே சரக்குப் பெட்டகங்களை எடுத்துச் செல்லும் பணியில் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கண்டெய்னர் லாரிகள் ஈடுபட்டுள்ளன.
இதற்கான வாடகை ஒப்பந்தம் கடந்த 2014-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. இது தவிர சரக்குப் பெட்டக நிலையங்கலுக்கு தொடர்பில்லாத கண்டெய்னர்கள் சுங்கத்துறை முகமை நிறுவனங்கள் மூலமாக எடுத்துச் செல்லப்படுகின்றன.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்பட வேண்டிய வாடகை ஒப்பந்தம் கடந்த 6 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளதாகக் கூறி அனைத்து கண்டெய்னர் லாரி உரிமையாளர்களும் திங்கள்கிழமை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
80 சதவீதம் உயர்வு வேண்டும்: இது குறித்து தமிழ்நாடு டாரஸ் கண்டெய்னர் லாரிகள் டிரான்ஸ்போர்ட் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜி.கரிகாலன் கூறியது,
கடந்த 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு பலமுறை கோரிக்கை விடுத்தும் வாடகையை உயர்த்தி புதிதாக ஒப்பந்தம் மேற்கொள்ள பலமுறை வேண்டுகோள் விடுத்தும் சரக்குப் பெட்டக நிலையங்களின் கூட்டமைப்பு கவனத்தில் கொள்ளவில்லை.
2014-ஆம் ஆண்டு ஒரு லிட்டர் டீசல் சுமார் ரூ.50 முதல் ரூ.55 வரை இருந்தது. தற்போது சுமார் ரூ.95 க்கு ஒரு லிட்டர் விற்பனை செய்யப்படுகிறது. இடைப்பட்ட காலத்தில் டயர், உதிரிபாகங்கள், பழுதுபார்க்கும் செலவினங்கள், சம்பளம் உள்ளிட்டவை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதன்மூலம் இத்தொழில் மிக வேகமாக நலிவடைந்து வருகிறது.
சரக்குப் பெட்டக நிலையங்கல் தாங்களாகவே சொந்தமாக லாரிகளை வாங்கி இயக்குவதால் லாரி தொழிலையே நம்பியுள்ள கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள், டிரைவர்கள், ஊழியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
குறைவான வருவாயால் வங்கிக் கடனுக்கான தவணைத் தொகைகளைக் கூட கட்டுவதற்கு பலராலும் முடியவில்லை. ஏற்கெனவே வழங்கப்படும் வாடகையிலிருந்து 80 சதவீதமும் சுங்கத்துறை முகமை நிறுவனங்கள் மூலம் இயக்கப்படும் லாரிகளுக்கு 40 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும்.
எங்களது கோரிக்கைகள் குறித்து பலமுறை எடுத்துக் கூறியும் கோரிக்கைகள் ஏற்கப்படாததால் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளோம் என்றார் கரிகாலன்.
முடங்கிய ஏற்றுமதி இறக்குமதி: கண்டெய்னர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தத்ம் செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாக தொடர்ந்ததால் சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி ஆகிய மூன்று துறைமுகங்களிலும் சரக்குப் பெட்டகங்கள் மூலம் நடைபெற்றுவந்த ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் அடியோடு முடங்கியது.
அனைத்து சங்கங்களும் இணைந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் சரக்குப் பெட்டக நிலையங்களும் சொந்த லாரிகளையும் இயக்க முடியவில்லை. இதேபோல் வெளியூர் களிலிருந்து வரும் கண்டெய்னர்களும், லாரிகளும், வெளியூர் செல்ல வேண்டிய கண்டெய்னர்களையும் கூட எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மொத்தத்தில் மூன்று துறைமுகங்களிலுமே ஏற்றுமதி, இறக்குமதி பணிகள் முடங்கியுள்ளன.
தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை:இந்நிலையில் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவது குறித்து அனைத்து தரப்பினரும் பங்கேற்ற கலந்தாலோச னைக் கூட்டம் சென்னைத் துறைமுகத்தில் செவ்வாய்க் கிழமை நடைபெற்றது.
பூக்கடை காவல் துணை ஆணையர் மகேஸ்வரன் முன்னிலையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் சரக்குப் பெட்ட நிலைய நிர்வாகிகள், லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் நிர்வாகிகள், சுங்கத்துறை தரகர்கள் சங்க நிர்வாகிகள், சென்னை, எண்ணூர் கப்பல் போக்குவரத்து முகவர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதில் லாரி உரிமையாளர்களின் வாடகை உயர்வு குறித்து உடனடியாக முடிவெடுக்க முடியாது என பலரும் தெரிவித்ததால் அதிருப்தியடைந்த கண்டெய்னர் லாரி உரிமையாளர் சங்க நிர்வாகிகள் வேலை நிறுத்தம் தொடரும் என அறிவித்துவிட்டு கூட்டத்திலிருந்து வெளியேறினர்.
பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததையடுத்து புதன்கிழமை மூன்றாவது நாளாக லாரிகள் வேலை நிறுத்தம் தொடர்கிறது. வேலைநிறுத்தத்தின் போது அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாதவகையில் துறைமுக நுழைவு வாயில், எண்ணூர் விரைவு சாலை உள்ளிட்ட இடங்களில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.