Close
செப்டம்பர் 20, 2024 4:07 காலை

 லியோ டால்ஸ்டாய் நினைவு நாளில்…

டாஸ்டாய்

எழுத்தாளர் டால்ஸ்டாய்

ரஷிய இலக்கியத்தில் மட்டுமல்ல உலக இலக்கியத்திலும் தவிர்க்க முடியாத பெயர் லியோ டால்ஸ்டாய் என்கின்ற பெயர். இந்தக் கருத்தியல் போராளி செப்டம்பர் 9-ஆம் நாள் 1828-ஆம் ஆண்டு ரஷியாவில் பிறந்து 1910 -ஆம் ஆண்டு வரை வாழ்ந்தவர். காலம் கடந்து இன்றைய நாட்களில் கூட அனைவராலும் அவரது எழுத்துகள் வாசிக்கப்பட்டு வருகின்றன.

முன்னிலைப் படுத்தப்படுகின்றன. இராணுவ கொடூரங்களை, ஆதிக்க அவமதிப்புகளைக் கட்டுரைகளாக எழுதிய அவரின் கரங்கள் பின் சிறுகதைகள், நாடகங்கள், சிறுவர்களுக்கான நீதிக்கதைகள் என்று உலக எழுத்துலகைப் புரட்டிப் புதுமை சேர்த்தது.

இவருடைய அன்னா கரீனா, போரும் அமைதியும் போன்ற நாவல்கள் நவீன இலக்கியத்தின் உச்சம் என்று பெரும் புகழைப் பெற்றன. அவை திரைப்படங்களாகி எல்லோர் மனங்களையும் கொள்ளை கொண்டன. டால்ஸ்டாய் இறுதி வரை வன்முறைகளுக்கு எதிராகவே எழுதினார் வாழ்ந்தார்.

தனக்குப் பிடித்த விஷயங்களை செய்தார், பிடித்த புத்தகங் களை அதிகம் படித்தார். குறிப்பாக, ரூஸோ உட்பட உலக தத்துவார்த்த வாதிகளின் படைப்புகளைத் திரும்பத் திரும்ப படித்தார்.  இவற்றிற்கெல்லாம் உச்சமாக ஜெர்மன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளைப் படித்த பிறகு தான் அகிம்சை கோட்பாடு அவருக்குள் வலுப்பட்டது.

அகிம்சை, எளிமை, ஏழைகளுக்கு உதவுதல்,உணவளித்தல் ஆகியவற்றை வலியுறுத்தும் அறச் சிந்தனையை அவருக்குள் ஊடுருவச் செய்தது திருக்குறள்தான். மாமிச பட்சினியாய் மது போதைக்குள் ஊறிக்கிடந்த பிரபுத்துவ பிள்ளையான டால்ஸ்டாய்க்கு குறள் தான் கொல்லாமையையும், வாய்மை யையும் அகிம்சையையும் கற்றுக்கொடுத்தது.

டால்ஸ்டாய் மிகச் சிறந்த இலக்கியவாதி ஆனதற்கு அவரின் தேர்ந்த வாசிப்பும் திருக்குறளுமே ஆதாரம். காந்தி தன் குருவாக டால்ஸ்டாயை மதித்தார். டால்ஸ்டாய் இறந்த பிறகு தென் ஆப்பிரிக்காவில் ‘டால்ஸ்டாய் பண்ணை’யை உருவாக்கினார் காந்தி என்கிறது காந்தியின் வரலாறு. இருவரும் இறுதி வரை சந்தித்துக் கொள்ளாவிட்டா லும் தங்களுக்குள் பரஸ்பர மரியாதையை கொண்டிருந்தனர்.

உள்ளத்தால் பொய்க்காத உண்மைவாதியாக அவரைச் சிந்திக்கச் செய்தது திருக்குறள் தான். அதனால் தான் நெருக்கடியான சூழலில் துவண்டிருக்கும் மனங்களை பண்படுத்தவல்ல பல அற்புதப் படைப்புகளை அவரால் படைக்க முடிந்தது. இவற்றிற்கு எல்லாம் உச்சமாக டால்ஸ்டாய் எழுதிய ‘புத்துயிர்ப்பு’ நாவல் பரிந்துரைக்கப் படுகிறது.

வாழ்நாளில் ஒரே ஒரு புத்தகம் மட்டும்தான் வைத்திருக்க அனுமதி என்றால், எந்தப் புத்தகத்தைத் தேர்ந்தெடுப்பீர்கள்?’ என்ற கேள்விக்குப் பலரும் ‘புத்துயிர்ப்பு’ நாவலை மட்டுமே என்று பதில் சொல்வதாகப் பலரும் பதிவு செய்துள்ளார்கள்.

டால்ஸ்டாயின் குடும்ப வாழ்க்கை மிகுந்த துயர் மிக்கது. இறுதி நாட்களில் குடும்பத்தில் மனஸ்தாபம் ஏற்பட்டு, வீட்டைவிட்டு வெளியேறினார். மகத்தான அந்த எழுத்தாளன் ரயிலில் பயணித்த போது உடல்நலம் பாதிக்கப்பட்டு , “அஸ்டபோவ்” ரயில் நிலையத்தில் அநாதையாக இறந்து போகின்றார்.

இறக்கும் போது அவருக்கு வயது 82. ரஷியாவுக்கு சுற்றுலா செல்பவர்கள் இன்றும்கூட அந்த ரயில் நிலையத்துக் குத் தவறாமல் சென்று எழுத்துலக இமயத்தின் நினைவைத் தாங்கிச் சுமந்து செல்கின்றார்கள்!

…இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top