Close
செப்டம்பர் 20, 2024 5:31 காலை

சென்னையில் பொதுமக்கள்- தனியார் பங்களிப்பில் துறைமுக வளர்ச்சித் திட்டங்கள் குறித்த கருத்தரங்கு

சென்னை

சென்னையில் வியாழக்கிழமை தொடங்கிய இரண்டு நாள் கருத்தரங்கில் உரைநிகழ்த்திய சென்னை, எண்ணூர் துறைமுகங்களின் தலைவர் சுனில்பாலிவால்.

சென்னையில் பொதுமக்கள், தனியார் நிறுவனங்களின் பங்களிப்பில் துறைமுக வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்வது குறித்த இரண்டு நாள் கருத்தரங்கு  வியாழக்கிழமை தொடங்கியது.
இந்தியாவில் சென்னை, மும்பை, நவி மும்பை, கொல்கத்தா, கொச்சி, தூத்துக்குடி, விசாகப்பட்டினம், நியூ மங்களூர், காண்டலா, பாரதீப், மர்முகோவா, எண்ணூர் ஆகிய 12 இடங்களில் மத்திய அரசின் பொதுத்துறை சார்பில் பெருந்துறைமுகங்கள் செயல்பட்டு வருகின்றன.

தொடக்கத்தில் மத்திய அரசின் கப்பல் போக்குவரத்து அமைச்சகம் நிர்வாகத்தின்கீழ் முழுமையான அரசு நிதி உதவியுடன் கூடிய திட்டங்கள் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வந்த நிலையில் பொதுமக்கள், தனியார் பங்களிப்பில் கடந்த 1990- ஆம் ஆண்டு தொடக்கத்தில் முதன் முதலாக நவி மும்பையில் உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுகத்தில் நவசேவா இன்டர்நேஷனல் கன்டெய்னர் டெர்மினல் என்ற சரக்கு பெட்டக முனையம் முதன் முதலாக அமைக்கப்பட்டது.

 இத்திட்டம் வெற்றிகரமாகச் செயல்பட்டதையடுத்து கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அனைத்து துறைமுகங்களிலும் இது போன்ற சரக்குப் பெட்டக முனையங்கள்,  பல்துறை சரக்கு முனையங்கள், வாயு,  திரவ முனையங்கள், கப்பல் தளங்கள் அமைப்பது உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் பொதுமக்கள், தனியார் பங்களிப்புடன் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

2 நாள் கருத்தரங்கம்:  நாட்டின் துறைமுகம் சார்ந்த தொழில் வளர்ச்சியில் பொதுமக்கள் தனியார் பங்களிப்புடன் கூடிய திட்டங்கள் எவ்வாறு செயல்படுகின்றன. இதில் உள்ள சாதக, பாதக அம்சங்கள், சிக்கல்கள், தீர்வுகள் என்ன என்பது குறித்த பல்வேறு கருத்துருக்களை முன்னிறுத்தி இரண்டு நாள் கருத்தரங்கம் சென்னையில் வியாழக்கிழமை தொடங்கியது.

இந்திய தொழில் வணிக கூட்டமைப்பு,  சென்னை எண்ணூர் காமராஜர், தூத்துக்குடி வ உ சி ஆகிய துறைமுகங்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கை தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ். கிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எம் முருகானந்தம் கலந்து கொண்டு தமிழகத்தில் துறைமுகம் சார்ந்த தொழில்வளர்ச்சியில் அரசின் பங்கு குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

இந்நிகழ்ச்சியில் சென்னை,எண்ணூர் காமராஜர் துறைமுகங்களின் தலைவர் சுனில் பாலிவால்,  தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத் தலைவர் டி.கே. ராமச்சந்திரன்,  சென்னை துறைமுக துணைத் தலைவர் பாலாஜி அருண்குமார், காமராஜர் துறைமுக பொது மேலாளர் சஞ்சய் குமார், சர்வதேச துறைமுகங்கள் கூட்டமைப்பின் இந்திய பிரதிநிதி என்னரசு கருனேசன், இந்திய தொழில், வணிக கூட்டமைப்பு கூடுதல் தலைவர் பூபேஷ் நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top